(தாமதமாக ஒரு ‘டுமீல்’ கதை)!

நான்கு வயது நரெய்ன் மதியத்திலிருந்து ஒரே அழுகை.
அவன் தாத்தா வாங்கிக் கொடுத்திருந்த கருப்புக் கலர்த் துப்பாக்கியைக் காணவில்லை. குறிபார்த்துக் குதிரையை அமுக்கினால், ‘பட்’ டென்ற சத்தத்துடன் அதன் மூக்கிலிருந்து ரப்பர்த் தலையுடன் அம்பு போன்ற தோட்டா சீறிப்பாய்ந்து சுவற்றிலோ, எதிராளியின் முதுகிலோ ஒட்டிக்கொள்ளும். எதிர்பார்க்காத எதிராளி திகைக்க, குழந்தை சிரிக்க அது ஒரு விளையாட்டு!
அந்தத் துப்பாக்கியைக் காணவில்லை. தாத்தாவிடம் சொல்லி வேறு வாங்க வேண்டும்!
ஒருக்களித்தாற்போல் சாத்தியிருந்த தாத்தாவின் அறையை நரெய்ன் எட்டிப்பார்த்தபோது, பால்கனியைப் பார்த்தவாறு தாத்தா அமர்ந்திருந்தார். அருகில் கிளாஸில் ஐஸ் போட்ட, தேன் கலர் ஜூஸ் பாதிக்கு இருந்தது. அந்த மாதிரி நேரங்களில் அவரை யாரும் தொந்திரவு செய்யக் கூடாதென்பது எழுதாத விதி!
பெரிய பெரிய எஸ்டேட்டுகள், தொழிற்சாலைகள், சந்தைப் பங்குகள் என மிகப் பெரிய மனிதர் தாத்தா!
சத்தம் போடாமல் உள்ளே வந்த நரெய்னுக்கு ஒரே ஆச்சரியம்! தாத்தாவின் மேஜை மீது கருப்புத் துப்பாக்கி. தாத்தாவை ஆச்சரியப் படுத்த, மேஜை நோக்கி மெதுவாக நகர்ந்து, கருப்புத் துப்பாக்கியைக் கையில் எடுத்துக்கொண்டான்.
தனக்கு மட்டும் கனமான துப்பாக்கியை வாங்கி வைத்துள்ளார் தாத்தா என நினைத்துக்கொண்டான். அவர் முதுகை நோக்கிக் குறி பார்த்துக் குதிரையை அழுத்தினான்.
“டுமீல்”
தாத்தா தற்காப்புக்காக வைத்திருந்த நிஜத் துப்பாக்கியிலிருந்து குண்டு, அவர் முதுகை நோக்கி சீறிப் பாய்ந்தது!
