
எம்.ஜி.ராமச்சந்திரன் முதல்வராக இருந்தபோது தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவானது. எப்போதோ நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இப்போதாவது செயலாக்கப்பட்டிருக்கிறதே என நாங்கள் மகிழ்வுற்றோம்.
அதன்பின்னர் எம்.ஜி.ராமசந்திரன் தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக
வ.அய். சுப்ரமணியத்தை தேர்ந்தெடுத்தது நல்ல செய்தி. ஏனெனில்
வ.அய். சுப்ரமணியம் நேர்மையானவர். அவர் மொழியை அறிவியல் பூர்வமாக அறியக் கூடியவர். அதனால் எது நல்லது? எது கெட்டது? என்பது அவருக்குத் தெரியும். அவர் கேரளவில் இருந்ததால் அவரிடம் அரசியல் சாயம் என்பது கிடையாது.
அதைவிட முக்கியமான செய்தியை நான் இங்கு பதிவு செய்ய வேண்டும். தமிழ்ப் பல்கலைக்கழக துவக்கவிழாவில் அன்றைய முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் துணைவேந்தரை அறிவிப்பு செய்யப் போகிறார். அப்போது வ.அய். சுப்ரமணியத்தின் அருகில் இருந்த செயலர் வ.அய். சுப்ரமணியத்திடம் உங்களை முதல்வர் அறிவிப்பு செய்வார். அறிவிப்பு செய்தவுடன் நீங்கள் முதல்வர் காலைத்தொட்டு ஆசிர்வாதம் வாங்கிக் கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார். முதல்வர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை அறிவித்தவுடன்
வ.அய். சுப்ரமணியம் எம்.ஜி.ஆர் அருகில் சென்றவுடன் எம்.ஜி.ஆர் பணிநியமனத்தை கொடுத்தவுடன் அதைப் பெற்றுக் கொண்டு தனது இருக்கைக்கு வந்துவிட்டார். வந்தவுடன் தமிழகச் செயளர் வ.அய். சுப்ரமணியத்திடம் ஏன் இவ்வாறு நடந்து கொண்டீர்கள்? முதல்வரிடம் ஆசிர்வாதம் வாங்கவில்லையா என்றதற்கு எனக்கு அப்படி ஒரு பழக்கம் கிடையாது என வ.அய். சுப்ரமணியம் பதிலளித்திருக்கிறார். நாமாக இருந்திருந்தால் அன்று என்ன நடந்திருக்கும்?
இதைவிட முக்கியமான செய்தி ஒன்று உண்டு. அவர் வேலையில் சேர்ந்த நாளில் இருந்து வேலையை விட்டு வெளிவந்த நாள் வரையில் ஒரு ராஜினாமா கடிதத்தை மட்டும் எழுதி தேதி போடாமல் வைத்திருந்தார். என் பணியின் மீது விருப்பம் இல்லாதவர்கள் என் மீது தவறு காண்பவர்கள் இதனை அனுப்பி விடலாம் எனக் கூறுவார். வ.அய். சுப்ரமணியத்தைக் கதாநாயகனாகக் கொண்டு பிரபஞ்சன் காகித மனிதர்கள் எனும் நாவலை எழுதினார். அதைப் படித்துப் பார்த்தால் தெரியும்.
- முக நூல் தகவல் : கந்தசாமி ஆர்
