போர்ஹெஸ்ஸின் புலிகள்/வாசுதேவன்

பார்வை பறிபோனாலும் போர்ஹெஸ் கனவில் புலிகள் வந்தன. வில்லியம் ப்ளக்கின் Tyger (தைகர்) என்ற கவிதையும் போர்ஹெசை வசியப்படுத்தியது. இந்தக் கவிதையில் கடவுளின் படைப்புகளில் மிக அழகானது புலிகள் என ப்ளேக் வியந்து எழுதியுள்ளார்.
போர்ஹெஸ் எழுதிய The Circular Ruins என்ற கதையில் புராதன கோவில் வழிபாட்டு சன்னதியில் புலிச்சிலை இருக்கிறது. பொன்னிற புலிகள் என கவிதை எழுதியுள்ளார். கனவுப்புலிகள் என கவிதை தொகுப்பையும் எழுதி வெளியிட்டுள்ளார். அவருடைய நீலப்புலிகள் (Blue Tigers) தலைசிறந்த சிறுகதைகளில் ஒன்று…

அலெக்சாண்டர் இந்தியாவில் ’லாகூர் பல்கலைகழகத்தில் ‘ பேராசிரியராக பணியாற்றுகிறார். ( Professor of Logic). கங்கை நதிக்கரையில் உள்ள குக்கிராமத்தில் நீலப்புலிகள் நடமாடுவதைப் பற்றி கேள்விப்படுகிறார். அதைப்பார்த்து பிடித்து வர அந்தக் கிராமத்திற்கு செல்கிறார். கிராமமக்கள் அவரை நம்பவில்லை. இருப்பினும் தான் வந்த காரியத்தை சொல்லி புரிய வைத்தவுடன் அன்றிரவு அவரை வனத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள். நீலப்புலி இருந்த இடத்தில் அது இல்லை. கிராம மக்களுக்கு குழப்பம். பேராசிரியருக்கு தன்னை கிராமமக்கள் ஏமாற்றுகிறார்கள் என்ற ஐயம். இப்படி ஒவ்வொரு இரவும் கிராம மக்கள் பார்க்கிறார்கள். ஆனால் பேராசிரியரை அழைத்து சென்றவுடன் புலி காணாமல் போகிறது. இதில் ஏதோ மர்மம் இருக்கிறது என ஊகிக்கிறார்.

மலையடிவாரத்தில் வசிக்கும் மக்களிடம் தான் மலை ஏறி பார்க்கப்போவதாக சொன்னவுடன் பேராசிரியரை எச்சரிக்கிறார்கள். அன்றிரவு யாருக்கும் சொல்லாமல் மலை எறுகிறார். விடியற்காலையில் மலை உச்சியை அடைகிறார். எந்த ஜீவராசிகளையும் பார்க்கமுடியவில்லை. (பறவைகள் உட்பட). கீழே பார்க்கும்போது ஒரு சிறிய பாறை குகையில் ‘’நீலப்புலி’’ ஐ பார்த்து மெய்மறந்து நிற்கிறார். கனவில் பார்த்த அதே புலி இதுதான் என அதிசயத்துடன் பார்க்கிறார். புலியின் உடலில் பல கூழாங்கற்கள். ..கை நீட்டுகிறார். கூழாங்கற்களை அள்ளுகிறார். கிராமத்திற்கு வந்து கற்களை எண்ணத் தொடங்கினார். அவரால் எண்ண முடியவில்லை. எண்ணத் தொடங்கியதும் கற்களின் எண்ணிக்கை பெருகிய வண்ணம் இருக்கிறது. கிராம மக்களுக்கு இது தெரியும். அது புனிதமானது கற்பனைக் கற்கள் என்கிறார்கள். பேராசிரியர் பித்த நிலையில் தினம் தினம் கற்களை எண்ணி சோர்வடைகிறார். லாகூருக்கு திரும்புகிறார். கற்கள் மேல் கணித எண்ணை செதுக்கியும் முயற்சித்தும் பயனில்லை. உறக்கத்தை தொலைக்கிறார். இரவு, பகல் வித்தியாசம் அவருக்கு தெரியவில்லை…இந்த மர்மத்தை புரிந்து கொள்ள தர்க்கவியல் பேராசிரியர் லாகூர் தெருக்களில் பித்த நிலையில் அலைகிறார்.

விடியற்காலையில் லாகூர் மசூதிக்குள் செல்கிறார். புனித நீறூற்றில் கையை நனைக்கிறார். இந்த மன உளைச்சல்/அவஸ்தையிலிருந்து தான் விடுதலை அடையவேண்டும் என பிராத்தனை செய்கிறார். மசூதிக்கு வெளியே பார்வை இழந்த ஒரு பிச்சைக்காரன் கையேந்தி நிற்கிறான். தன்னிடம் கொடுப்பதற்கு காசுகள் எதுவும் இல்லை என பேராசிரியர் சொல்கிறார். பிச்சைக்காரன் “ காசுகளை விட அதிக எண்ணிக்கையில் ஒரு பொருள் உன்னிடம் இருக்கிறது”” என்கிறான். பேராசிரியர் புரிந்து கொண்டு தன்னிடமிருந்த மாயக்கற்களை பிச்சைக்காரனிடம் தந்துவிடுகிறார்.
கற்களை பெற்றுக்கொண்டு மர்ம புன்னகையோடு உனக்கு ஒரு பரிசு தருகிறேன் என சொல்லி “You may keep your days and nights, and keep wisdom, habits, the world.”… பிச்சைக்காரன் மறைந்து விடுகிறான்….

2 Comments on “போர்ஹெஸ்ஸின் புலிகள்/வாசுதேவன்”

Comments are closed.