
“என்னை யாரும் அவ்வளவு எளிதாக
முட்டாளாக்க முடியாது ” என்று ஜம்பமாகப்
பீற்றிக் கொள்வார் எங்கள் ஆபிஸ்
ஆக்கௌண்டன்ட். அவர் வீட்டிற்கு ஆபிஸ்
விஷயமாகச் சென்று பேசிக் கொண்டிருந்த
போது, அவரது வீட்டு வேலைக்கார அம்மாள்
எங்கள் இருவருக்கும் காபி கொண்டு வந்து
வைத்தாள்.
” ஐயாவுக்கு சக்கரை போடாத காப்பி “
என்று கூறி,என் பக்கமாக டம்ளரை நகர்த்தி
வைத்துவிட்டுப் போனாள்.உடனே நான்
( இங்கே ‘ நான் ‘ என்றால் நானல்ல )
” முன்னே நான் வந்திருந்த போது,சக்கரை
போடாதே என்று சொல்லியிருந்தேன். அதை
ஞாபகம் வைத்துக் கொண்டிருக்கிறாள்.நல்ல
புத்திசாலி ” என்று பாராட்டினேன்.
உடனே அவர், -“அட நீங்க ஒண்ணு ! இது
ஒண்ணாநெம்பர் மக்கு” – என்றார். “இப்ப ஒரு
வேடிக்கையைப் பாருங்கள் ” என்று கூறி,தன்
பர்ஸிலிருந்து இரண்டு நாணயங்களை
எடுத்தார். ஒன்று புதிதாய் வந்திருக்கும்
பெரிய சைஸ் இரண்டு ரூபாய்க் காசு,
பளபளவென்று இருந்தது. இன்னொன்று
பழைய ஐந்து ரூபாய் நாணயம். சின்ன
சைஸ்.
இரண்டையும் உள்ளங்கையில் திறந்து
வைத்துக் கொண்டு,” செல்லம்மா இங்கே
வா ” என்று வேலைக்காரியைக் கூப்பிட்டார்.
அவள் வந்ததும், கையை நீட்டி,- “உனக்கு
எந்த காசு வேண்டுமோ அதை எடுத்துக்
கொள் “- என்றார்.அந்த அம்மாள்,
பளபளவென்று பெரிதாய் இருந்த இரண்டு
ரூபாய்க் காசை எடுத்துக்கொண்டு போய்
விட்டாள்.அக்கௌண்டன்ட் என்னிடம்,
‘ பார்த்தீர்களா ? பெரிசாய் இருக்கிற
நாணயம் தான் உசத்தி என்று நினைத்துக்
கொண்டிருக்கிறாள் ! சரியான மக்கு !
என்றார்.நானும் அந்த மடத்தனத்தை நினைத்துச் சிரித்து விட்டுக் கிளம்பினேன்.
தெருக் கோடியில் ஆட்டோ கிடைக்குமா
என்று பார்த்துக் கொண்டிருந்த போது அந்த
வேலைக்கார அம்மாவைப் பார்த்தேன்.
‘ ஏம்மா ரெண்டு ரூபாய்க் காசுக்கும் ஐந்து
ரூபாய்க் காசுக்கும் வித்தியாசம் தெரியாமல்
இருக்கயே ‘ என்றேன்.
ஸார்,உங்களுக்கு விஷயமே தெரியாது.
நான் மூளையில்லதவள்னு மத்தவங்க்கிட்டே
காட்டறதுக்காக அவர் அப்படித்தான் செய்வார்
அதிலே அவருக்கு அப்படியொரு அலாதி
சந்தோஷம். மூளை இருக்குன்னு நான்
காட்டிக்கிட்டால் அத்தோட இந்த விளையாட்ட
அவர் விட்டுடுவார்.எனக்கு இந்த ரெண்டு
ரூபாய் கிடைக்கிறது நின்னுடும்.இதுபோல
நான் இருபத்துமூணு ரெண்டு ரூபாய்க் காசு
சேர்த்திருக்கிறேன் ! – என்று கூறி,சிரித்த
படியே போய்க் கொண்டிருந்தாள் அந்த
வேலைக்கார அம்மாள்.
யார் மக்கு ? யார் புத்திசாலி ?

நகைச்சுவைத் துள்ளல் சிறப்பு வாழ்த்துகள்
நன்றி நண்பரே
அருமை..