
ப்ரியா குட்டி நிலை கொள்ளாது இங்குமங்கும் தோட்டத்தில் துள்ளிக் குதித்து ஓடிக் கொண்டிருந்தாள். அவள் பாட்டி ஜனனிக்கு அவளைப் பார்த்துக் கொள்வது நாளுக்கு நாள் மிகவும் கடினமாகிக் கொண்டே போகிறது. இப்படித்தான் போன வாரம் தோட்டத்திலுள்ள ஒரு கொய்யா மரக் கிளையில் ஒரு ஆந்தையைப் பார்த்துவிட்டாள்.
பாட்டி….. என்று ஒரு அலறல் சத்தம் கேட்டவுடன் பாட்டிக்கு தூக்கி வாரிப் போட்டது, மூச்சே நின்று விடும் போல் ஆகிவிட்டது. “ப்ரியா குட்டி இப்படி கத்தாதே” என்று அவளிடம் சொன்னாள்.
“இல்ல பாட்டி…. இதுக்கு முன்ன இந்த பேர்ட்ட நான் பார்த்ததே இல்லையே?” கண்ண பாத்தா பயமா இருக்கு பாட்டி அதான் கத்தினேன்” என்றாள். இதுதான் குட்டி, ஆந்தை என்றாள் ஜனனி.
“இங்கிலீஷ்ல பாட்டி? என்று எதிர் கேள்வி கேட்டாள் ப்ரியா குட்டி. இங்கிலீஷ்ல அவுல் என்று சொல்வார்கள். அவுலா….. ஓ ஃபார் அவுல் என்று சொல்லிக்கொண்டே அதன் அருகில் சென்றாள் ப்ரியா. அது திடீரென்று பறந்து அவள்கிட்டே வந்து அவள் மேல் உட்கார முயற்சித்தது. ப்ரியா வீல் என்று கத்தி அங்குமிங்கும் ஓடினாள் கால் தடுக்கி தொப்பென்று கீழே விழுந்தாள். முட்டியில் நல்ல அடி. சதை கிழிந்து ரத்தம் வர ஆரம்பித்தது. அழுகை நின்றபாடில்லை. ஜனனிக்கு அவள் அம்மா ஆபீஸிலிருந்து வரும் வரை அவளை சமாதானப் படுத்துவது போதும் போதும் என்றாகிவிட்டது.
மாலை ப்ரியாவும் அவள் அம்மாவும் டாக்டரிடம் சென்று வந்தனர் அதிலிருந்து ஆந்தை என்றாலே ப்ரியாவுக்கு ஒருவித பயம்.
சட்டென்று நினைவிற்கு வந்தாள் ப்ரியா.
அவள் இப்பொழுது ஆர்னித்தாலஜி படித்துவிட்டு அதில் டாக்டரேட் பட்டம் வாங்கிய 25 வயது இளம்பெண். அந்த சம்பவத்தை இப்போது நினைத்துப் பார்த்தாள். சிரிப்புத்தான் வந்தது. அவளையுமறியாமல் சத்தமாக சிரித்தாள். அவள் சிரிப்பின் காரணம் புரியாமல் அவள் தோழி பல்லவியும் அவளுடன் சேர்ந்து சிரித்தாள்.
