
இரண்டு வருடங்களுக்கு முன்னர் முதல் முதலில் மிகச் சிறியதொரு கனவாகத் தோன்றியது. (உடனே கோவிட் வந்து கனவைக் கலைத்தது). 80-90களில் தொலைக்காட்சியின் தாக்கம் மிகாத காலக்கட்டத்தில் தமிழ் பத்திரிகைகளில் இருந்த தரத்தை நினைவுகூர்ந்தேன். படிப்படியாக அது சரிந்து வந்த வரலாறு எனக்குத் தெரியும். பொற்காலம் முதல் களப்பிரர் காலம் வரை என்று நாடகத்தனமாக வகைப்படுத்திவிடுவது எளிது. உண்மையில், அச்சரிவின் காரணம் மிகவும் சிக்கலானது. இன்னொரு பிரம்மாண்டமான ஊடகத்தின் தாக்கத்தை எதிர்கொள்ளத் தடுமாறித்தான் அது சரிய ஆரம்பித்தது. பிறகு மேலும் பல துணைக் காரணங்கள் சேர்ந்துகொண்டன. எல்லாமே பதற்றங்களின் விளைவு.
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாகத் தோன்றியது. காலம் எவ்வளவு வேகமாக மாறினாலும், எத்தனை நூதன ஊடகங்கள் நாளுக்கொன்றாக வந்துகொண்டே இருந்தாலும் தக்கன பிழைக்கும். தரம் இருந்தால் நிலைக்கும்.
இந்தப் பத்திரிகை அப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.
நீங்கள் பார்த்துச் சலித்த, படித்துச் சலித்த எழுத்து முறை இதில் இராது. எழுதுவதை ஆர்வமாகவோ, ஆசையாகவோ மட்டும் அல்லாமல் லட்சியமாகக் கருதுகிற ஒரு புதிய தலைமுறையை இதற்காக உருவாக்க முடிவு செய்தேன். #writeRoom எழுத்துப் பயிற்சி வகுப்புகளில் அதற்கான பணியைத் தொடங்கினேன். என் ஆசிரியர்களிடம் இருந்து நான் கற்ற அனைத்தையும் இந்த வகுப்புகளில் கற்க வருவோருக்குச் சொல்லித் தருகிறேன். எழுத்தின் நுட்பங்களைக் கூர்ந்து பயிலும் மாணவர்களில் இருந்து தேர்ந்தெடுத்த ஓர் அணியை மெட்ராஸ் பேப்பருக்காக உருவாக்கினேன். அவர்களுக்குக் கதை எழுதத் தெரியும். கட்டுரை எழுதத் தெரியும். பேட்டி எடுக்கத் தெரியும். ஒரு பிரச்னையை அனைத்துக் கோணங்களிலும் அலசி ஆராயத் தெரியும். சார்பெடுக்காமல் பேசத் தெரியும். அனைத்துக்கும் மேலாக, எம்மாதிரியான காலத்தில் நாம் இந்தப் பணியைத் தொடங்குகிறோம், எவ்வளவு பெரிய பொறுப்பு நம் தோளில் ஏற்றப்பட்டிருக்கிறது என்பதை அவர்கள் அறிவார்கள்.
உண்மையில் மெட்ராஸ் பேப்பரின் முதலீடு, பலம் எல்லாம் அவர்கள் மட்டும்தான். முதல் இதழ் வெளியாகும்போது அவர்களை உங்களுக்கு முறைப்படி அறிமுகம் செய்கிறேன்.
காத்திருங்கள்.
