விரல்கள்/வவேசு

வீணையைத் தடவிய
விரல்களின் வித்தகம்
விரியும் நாதமாய்


விளைந்து பரவின.

பீடத்தில் சுழன்ற
பிசைந்த மண்பொதி
விரல்களின் அசைவில்
உருவங்கள் பெற்றன.

விரல்களின் வழியே
வழிந்த மாத்துகள்
ஈரத் தரையில்
கோலமாய் மிளிர்ந்தன.

உறவும் உள்ளமும்
உணர்ந்து கொண்டதை
கோத்த விரல்கள்
கொண்டாடி மகிழ்ந்தன.

கன்னக் கதுப்பில்
வழியும் நீர்த்துளி
காயும் முன் துடைத்தன
நேய விரல்கள்.

என் செய்தனவோ
என்றன் விரல்கள்
எழுதுகோல் கொண்டிதை
எழுதிக் கொண்டுள்ளன.