
புற்று நோய் மருத்துவனையின்
மருத்துவர் அறையின் வெளியே
காத்திருந்தனர்
நோயாளிகளும் அவருடன் வந்தவர்களும்
சிலர் சோகத்தை மறைத்து பழகியவர்
சிலர் அதை புதிதாய் சந்திப்பவர்
ஓர் இளம்பெண்
மடியில் நோயுற்ற கைகுழந்தையை ஏந்தி
விரக்தியில் மூழ்கிய முகத்துடன்
மௌனம் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது அங்கு
திடீரென ஒலித்தது
சிறிய பாதங்களின் லயமற்ற செருப்பொலி
அம்மாவின் கை உதறி ஓடி வந்து
மடிக் குழந்தையின் குட்டி விரல் பற்றி
‘பாப்பா” என்று அறிமுகம் செய்து
’களுக்’ என்ற் சிரித்தது
அக்குழந்தை
சிரிப்பை மறந்திருந்த அந்த தாயின் முகத்தில்
தோன்றியது ஒரு புன்னகை
ஒரு சிறு பிறையாய்
9/5/22
இரவு 11.45 மணி
