ஹிந்திக்கவிஞர் ஹரிவன்ஸ் ராய் பச்சன் / பாரதிமணி

ஹிந்திக்கவிஞர் ஹரிவன்ஸ் ராய் பச்சன் எப்போதாவது தொலைபேசியில் தொடர்பு கொள்வார். அவர் தில்லிக்கு வரும்போது அவரது குல்மோஹர் ஞ வீட்டில் சிலசமயம் விருந்துக்கு அழைப்பார். நான் காரில் கொண்டுபோய் விட்டுவிடுவேன். வரும்போது அவர்கள் காரில் வீடு திரும்புவார். ஒருதடவை அமிதாப் பச்சன்வீட்டிலிருந்த நேரம். கவிஞர் இவரிடம் ‘KaNaa, He is my son Amitabh‘என்று அறிமுகப்படுத்தினார். கநாசு அமிதாப் பச்சனிடம், What are you doing? என்று கேட்டார். அதற்கு அமிதாப் பணிவாக ’ I am in the Film industry’ என்று பதிலளித்தார். அதில் திருப்தியடையாத கநாசு கேட்ட அடுத்த கேள்வி: Writing songs like your Father? அமிதாப் இன்னும் பணிவாக No, I am an Actor என்று பதிலளித்தார்.
வீட்டுக்கு வந்ததும், என் மனைவி ஜமுனா, ‘ஏம்ப்பா! உனக்கு அமிதாப் பச்சனைத் தெரியாதா? போனவாரம் தானே இந்தியா டுடேலே படிச்சே! இந்த தஞ்சாவூர் கிருத்திரமம் தானே வேண்டாங்கிறது!’ என்றதற்கு கநாசுவின் பதில் ஒரு நமுட்டுச்சிரிப்பு தான்! பத்திரிகைகளுக்கு பலவருடங்கள் பேட்டியே கொடுக்காத அமிதாப் பச்சன் முதல் தடவையாக பம்பாய் ஃபிலிம்பேர் பத்திரிகைக்கு கொடுத்த நீண்ட நேர்காணலில் இது ஒரு கேள்வி: What was the most embarrassing moment in your life? அதற்கு அமிதாப் அளித்த பதில்: ’என் தந்தையைப்பார்க்க வந்திருந்த தென்னிந்திய எழுத்தாளர் ஒருவர் (பெயர் தெரியவில்லை) கேட்ட கேள்வி தான் என்னை திக்குமுக்காட வைத்தது. அதற்கு ஒரு வாரம் முன்னால் தான் ‘இந்தியா டுடே’ பத்திரிகை என் படத்தை அட்டையில் போட்டு ‘Hundred Crores in One Man Industry’ என்று பல கட்டுரைகளுடன் வெளிவந்த நேரம். ஆனந்த், தீவார் போன்ற வெற்றிப்படங்களுக்குப்பிறகு, என்னை இந்தியாவில் சிறுகுழந்தைக்கும் தெரியும் என்ற இறுமாப்புடன் இருந்த என்னைப்பார்த்து, ‘நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய்?’ என்று ஒரு கிழவர் அப்பிராணியாக கேட்ட கேள்வி என்னை உலுக்கிவிட்டது. விளையாட்டுக்காகக் கேட்கிறாரோவென்று அவரை உற்றுப்பார்த்தேன். இல்லை…..ரொம்ப சீரியஸான முகம். அவர் உண்மையாகவே நடித்திருந்தாரென்றால் அவர் என்னைவிட சிறந்த நடிகர்!’
அவரிடமிருந்த மற்றொரு நல்ல குணம் பிறருக்குத்தரும் மரியாதை. வயதில் மிகச்சிறியவர்களையும் பன்மையிலேயே அழைப்பது. இதை அவர் Political Correctness-க்காக செய்வதில்லை. தில்லியில் அவருக்கு சீடராக இருந்த எழுத்தாளர் ஏ.ஆர். ராஜாமணி இல்லாத நேரங்களிலும், ‘ராஜி, இன்னிக்கு ராஜாமணி வந்தாரா?’ என்று பன்மையில் தான் கேட்பார். இந்த விஷயத்தில் நான் அவருக்கு நேர் எதிர்! மனதுக்குப்பிடித்த புதிய நண்பர்களிடம் ஒரு வாரத்துக்குள் ‘வாடா….போடா’ லெவலுக்கு இறங்கிவிடுவேன். தெற்கே வந்தால் சென்னையில் சி.சு. செல்லப்பாவும், சிதம்பரத்தில் ’மெளனி’யும் என்னிடம் பேசும்போது வாக்கியத்துகொரு தடவை வாய்நிறைய ‘மாப்பிளே….,மாப்பிளே’ யென்று அன்போடு கூப்பிடுவார்கள். எனக்கு சந்தோஷமாக இருக்கும். ஆனால் என் சொந்த மாமனார் என்னை இதுவரை ஒருதடவை கூட ‘மாப்பிளே’ என்று அழைத்ததில்லை. அதில் எனக்கு உண்மையிலேயே வருத்தம் தான்!

  • பாரதி மணி
    ( அமுதசுரபி அக்டோபர் 2009 தீபாவளி மலரில் வெளிவந்தது )

நன்றி: தமிழ் விக்கி

இந்தத் தகவலை முகநூலில் அளித்தவர் : கந்தசாமி .ஆர்