
முதலில் முரளி காப்பி…
காலையும் மாலையும் கிரேஸி மோகன் சொன்னது போல், சென்னை வாசிகளுக்கு வேண்டுமானால் முதலில் வேளுக்குடி அப்புறம் காப்பிகுடி.. ஆனால் திருச்சி, குறிப்பாக ஸ்ரீரங்கம் மக்களுக்கு முதலில் “முரளி காப்பி குடி” அப்புறம் தான் எல்லா குடியும். வெறும் காபியை மட்டும் போட்டுத் தந்து கொண்டே இருக்கிறார் கடந்த 35 வருடங்களாக….. ஆசியாவின் மிகப் பெரிய கோபுரமான ஸ்ரீரங்கம் ராஜ கோபுரத்தை தரிசிப்பதற்காக நெருங்கும் போதே கோபுரத்தின் கீழே வலது பக்கம் ஒரு கும்பலை காலையும், மாலையும் பார்க்கலாம். ஆனால் அவர்கள் யாரும் உங்களை பார்க்க மாட்டார்கள்… அது வேட்டி கட்டிய அண்ணாச்சியோ, டூட்டிக்கு செல்லும் போலீஸ்காரரோ, ரங்கனை பார்க்க செல்லும் பட்டரோ எதுவுமே தெரியாமல் இவர்களைப் பார்த்து காபி சாப்பிட வந்த வெளியூர் பயணியோ, எல்லோரும் கையில் டபராவையும், டம்பளரையும் வைத்து கொண்டு கவியரசர் பாடியது போல் ‘ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு’ என்று கருமமே கண்ணாய் காபி சாப்பிட்டு கொண்டு இருப்பார்கள்.
பெரியாழ்வார் பாசுரம் போல காலையில் கறந்து காய்ச்சிய நற்பாலும், பத்மாகாபி பொடி டிகாக்ஷனும், சரியாய் கலந்து கைகளில் தந்தால், அடடா அதுவே அமிர்தம் அல்லவா… அதற்கெனவே இப்பிறவி அடியேனெடுத்திட்டேன் என்று பாடலாம்….. ஸ்ரீரங்கம் போனால் காலையும் (5 மணி முதல் 8 மணி வரை) மாலையும் (3 மணி முதல் 7 மணி வரை) மறக்காமல் சாப்பிடுங்கள். (குறிப்பு : மாலையில் பக்கத்திலேயே ஒரு புண்ணியவான் பஜ்ஜி போடுகிறார்…. ஆனியன், வாழைக்காய், உருளை சட்னியுடன்… நல்ல சூடாய், சுவையாய்.)
காப்பி ஆச்சா? ஸ்ரீரங்கத்தை அப்படியே சுற்றி வாருங்கள், பரவாயில்லை அரங்கனையும் சேவித்து விட்டு வரலாம்….ரங்கநாயகித் தாயாரை மறக்காமல் சேவித்து விட்டு வாருங்கள். தாயார் படி தாண்டா பத்தினி இத்திருத்தலத்தில். பெரிய கோவில் அல்லவா, வெளியே வரும்போது நிச்சயம் பசிக்கும்… உடனே வழியில் கிடைக்கும் ஜூஸ், நொறுக்கு என்று பாய்ந்து விடக்கூடாது. கொஞ்சம் கட்டுப்பாடோடு நடந்து கொண்டு ரங்கா ரங்கா கோபுரத்தை விட்டு வெளியில் வந்து ராஜ கோபுரம் நோக்கி நடக்கும் போது, தெற்கு சித்திரைவீதி வரும், அதில் இடது பக்கம் திரும்பினால் இரண்டாவது கடை “மாருதி டிபன் சென்டர்” ஆவி பறக்க இட்லி எடுத்து வைத்துக் கொண்டிருப்பார்கள்.

தெருவின் ஓரமாகவே காற்றாட பெஞ்ச் போட்டிருப்பார்கள். உடனே இடம் பிடித்து விடுங்கள், வேறு யாரவது உட்கார்ந்து விட்டால் எழுந்து கொள்ள நேரம் ஆகும் (டேஸ்ட் அப்படி) கடை உள்ளுக்குள்ளும் ஒரு 5 – 6 பேர் உட்கார இடம் உண்டு.
வாழை இலை போட்டு தண்ணீர் வைத்து என்ன வேண்டும் என்று கேட்ட உடன், ரெண்டு இட்லி என்று கேளுங்கள்… சட்னி, சாம்பார், வீட்டில் தயார் செய்த மிளகாய்ப்பொடி, நல்லெண்ணெய் என்று மூன்று நான்கு தொட்டுக்க உண்டு.
நீங்கள் போவது புதன் அல்லது ஞாயிறு மாலை என்றால், இது எல்லாம் வேண்டாம் கடப்பா ஊற்றுங்கள் என்று சொல்லி, இட்லி மேலே ஊற்றி பிசைந்து அடியுங்கள்…. ஆஹா… ஆஹா…. அப்படி ஒரு சுவை!! (கடப்பா என்பது குருமா போல சைட் டிஷ் தான், மராட்டியர்கள் தஞ்சைக்கு அறிமுகம் செய்தது, பயத்தம்பருப்பு கொண்டு செய்யப்படுவது, மிதமான மசாலா சேர்த்து, செய்வதால் இது இட்லி, தோசை, பூரிக்கு பிரமாதமான பக்க வாத்தியமாக இருக்கும்)

அடுத்து மாருதி ஓனர் சரஸ்வதி மாமியின் ஸ்பெஷலான அடை – அவியல் ஆடர் செய்யுங்கள். ஆனியன், நெய், சாதா என மூணு விதம் உண்டு. மூன்றுமே மனதை மயக்கும். அதே போல ஆனியன் ஊத்தப்பம், வடிவேலு ஊத்தப்பத்திற்கு சொல்வது அத்தனையும் நடப்பதை கண்ணால் பாக்கலாம் . உங்கள் இலைக்கு அதே மொற மொறப்போடு, நெய் மினுங்கலோடு கொண்டு வந்து வைக்கும்போதே, வாயில் ஊறும் காவேரி, சிவ சமுத்திர நீர்விழ்ச்சியாய் வெளியேறும் (ஜொள்ளு ஊத்தும்).
பூரி கிழங்கு இவர்களின் தனிச்சுவை ஐட்டம். அந்த கிழங்கு ஒன்றே போதும் அடுத்த செட் ஆர்டர் செய்து விடுவீர்கள். வெங்காயம், உருளைக்கிழங்கு, பச்சைமிளகாய், இஞ்சி எல்லாம் இந்தியா போல தனியாகவும் தெரியும், சேர்ந்தும் இருக்கும் (unity in Diversity). இவை எல்லாம் சாப்பிட்ட பிறகு வயிற்றில் இடம் இருந்தால், இரவு கொஞ்சமாய் மோர் சாதம் சாப்பிடுபவர் என்றால், அருமையான தயிர் சாதம் உண்டு. சரிவிகிதத்தில் தயிர், வெண்ணை, பச்சைமிளகாய், கொத்தமல்லி, கருவேப்பிலை கலந்து, தாளித்து மணக்க, மணக்க இலையில் வைத்தால் மணி வயிற்றுக்கு மகிழ்ச்சியாய் சென்று சேராதோ?
ஒரு செல்ல “எவ்வ்” உடன் எழுந்திருந்து, நம்மகிட்ட இல்லாத?! நல்ல பழக்கமான நாம சாப்பிட்ட இலைய நாமளே எடுத்து தொட்டியில் போட்டு கையை (மட்டும்) கழுவிடுங்கள். கணக்கு சொல்லி காசு கொடுங்கள். நிச்சயமாய் நீங்கள் நினைக்காத விலை தான். நவம்பர், டிசம்பர் என்றால் இரவு குளிருக்கு சூடாய் சுவையாய்…
பின் அப்படியே சின்னதாய் ஒரு நடை ராஜ கோபுரம் நோக்கி, வழியில் பனங்கல்கண்டு பால் நம்மை பாசத்தோடு அழைக்கும், கைவிடலாமா? அதற்கு நமது ஆதரவு என்றும் உண்டு.
ஸ்ரீரங்கத்தில் மனமும் வயிறும் நிறைய “மாருதி டிபன் சென்டர்” பக்கத்திலேயே அவர்களின் தங்கும் விடுதியும் இருக்கிறது.
போறும் சார், விட்டா திருச்சியை விட்டு வரமாட்டிங்க போல என்று நீங்கள் கேட்பது புரிகிறது…

அருமையான வர்ணனை. சாப்பிட்ட திருப்தி.