கங்கோத்ரி தரிசனம் !/விசிறி சங்கர்


O
13/5/2022 வெள்ளிக்கிழமை காலை 530 க்கு உத்தர்காசியில் இருந்து கங்கோத்ரிக்கு காரில் பயணமானோம். ! 100 கி.மீ. தூரம் மலைகள் தாவிச் செல்லும் சவாலான பயணம் இது. இன்றும் சாதுக்கள் நடந்தே கஙகோத்ரி செல்லும் காட்சியைக் கண்டு வியந்தோம்!
O
குறுகிய மலையேறும் சாலை வளைந்து வளைந்து மேலேறும் எதிரே வாகனங்கள் வருகையில் பல நேரங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இங்கே விட்டுக் கொடுத்து வாகனங்களை நகர்த்தி மயிரிழை இடைவெளியில்
வாகனங்கள் எதிரும் புதிருமாக கடந்து செல்கின்றன. கரணம் தப்பினால் மரணம் என்பதை இங்கே உணரலாம்.
O
மே மாதம் சார்தாம் ( கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத், கேதார்நாத் ) ஆலயங்கள் திறக்கப்படுவதால் கடும் கூட்டம் அலை மோதுகிறது. பெரும்பாலும் வட மாநில பக்தர்களே அதிகமாக அதிக எண்ணிக்கையில் வந்து குவிகின்றனர். இதனிடையே நமக்கான தனிமையை நாம்தான் தேடிக் கொள்ள வேண்டும்
O
இந்த முறை அறை வாடகைகள், வாகன கட்டணங்கள் உச்சத்தில்
இருந்தன. செப்டம்பர் அக்டோபர் மாதங்களே தென்னிந்திய பக்தர்களுக்கு உகந்தது. நீண்ட நாள் நண்பர்கள் இமயத்தில் நிறைய இருப்பதால், அவர்கள் உதவியோடு அறைவசதி வாகன வசதி பெற முடிந்தது.
O
45 வது கிலோ மீட்டரில் கங்னானி என்னும் இடத்தில் வென்னீர் ஊற்று ஸ்னானம். ஆண்கள் பெண்கள் என தனி குளியல் தொட்டிகள், உடை மாற்றறைகள் என வசதியாக இருந்தது. இயற்கையாக வரும் கொதிக்கும் வென்னீரையும் கங்கா நீரையும் கலக்கச் செய்து உருவாக்கி இருக்கும் கழுத்தளவு நீர்த் தொட்டிகள். இமாலய குளிருக்கு, பயண களைப்புக்கு இயற்கை தரும் இதமான பரிசு. எதிரேயே IDLI DOSA
சுடச்சுட கிடைக்கும் சாலையோர சிறிய ஓட்டல்கள். காசி முதல் இமயம் வரை, மகாராஷ்டிரா, குஜராத் உட்பட
நமது இட்லி, தோசை சட்னி சாம்பாரோடு தென்னிந்திய பயணிகளை கவரும் வகையில் எல்லா நகரங்களிலும் கிடைக்கிறது எனக்குத் தெரிய பல வட இந்திய நண்பர்கள் குடும்பங்கள் இட்லி தோசை விரும்பி சாப்பிடுகின்றனர்.
நாம் பூரி சப்பாத்தியை ஏற்று எவ்வளவோ காலத்திற்குப் பின், பல வட இந்திய குடும்பங்களின் அன்றாட வாழ்வில் வீடுகளில் இட்லி சாம்பார் இடம் பெறத் துவங்கியுள்ளது.
O
5 மணி நேர பயணத்திற்குப் பின் காலை 1030 மணிக்கு கங்கோத்ரியை அடைந்தோம். வாகனங்கள் தொலைவிலேயே நிறுத்தப்பட்டன. ஒரு கி.மீ. நடந்தே கங்கா மாதா ஆலயம் செல்ல வேண்டி இருந்தது. மிக நீண்ட வரிசையில் சென்றே தரிசிக்க முடிந்தது.

Q
ஆலயம் அருகிலேயே ஆரோகணித்து வரும் கங்கைப் பிரவாகம், காண வந்திருந்த மக்கள் பிரவாகம். கூட்டம் குறைவான படித்துறையை தேடிச் சென்றோம்.
நாசரேத் உற்சவரை கங்கை கரையில் அமரச் செய்து. கங்கையில் குளிக்க கால் வைத்தால் மின்சார அதிர்ச்சியாக இருந்தது. ஓரிரு நிமிடங்கள் கூட கங்கை நீரை அள்ள முடியவிலை, விரல்கள் விரைத்துப் போய் வலியைத் தந்தன. சிரமப்பட்டே கங்காநீர் முகந்தெடுக்க முடிந்தது. சிறிது நேர இடைவெளிவிட்டு கரங்களை வெயிலில் காட்டி உலர வைத்தே பகீரத பிரயத்தனம் செய்தே கங்காநீர் மொண்டு சம்பிரதாய ஸ்நானம் பண்ண முடிந்தது. கங்கை நீரை தலையில் தெளித்து புரோச்சனம் செய்து கொள்வதே போதுமானது.
O
படித்துறையில் பகவான் சிலைக்கு கங்கோத்ரி அபிஷேகம் செய்தோம் கையும் சிலிர்த்தது ! மனதும் சிலிர்த்தது ! கங்கை மைந்தனுக்கு கங்கோத்ரியில் நீராட்டு செய்திட வைத்தது எத்தனை பிறவிகள் செய்த தவப் பயனோ !
O
ஆகாய கங்கையை தன் சடையில் தாங்கும் சிவபெருமான் சிலை அருகே பகவான் உற்சவரை அமரச் செய்து ஆரத்தி காட்டி மகிழ்ந்தோம்
யோகி ராம்சுரத்குமார் நாமம் முழங்க கங்காமாதாவுக்கும் இமயமலைக்கும் ஆரத்தி காட்டி மகிழ்ந்தோம் !
O
பகீரதன் தவம் செய்த பாறை தரிசித்து வணங்கினோம் !
ஆரோகணித்து வரும் கங்கை அழகை புகைப்படங்களில் பதிவு செய்தோம்.
O
இரண்டு முறை வந்தும் பாறைச் சரிவால் (Landslide) கங்கோத்ரி தரிசனம் கிடைக்கப் பெறாத செல்லம்மாளுக்கு இம்முறை கங்கோத்ரி தரிசனம் சாத்தியமானது!
யாவும் யோகியின் கருணை !
O
மாலை உத்தர்காசி வந்தடைந்தோம்
கங்கா ஆரத்தியில் கலந்து கொண்டோம். உத்தர்காசியைச் சேர்ந்த B Ed படிக்கும் இளைஞர் ஆஷிஷ் நண்பராகினார்.
O
கங்கை கரையில் இமயத்தின் மடியில் இன்னொரு நாளை மலர்வித்த குருவருளுக்கு எங்கள் நன்றி !
O
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜயகுரு ராயா