/

“என் 16 வயதில் தஞ்சை பெரிய கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட திகைப்பு இன்றளவும் இருக்கிறது! சுரணை உள்ள எல்லா மனிதருக்கும் சரித்திரம் மிக முக்கியமென்று படும். எந்தப் பாரம்பர்யத்திலிருந்து வந்தோம்? யார் முன்னோர்? என் மொழியின் பலம் என்ன? பலவீனம் என்ன என்பதை மிகத் தெளிவாகத் தெரிந்துகொள்கிறபோது, சரித்திரம் மிகப் பெரிதாக விரிவடைகிறது.
அந்தக் கோயிலின் விமானத்தில் ஒரு நூல் பிசகினாலும் கோணலாகியிருக்கும். கல்லில் ஒரு நூலிழைகூட பிசகாமல் செதுக்கியிருக்கிற அந்த நித்ய விநோத பெருந்தச்சனை, குஞ்சரமல்லனை விழுந்து சேவிக்கத் தோன்றுகிறது. அவனைச் சீர்தூக்கி அமைத்த மன்னன் ராஜராஜனைக் கொண்டாடத் தோன்றுகிறது. அதனால் எழுந்ததுதான் உடையார்.
அது ஒரு மன்னனின் கதை அல்ல. ஒரு தேசத்தின் கதை. ஒரு நதி தீரத்தின் நாகரிகம். தமிழ் மக்கள் அதை இருகரம் நீட்டி வாங்கிக்கொண்டார்கள். இவ்வளவு பெரிய விஷயமா? இத்தனை அழகா நம்மிடம் இருக்கிறது என்று வியக்கிறார்கள். ‘உடையார்’ படித்துவிட்டு குடும்பத்துடன் தஞ்சை பெரிய கோயிலைச் சுற்றிவந்த தமிழர்கள் ஏராளம்! ஏராளம்!”
நன்றி: வணக்கம் இலண்டன்
தகவல் : ஆர்.கந்தசாமி
