
ஒரு லிட்டர் பாலை எடுத்துக்கொண்டு ஒரு அகலப்பாத்திரத்தில் கொதிக்க வைத்து, அதைச்சுண்டக்கய்ச்சவும். தனியே அரைகிலோ சர்க்கரை எடுத்து கம்பிப்பாகாய்ச்செய்து, இன்னொரு முப்பது கிரம் அளவு சர்க்கரையோடு ஐந்து கிராம் குங்குமப்பூ கலந்துகொள்ளவும். இந்த குங்குமப்பூ சர்ர்கரையை ஏற்கனவே செய்த சர்க்கரைப்பாகில் சேர்த்து முதலில் காய்ச்சிய பாலில் கலந்து…….
இருக்கட்டும்.
இந்த அபார இனிப்பை ”ராஜ்போக்” என்கிறார் புகழ் பெற்ற சமையல் நிபுணர், சஞ்சீவ் கபூர்!
இந்த சமாச்சாரத்தை நம் அலமேலுவோ அல்லது பிருஹதகுசாம்பாளோ பண்ணித்தந்து சாப்பிட்டால் என்னமாய் இருக்கும் என்று எனக்கு சொல்ல வரவில்லை. ஆனால் சஞ்சீவ் கபூரோ அல்லது ரேஷ்மி திவாரியோ செய்து தந்தால் அபாரமாகத்தான் இருக்கணூம்.
அப்படி ஒருவர் செய்த இந்த ஐட்டம் எனக்கு ரெண்டு நட்களுக்கு கிண்ணம் கிண்ணமாய் ஜீரணம் ஆகியது. அதோடு கூட ஆல்மண்ட் ஐஸ்கிரிம் வேறு.
யோசித்துப்பாருங்கள். மனுஷனுக்கு இதைவிட இனிமை இருக்க முடியுமோ?
இருக்கிறதே!
அவர் சில உடல் சிரமமங்கள் கொண்டவர். அயராத உழைப்பாளி. மனசும் மூளையும் ஓயாத சிந்தனை. அவரின் உழைப்பின் பயனை அனுபவித்து உரமேறி வாழ்க்கையில் முன் வந்தவர் லட்சம் பேர். ஆனால் இவரோ இன்னும் இன்னும் என்று உழைத்துக்கொண்டே இருப்பவர். இத்தனைக்கும் மத்தியில் ஒரு கிருஷ்ணர் ஜனித்த தினப்பின் மாலையில் கார் ஏறி, கடைக்குப்போய் பார்த்துப்பார்த்து வாங்கி சிரமம் பாராமல் வீட்டுக்கு வந்து என் கையில் கொடுத்து,
“நீ சாப்பிடு! மூணு கூட எடுத்துக்கோ. அப்பாக்கு ரெண்டு கொடு. லதாக்கு ஒண்ணு போறும். அதுவே கூடாது, ஆனா இன்சுலின் கூடப்போட்டுண்டு இத சாப்பிடட்டும்!”
எத்தனை வாத்ஸல்யம்! என்னிடம் கொடுக்கும்போது அவர் முகத்தில்தான் எத்தனை சந்தோஷம்.
அவர் கொடுத்த மால் பூவாவை விட எங்கள் மீதான அவரின் இந்த வாத்ஸல்யம் எனக்கு இனித்தது.
அலமேலுவோ பிருஹத குசாம்பாளோ, ரேஷ்மி திவாரியோ ஏன், அந்த சஞ்சீவ் கபூரோ கூட, என்னதான் ராஜ்போக்கைச்செய்து தந்தாலும் இந்த வாத்ஸல்யத்துக்கு கிட்டத்தில் ஒரு இஞ்ச் கூட வரமுடியாது.
அடிக்கடி நான் சாஸ்திரி நகர் போனேன். முதல் அவென்யூவைத்தாண்டித்தான் போகவேணும் அங்குதான் K C Das கடை. கடந்த நான்கு வருடங்கள் வரை அதைத் தாண்டும்போதெல்லாம் எனக்கு நாவும் மனசும் இனித்துக்கொண்டேதான் இருந்தது. இனியும் அப்படித்தான்.
இப்போது “அவரும்” இல்லை. K C Das கடையும் இல்லை.

மிக்க நன்றி அழகியசிங்கர்!!