
த.நா. குமாரசாமி, த.நா. சேனாபதி, கா.ஸ்ரீ.ஸ்ரீ., சு. கிருஷ்ணமூர்த்தி எனத் தமிழ் மொழிபெயர்ப்பு இலக்கிய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த எழுத்தாளர்கள் பலர். அந்த வரிசையில் தெலுங்கிலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து தெலுங்கிற்கும் குறிப்பிடத்தகுந்த மொழிபெயர்ப்புகளைச் செய்து வருபவர் கௌரி கிருபானந்தன். இவர், செப்டம்பர் 2, 1956ல், திண்டுக்கல்லில், கிருஷ்ணமூர்த்தி-ராஜலட்சுமி தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். தந்தை ஆந்திராவில் வேலை பார்த்ததால் இவரது பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பு ஆந்திராவில் நிகழ்ந்தது. வணிகவியலில் இளங்கலை பட்டம் பெற்றார்.
1976ல் வங்கியதிகாரியாகப் பணியாற்றி வந்த கிருபானந்தனுடன் திருமணம் நடந்தது. கணவரது வேலை காரணமாகச் சிலகாலம் தஞ்சாவூரின் மெலட்டூரில் வசிக்கநேர்ந்ததது. அதுவரை தமிழைப் பேசமட்டுமே அறிந்திருந்த கௌரி, அக்காலகட்டத்தில் ஓய்வுநேரத்தை தமிழை முறையாகப் படிக்கவும் எழுதவும் கற்கப் பயன்படுத்தினார்.
தமிழ் கற்கக் கற்க, இலக்கிய ஆர்வம் அதிகரித்தது. நூலகத்திற்குச் சென்று தமிழ்ச் சிறுகதைகள், நாவல்கள் என்று தேடித்தேடி வாசித்தார். அசோகமித்திரன், தி. ஜானகிராமன், இந்திராபார்த்தசாரதி, சுஜாதா, ராஜம்கிருஷ்ணன், சிவசங்கரி போன்றோரின் நாவல்கள் இவரது வாசிப்பார்வத்தை அதிகரித்தன. தெலுங்கில் கல்வி பயின்றிருந்ததால் தெலுங்கும் சரளமாகக் கைவந்தது. இரண்டு மொழிகளிலும் நூல்களை மாறி மாறி வாசித்தார், தேர்ச்சி வந்தது.
நாற்பது வயது நெருங்குகையில் குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றிய பின் நிறைய ஓய்வு நேரம் கிடைத்தது. அக்காலகட்டத்தில் இன்னும் நிறைய வாசித்தார். தெலுங்கில் ஒரு நாவலையும், அதே நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பையும் வாசிப்பது இவருக்குப் பிடித்தமான ஒன்று.
ஒருசமயம் அவ்வாறு தெலுங்கிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பான ஒரு படைப்பைப் படித்தவர், அந்த மொழிபெயர்ப்பின் தரத்தைக் கண்டு அதிர்ச்சியுற்றார். மோசமான மொழிபெயர்ப்பில் இருந்த அந்நூல் குறித்து அதன் மொழிபெயர்ப்பாளருக்குக் கடிதம் எழுத, அவர், “உனக்குத் திறமை இருந்தால் நீ எழுதேன் பார்க்கலாம்” என்று பதில் அனுப்பிச் சீண்ட, அந்தச் சவாலே, கௌரி கிருபானந்தனின் எழுத்துலக வாழ்க்கைக்குப் பிள்ளையார்சுழி ஆனது.
பிரபல தெலுங்கு எழுத்தாளர் எண்டமூரி வீரேந்திரநாத்தின் ‘பந்தயம்’ சிறுகதையை மொழிபெயர்த்து குங்குமச்சிமிழ் இதழுக்கு அனுப்பினார். 1995ம் ஆண்டில், கௌரியின் 39ம் வயதில் அச்சிறுகதை வெளியானது. அதற்கு வாசக வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து மொழிபெயர்ப்புகளில் அதிகக் கவனம் செலுத்தினார். குறிப்பாக எண்டமூரி வீரேந்திரநாத்தின் சிறுகதை, நாவல்களை அனுமதி பெற்று மொழிபெயர்த்தார். அவரது புகழ்பெற்ற ‘அந்தர்முகம்’ நாவலை இவர் மொழிபெயர்க்க, பிரபல அல்லயன்ஸ் பதிப்பகம் அதனை வெளியிட்டு ஊக்கப்படுத்தியது. தொடர்ந்து பத்திரிகைகளுக்கும் பதிப்பகங்களுக்கும் தெலுங்கிலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து தெலுங்குக்குமாகப் பல நூல்களை மொழிபெயர்த்தார்.
வீரேந்திரநாத்தின் புகழ்பெற்ற படைப்புகளான தளபதி, பிரளயம், லேடீஸ் ஹாஸ்டல், ரிஷி, தூக்கு தண்டனை, பணம் மைனஸ் பணம், துளசிதளம், மீண்டும் துளசி போன்றவற்றைத் தமிழ் வாசகர்கள் பரவலாக அறிய இவர் காரணமானார். எண்டமூரி வீரேந்திரநாத்துக்குத் தமிழில் மிகப்பெரிய வாசகர் வட்டம் அமைய கௌரி கிருபானந்தனே காரணம் எனலாம். வீரேந்திரநாத்தின் படைப்புகள் மட்டுமல்லாது தெலுங்கு இலக்கிய உலகின் மிக முக்கிய எழுத்தாளரும், ‘நாவல் ராணி’ என்று போற்றப்படுபவருமான யத்தனபூடி சுலோசனா ராணியின் நூல்கள் பலவற்றையும் தமிழில் மொழிபெயர்த்து அளித்தார். சங்கமம், மௌனராகம், நிவேதிதா, சம்யுக்தா, தொடுவானம் போன்ற சுலோசனாவின் நூல்கள் கௌரிக்குப் புகழ் சேர்த்ததுடன், சுலோசனா ராணிக்கும் தமிழில் தக்கதொரு அடையாளத்தை, வாசக வட்டத்தை ஏற்படுத்தித் தந்தன.
டி. காமேஸ்வரி, ஓல்கா உள்ளிட்ட பல புகழ்பெற்ற தெலுங்கு எழுத்தாளர்களின் படைப்புகளை தமிழ்ப்படுத்தியிருக்கும் கௌரி, தமிழிலிருந்து தெலுங்கிற்கும் அசோகமித்திரன், ஜெயகாந்தன், சுஜாதா, வாஸந்தி, சிவசங்கரி, அனுராதா ரமணன், உஷா சுப்பிரமணியன், இந்திரா பார்த்தசாரதி எனப் பலரது படைப்புகளை வழங்கியிருக்கிறார். அத்தோடு, தானும் ஒரு சிறுகதை ஆசிரியராக, தமிழிலும் தெலுங்கிலும் பல சிறுகதைகளை எழுதியிருக்கிறார்.
கணையாழி, மஞ்சரி, குங்குமம், மங்கையர் மலர், சிநேகிதி, தெலுங்கின் விபுலா எனப் பல இதழ்களில் இவரது சிறுகதைகள் வெளியாகியுள்ளன.
இதுவரை 60க்கும் மேற்பட்ட நூல்களையும் எண்ணற்ற சிறுகதைகளையும் இவர் தமிழுக்குக் கொண்டுவந்துள்ளார். அவற்றில் எண்டமூரி வீரேந்திரநாத்தின் புகழ்பெற்ற, விற்பனையில் சாதனை படைத்த சுயமுன்னேற்ற நூல்களும் அடங்கும். ஆந்திராவின் புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் போராளியான கொண்டபல்லி கோடேஸ்வரம்மாவின் தன் வரலாற்றை ‘ஆளற்ற பாலம்’ என்ற தலைப்பில் இவர் மொழிபெயர்த்துள்ளார். சமீபத்தில் காலச்சுவடு வெளியிட்டுள்ள இந்நூல் பரவலான வாசக வரவேற்பைப் பெற்றுள்ளது.
- அரவிந்த் ஸ்வாமிநாதன் (தென்றல் மாத இதழ் – ஏப்ரல், 2016) Arvind Swaminathan
முகநூல் பதிவு : ஸ்ரீனிவாசன்

அமர்க்களம் சகோதரி. மிகவும் பெருமையாக இருக்கிறது. புலம் பெயர்ந்த போதிலும் மொழிபெயர்த்தலால் இரு மாநிலங்களுக்கு பெருமை சேர்க்கும் பணி வாழ்க.
அப்பப்பா!குடும்பப்பொறுப்புகளை நிறைவேற்றிக் கொண்டே எவ்வளவு சாதித்துள்ளார்!அற்புதம்.
தமிழுக்குக் கிடைத்த அரும்புதையல்!
பாராட்டப்படத் தகுந்த எழுத்தாளர்.
மேலும் மேலும் இவரது இலக்கியப் பணி தொடர நல்வாழ்த்துகள்.
அற்புதம் அம்மா. இரண்டு மொழிகளிலும் தங்கள் புலமை நன்கு வெளிப்படுகிறது. தங்கள் பணி இன்னும் சிறக்க என் பிரார்த்தனை களும் வாழ்த்துகளும்
அருமை
அருமை
பெருமையும் உணர்கிறோம்
எண்டமூரி வீரேந்திர நாத் அருமையான எழுத்து வேந்தர். அவரது எழுத்தை தமிழில் தந்த கௌரி அம்மா சிறப்பு நன்றி🙏💕
Kudos Ma’am! Wonderful service to the world of books in both languages.
“ஆளற்ற பாலம் ” இவரின் மொழிபெயர்ப்பில் படித்தேன்…அருமையான எழுத்து…மொழிபெயர்ப்பு…அறிய பட வேண்டியவர்…விமலா வித்யா.