
[ரெயினர் மரியா ரில்கே கவிதை – எனது மொழிபெயர்ப்பு]
நான் செத்தால் நீ என்ன செய்வாய், தேவனே?
(Was wirst du tun, Gott, wenn ich sterbe?)
நான் செத்தால் நீ என்ன செய்வாய், தேவனே?
நான் உனது தண்ணீர்ப் பாத்திரம் (உடைந்து சிதறிப் போவேன்)
நான் உனது பானம் (கெட்டுப் போய்விடுவேன்)
உனது உடுப்பும், உனது அழைப்புமாக நானே இருக்கிறேன்,
நான் இல்லாமல் நீ சித்தம் கலங்கிப் போய் விடுவாய்.
நான் போன பின்பு,
உன்னை உபச்சார வார்த்தைகளால் வரவேற்க
உனக்கு ஒரு வீடு இருக்காது,
நான் இல்லை என்றால், உனக்குக் காலணிகள் இல்லாமல்
போகும்.
உன் சோர்வுற்ற பாதங்கள் எவ்விதமான பாதுகாப்பும் இன்றி
அலைய நேரும்.
உன் தோளில் போர்த்தியிருக்கும் போர்வை நழுவி விழும்,
மென்மையானதும் வெதுவெதுப்பானதுமான
தலையணைபோல்
என் கன்னத்தில் புதைந்த
உன் பார்வை
இங்கு வந்து,
நெடுநேரம் எதையோ தேடிவிட்டு
சூரிய அஸ்தமனம் முடிவுறும் தருணத்தில்
அந்நிய கற்களின் மடியில் படுத்துக் கொள்ளும்.
நான் செத்தால் நீ என்ன செய்வாய், தேவனே?
எனக்குப் பயமாக இருக்கிறது.

ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல – தேவனும் மனிதனும்! ஒருவரின்றி மற்றவர்க்கு மதிப்பும் இல்லை! மாற்றும் இல்லை!