காட்சிகள்/எல்.ரகோத்தமன்

மேய்ச்சல் நிலத்தில்தனியாக
 மேய்ந்து கொண்டிருக்கிறது
ஒரு குதிரை!

இரை தேடி
புதரிடை ஒளிந்து மறைந்து
நகர்ந்து கொண்டிருக்கிறது
ஒரு பாம்பு!

வீட்டின் கூரை மேல்
யார் வைக்கும் சோற்றுக்கோ
யாரையோ அழைத்த வண்ணம்
கரைந்து கொண்டிருக்கிறது
ஒரு காகம்!

தன் கூண்டுக்குள்
எவரையும் பொருட்படுத்தாமல்
தனிமையில் தனக்குத் தானே
பேசிக் கொண்டிருக்கிறது
ஒரு கிளி!

மெல்ல மொட்டவிழ்க்கும்
மலரின் ரகசியத்தை
அறியும் அவாவில்
சுற்றிச் சுற்றி வந்து
ரீங்காமிட்டது ஒரு வண்டு!

கோழியின் குஞ்சுகளை
தன கூர் பார்வை வீச்சில்
கண்டறிய முடியாமல்
விண்ணில் வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது
ஒரு கழுகு!

யாரையும் கேட்காமல்
என் வீட்டு ஜன்னல் கதவுகளை
மூடிச் சென்றது
காற்று!

காணாமல் போனது 
வெளியுலகம்!
மாறிப் போனனது காட்சி!

கூடத்தில்
ஒரு சிறு துண்டு
வெல்லத்தை இழுத்துச்
சென்று கொண்டருந்தத
எறும்பகளின் வரிசை!

வீட்டின் மூலையில்
வீற்றிருந்த வீணையை
சுவரோடு இணைத்து
வலைப் பிண்ணிக் கொண்டிருந்தது
 ஒரு சிலந்தி!

உள்ளுலகின் விரிவில்
ஒரு புதுவுலகின் புதுவெளியில்
மேய்ந்தன ஆயிரம் குதிரைகள்!

                                         *