ஓவியர் ஆதிமூலம்/ஆபிதீன் பக்கங்கள்

68-ல் எனக்குத் திருமணம். அப்போது வேலையிலாமல்தான் இருந்தேன். கண்காட்சிகள் தொடர்ந்து வைத்தபோதும் நிரந்தரமான வருமானம் இல்லை. பொருளாதாரத் தட்டுப்பாடு இருந்தது. அதற்காக என்னுடைய தொழிலை மலிவுப்படுத்திக்கொள்ளவும் தயாரில்லை.

gandhi-adimoolam1003_9_bigமனதில் பொங்கிய வேகத்துடன் காந்தியை விதவிதமான கோட்டோவியங்களாக வரைந்தேன். தனித்துவமான ஆளுமையுடன் கோடுகள்; வலிமை; அதேசமயம் வசீகரம். வீச்சுடன் காந்தி என்னுடைய காந்தியாக ஓவியங்களில் பதிவாகியிருந்தார். காந்தி நூற்றாண்டு விழா சமயம் நூறு காந்தி ஓவியங்களைத் தொகுத்து நடந்த கண்காட்சி ‘எசன்ஸ் ஆஃப் காந்தி’. பக்தவச்சலம் தலைமை. நெடுஞ்செழியன் திறந்து வைத்தார்.

பார்த்தவர்கள் பாராட்டினார்கள். இன்னும் அந்த ஓவியக் கோடுகளுக்கு அதே வலிமை. அதே இளமை. காந்தி மியூஸித்திலிருந்து ஒரு சில ஓவியங்களை வாங்கினார்கள். ஒரு ஓவியத்தின் விலை நூறு ரூபாய் என்று ஓவியத்திற்குக் கீழே மெலிதாக எழுதியிருந்தேன். விலை போகவில்லை. இருபத்தைந்து வருஷங்கள் கழித்து அதே ஓவியம் அறுபதாயிரம் ரூபாய்க்குப் போனது. பத்திரிக்கைகள் கவனிக்க ஆரம்பித்தன. வெளிநாட்டுப் பத்திரிக்கைகள் ஓவிய விமர்சகர்கள்வரை என்னைக் கவனித்தது அங்கீகாரத்திற்கான முதல் முயற்சி.

டெக்ஸ்டைல் துறையில் எனக்குக் கிடைத்த வேலை கைத்தறித் துணிகளுக்காக நிறைய டிசைன்களைப் பண்ணினேன். பப்பிள் ஜெய்கர் என்பவர்தான் இதற்கு என்னைத் தேர்ந்தெடுத்தார். முழுச் சுதந்திரம் கிடைத்தது. அதேசமயம் எங்களுடைய தனித்த ஓவிய முயற்சிகளுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. சிறு இலக்கியப் பத்திரிக்கைகளுக்கு, புத்தக அட்டைகளுக்கு வரைய ஆரம்பித்தேன். ’நடை’ என்கிற பத்திரிக்கையை ந.முத்துசாமி கொண்டுவந்திருந்தபோதும் , ‘கசடதபற’ வெளியானபோதும் இயங்க ஆரம்பித்தேன். பல எழுத்தாளர்களுடம் நெருக்கம் ஏற்பட்டது. ஓவியம் பற்றிய புரிதலும் விமர்சனங்களும் துவங்கின.

89-ல் நானாகவே ஓய்வு பெற்று விட்டேன். வேலையிலிருந்து விடுபட்டதும் ஒரு அலுவலகம் என்னை எந்த அளவில் முடக்கி வைத்திருந்தது என்பதை உணர் முடிந்தது. என்னுடைய நேரம் முழுக்க எனக்கும் என் படைப்புகளுகும் என்கிற சுதந்திர உணர்வை அனுபவித்தேன். வந்ததும் நிறைய ஓவியங்கள். வருஷத்திற்கு அறுபது ஓவியங்களுக்கு மேல் வரைந்தேன். கண்காட்சிகளுக்கும் வெளிநாடுகளுக்கும் போயின எனது ஓவியங்கள்.

79-ல் நேஷனல் லலித் அகாடமி விருது கிடைத்தது. தொடர்ந்து ஓவியத் தேர்வுக் குழுவில் பங்கேற்க வாய்ப்பு. 93-ல் நானே தனி ஆளாக ஜுரியாக இருந்தேன். ஒரு தேசிய விருதுக்காக ஏங்கிய நிலை மாறி நானே ஜூரியாக இருந்து இருபது கலைஞர்களுக்கு விருதுகள் கொடுக்க முடிந்தது.

  • ஆதிமூலம்
  • முகநூலில் தகவல் அளித்தவர் : ஆர்.கந்தசாமி