கோமலும் அவரது நாடக வாழ்க்கையும் – சில நினைவுச் சிதறல்கள்/தாரணி கோமல்

கோமலும் அவரது நாடக வாழ்க்கையும் – சில நினைவுச் சிதறல்கள்.

தன் கலை ஆர்வத்துக்காக… கொள்கைப் பிடிப்புக்காக நாடகம் எழுதி இயக்கி தயாரித்து மேடையேற்றினாலும் கோமலின் வாழ்வாதாரமும் அது தான். வங்கி, இன்ஷுரன்ஸ் மற்றும் பல அரசாங்க வேலைகளில் பாதுகாப்பாக இருந்து கொண்டு மாலை வேளையில் நாடக அரங்குகளில் வலம் வந்து, சாதித்துக் கொண்டிருந்த பல மேடைக் கலைஞர்கள் மத்தியில் நாடகத்தையே முழு நேரத் தொழிலாகக் கொண்டு பொருளாதார எற்றத்தாழ்வுகளில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்த மிகச்சில நாடக ஆசிரியர்களில் கோமலும் ஒருவர்.

அங்கு அரங்கத்தில் நாடக மணி அடித்தால் தான் வீட்டில் உலை பொங்கும் என்ற நிலையிலும் பரிட்சார்த்த நாடகங்களையும் மேடையேற்றினார். ஊர் ஊராகச் சென்று நாடக பயிற்சி கூடங்களை நடத்தி இளைஞர்களிடையே நாடக ஆர்வத்தை வளர்த்தார்.

‘மனிதன் என்னும் தீவு’ என்று ஒரு நாடகத்தை அரங்கேற்றினார். மனிதனின் உளவியல் சார்ந்த நாடகம். ஒரே மனிதன் பல சந்தர்ப்பங்களில் எப்படியெல்லாம் தனக்கு சாதகமாக வேறுபட்டு சிந்திக்கிறான். என்பதான கதை.
நாடக ரசிகர்களால் சரியாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. . மொத்தமாக ஒன்பது காட்சிகள் தான் மேடையேற்றப்பட்டது.
(சமூக அவலத்தைப் பேசும் தண்ணீர் தண்ணீர்’ இதே ரசிகர்களால் ரசிக்கப்பட்டு 250 முறைகளுக்கு மேல் மேடையேறியது குறிப்பிடத்தக்கது)

இந்த கால கட்டங்களில் வீட்டில் அடிக்கடி நடக்கும் உரையாடல்:

அம்மா: குடும்பம் இருக்கும் நிலையில் இப்படியெல்லாம் பரிட்சார்த்த நாடகங்கள் தேவையா?

அப்பா: மேலை நாட்டில் நாடகங்கள் பல இப்படியான கதைகளில் தான் வெற்றி பெற்றிருக்கிறது. நாடக உலகுக்கு என்னால் முடிந்த ஒரு பங்களிப்பு.

அம்மா: அது சரி. அப்படியானால், நம் வீட்டு மளிகை கடை பாக்கியை யார் வந்து கொடுப்பாங்க?

இதையெல்லாம் தாண்டி வந்து எங்கள் குடும்பம் ஜெயித்தது. நான் பல கார்பொரேட் நிறுவனங்களில் பல உயர் பதவிகள் வகித்து… கடைசியில் 10 ஆண்டுகளுக்கு முன்னால் நாடக உலகிற்கு வந்து குதித்து, என் தந்தைக்கு செய்யும் அஞ்சலியாக அவரின் பல நாடகங்களை மேடையேற்றி , இப்போது 2022ல் கார்திக் பைன் ஆர்ட்ஸ் கோடை நாடக விழாவில், நான் எழுதி இயக்கியுள்ள ‘அவள் பெயர் சக்தி’ நாடகம் சிறந்த நாடகமாக விருது பெற்றிருக்கிறது.

இந்த வெற்றியை, கோமல் அவர்களுக்கு காணிக்கையாக சமர்ப்பணம் செய்கிறேன்.
இதைக் கூறும் போதே என் நெஞ்சம் விம்மித் தணிகிறது. 🙏🙏

One Comment on “கோமலும் அவரது நாடக வாழ்க்கையும் – சில நினைவுச் சிதறல்கள்/தாரணி கோமல்”

Comments are closed.