டுமீல் என்று முடியும் கதை/பி.ஆர்.கிரிஜா

விவேக்கிற்கு நெடு நாட்களாக ஆசை எப்படியாவது அப்பாவின் துப்பாக்கியை எடுத்துப் பார்ப்பது என்று. அது ஒன்றும் ஏ கே 47 துப்பாக்கி அல்ல, காட்டில் விலங்குகளை வேட்டையாடும் நாட்டுத் துப்பாக்கி.

    தன் நண்பர்களிடம் எப்போதும் பெருமையடித்துக் கொள்வான் விவேக், தன் அப்பா மாதிரி யாராலும் குறிபார்த்து சுட முடியாது என்று. அவர்கள் வசிப்பது மலையை ஒட்டிய ஒரு சிறிய கிராமம். அருகில் வனப்பகுதியில் அவ்வப்போது அவன் அப்பா வேட்டையாடி வருவதை ஒரு பொழுது போக்காக வைத்திருந்தார். அவன் அப்பா முறுக்கு மீசையுடன் அந்த துப்பாக்கியை எடுத்து வெளியில் கிளம்பும் போது ஒருவித பயம் தோன்றும் அவனுக்கு.  அவ்வப்போது அவன் அப்பா அந்த துப்பாக்கியை  சரி பார்க்கும் போது “கை தவறி எங்கே தன் மீது பட்டு விடுமோ!” என்ற அச்சத்தில் நடுங்குவான் விவேக். 

  துப்பாக்கியுடன் அவன் அப்பாவின் தோற்றத்தைப் பார்க்கும் பொழுது திரைப்படத்தில் வரும் ஒரு ஹீரோவைப் போலத் தெரிவார் அவர்.  அதில் அவனுக்கு எப்போதுமே பெருமைதான். என்றாவது ⁷ஒருநாள் அதை எடுத்துப் பார்த்து விட வேண்டும் என்ற வெறி அவனுக்குள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது. பள்ளி செல்லும் நேரம் தவிர எப்போது பார்த்தாலும் அதே நினைவுதான். அப்படித்தான் ஒரு நாள் பள்ளியிலிருந்து வந்த பின் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். கனவில் அவன் அப்பாவின் கையைப் பிடித்துக்கொண்டு அந்த காட்டிற்குள் நுழைந்தான் விவேக். 

    சற்றும் எதிர்பாராத வண்ணம் அவன் அப்பாவின் கையிலிருந்த துப்பாக்கியை பிடுங்க முயற்சித்தான். அவனையும் அறியாமல் அவன் கை விசையை அழுத்த 

    “டுமீல்”

            

2 Comments on “டுமீல் என்று முடியும் கதை/பி.ஆர்.கிரிஜா”

Comments are closed.