இனிக்கும் தமிழ் – 126/டி வி ராதாகிருஷ்ணன்

நன்னெறி – கதிர் வரவால் பொங்கும் கடல்

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று

என்றார் வள்ளுவர்.

இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது
கனிகளை ஒதுக்கி காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்

ஆம்..

ஒருவரிடம்..நாம் கடுமையாக பேசி சாதிக்க முடியாத காரியத்தை..இனிமையாகப்
பேசும்  ஒருவரால் சாதிக்க முடியும்.

சூரியன் மிகப் பெரியதுதான், மிகுந்த சக்தி வாய்ந்ததுதான் ஆனால் கடல்
சூரியனின் கதிருக்கு பொங்காது. குளிர்ந்த கதிரை வீசும் நிலவின் கதிருக்கு
கடல் பொங்கும்.

மக்கள் இனிய சொல்லுக்கு தலை சாய்ப்பார்கள்…..

நன்னெறியின் இப்பாடல் அதைத்தான் குறிக்கிறது

பாடல்

இன்சொலா லன்றி இருநீர் வியனுலகம்
வன்சொலால் என்றும் மகிழாதே – பொன்செய்
அதிர்வளையாய் பொங்காது அழல்கதிரால் தண்ணென்
கதிர்வரவால் பொங்குங் கடல்.

பொருள்

இன்சொலா லன்றி = இன் சொல்லால் அன்றி
இருநீர் வியனுலகம் = இரண்டு நீரைக் கொண்ட(பெரு நீர்ப் பரப்பு/கடல்) இந்த
பெரிய உலகம்
வன்சொலால் என்றும் மகிழாதே = வன்மையான சொற்களால் என்றும் மகிழாது
பொன்செய் = பொன்னால் செய்யப்பட்ட
அதிர்வளையாய் = அதிரும் வளையலை அணிந்த பெண்ணே
பொங்காது  அழல் கதிரால் = அனல் வீசும் கதிரால் பொங்காது
தண்ணென் = குளிர்ந்த
கதிர்வரவால் = கதிர்களை வீசும் நிலவின் வரவால்
பொங்குங் கடல் = பொங்கும் கடல்

இனிய சொற்களை பேசிப் பழகுங்கள். உலகம் உங்கள் சொல்லுக்கு அடி பணியும்