நித்தியானந்த ஆசிரமம்

நித்தியானந்தா ஆசிரமத்திற்கு பல கோடி அமெரிக்க டாலர்கள் நன்கொடையாக வந்ததாகக் கூறப்படுகிறது. அதில் ஏற்பட்ட பிரச்னைதான் இந்த சமாதிநிலை நாடகமெல்லாம் என்கிறது நித்தியானந்தாவுக்கு நெருக்கமாக இருந்து பிரிந்தவர்கள் தரப்பு. நம்மிடம் பேசிய நித்தியானந்தாவின் முன்னாள் சீடர்கள் சிலர், “இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கு முன்பு, பல கோடி அமெரிக்க டாலர் பணத்தை தங்கக் கட்டிகளாக மாற்றிக் கொண்டார் நித்தியானந்தா. துபாய், இஸ்தான்புல் வழியாக பெருமளவில் இந்தத் தங்கக் கட்டிகள் கரீபிய தீவு பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள சர்வதேச வங்கியில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டன. அந்த வங்கிக் கணக்கின் பாதுகாவலர்களாக, அமெரிக்காவைச் சேர்ந்த தன் சீடர்கள் இருவரை நியமித்த நித்தியானந்தா, மாதம் ஒருமுறை அந்த தங்கக் கட்டிகளை ஆய்வு செய்யுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார். அவர்கள் மூலமாகத்தான் கைலாசாவை சில ஆப்பரிக்க நாடுகள் அங்கீகரிப்பதற்கு உண்டான வேலைகள் நடந்தன. இதற்காக வறுமையில் வாடும் சில மேற்கு, மத்திய ஆப்பரிக்க நாடுகளின் பிரதிநிதிகளை அணுகிப் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை.

இதற்கிடையே, ஐ.நா அரங்கில் ‘கைலாசா’ பிரதிநிதியைப் பேச வைத்தோம், அமெரிக்க மேயர்களிடமிருந்து வாழ்த்துக் கடிதங்களைப் பெற்றிருக்கிறோம் என அந்த அமெரிக்க சீடர்கள் இருவரும் தனித்தனியாக ‘பில்’ போட்டுக் கொண்டனர். தான் ஏமாற்றப்படுவது தெரிந்தும், தனக்கு வேறு வழியில்லாததால் அவர்களை நம்பியே நித்தியானந்தா இருக்க வேண்டியதாகிவிட்டது. சமீபத்தில், கரீபிய தீவிலுள்ள தங்கக் கட்டிகளை தங்களால் ஆய்வு செய்ய முடியவில்லை என அந்த அமெரிக்க சீடர்கள் நித்தியானந்தாவிடம் கை விரித்திருக்கிறார்கள். பல கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய அந்த தங்கம் தன் கையைவிட்டுப் போய்விடுமோ என்கிற பதற்றம் நித்தியானந்தாவைத் தொற்றிக் கொண்டது.

பணத்தின் மீது நித்தியானந்தாவுக்கு ஆசை இல்லை. கிலோ கணக்கில் நகைகளை அள்ளிப் போட்டுக் கொள்வதுகூட மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகத்தானே தவிர, அவற்றின் மீதுகூட நித்தியானந்தாவுக்கு விருப்பம் இருந்ததில்லை. ஆனால், தன்னுடைய நாட்டைக் கட்டியமைப்பதற்கு வைத்திருந்த தங்கம் மாயமானது தெரிந்தவுடன், என்ன செய்வது என்றே அவருக்குப் புரியவில்லை. தனக்குத் தெரிந்த சில ஐரோப்பிய துணைத் தூதர்கள் மூலமாக, அல்பேனிய மாஃபியாக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முனைந்தார். அதுவும் கைகூடவில்லை. இப்படியே உட்கார்ந்திருந்தால் வேலைக்கு ஆகாது என்பது தெரிந்தவுடன்தான், தியானப் பயிற்சி அளிக்கும் அறிவிப்பை வெளியிட்டார். அந்த பயிற்சி வகுப்புக்கு முன்னதாக, ‘நித்தியானந்தா மரணமடைந்துவிட்டார்’ என்கிற வதந்தியைக் கிளப்பினால், தன்னைப் பார்ப்பதற்கு நிறைய பேர் பயிற்சி வகுப்பில் இணைவார்கள், அதன்மூலமாக கல்லாவை நிரப்பிக் கொள்ளலாம் என்பதே நித்தியானந்தாவின் திட்டம். அந்தத் திட்டம்தான் ‘சமாதி நிலை’ என்கிற ரூபத்தில் அரங்கேறுகிறது” என்றனர் விலாவரியாக.

நித்தியானந்தாவின் பேச்சுதான் அவ்வப்போது அதிரடிக்கும். இப்போது, அவரைச் சுற்றி நடப்பதும் அதிரடி சரவெடியைக் கிளப்புகிறது. அவரை இந்தியாவுக்குக் கொண்டுவந்தால் மட்டுமே, இந்த சர்ச்சைகளுக்கு எல்லாம் விடை கிடைக்கும்.

நன்றி: விகடன்

முகநூல் பகிர்வு : ஆர்.கந்தசாமி