சிறந்த சிறு கதைகள் – ஒரு தொகுப்புக்கான சில குறிப்புகள் /க.நா.சுப்ரமண்யம்

தொகுதி : இரண்டு

கதை என்பது ‘பொய்யை அடிப்படையாகக் கொண்ட ஒரு சித்திரம் – அல்லது பல சித்திரங்கள்’ என்று சொல்லலாம். பொய்யே கலக்காத கதைகளும் இருக்கலாம்தான். ஆனால் உலகத்தில் எந்த ஆதி இலக்கியத்திலும் பொய் சிறிதும் கலவாத கதை இருந்ததாகத் தெரியவில்லை. சத்தியத்தை நிலைநிறுத்தத் தோன்றிய அரிச்சந்திரன் கதையும்கூடப் பொய்யை அடிப்படையில் அடக்கிய கதைதான். தொல்காப்பியத்தில் தமிழ்ச் சிறுகதை பற்றிக் கூறுகிற ஆதாரம் இருப்பதாகக் கூறிப் பெருமைப்படுகிற (படுத்துகிற) பண்டிதர்களும்கூட இந்தப் ‘பொய்ச்’ சூத்திரத்தைத்தான் சொல்லுகிறார்கள். அது கதையின் இலக்கணம்; இலக்கிய அந்தஸ்தை எட்டாத எல்லாக் கதைகளுக்கும் லக்ஷணம் அது.

கதை என்பது இலக்கியத்தில் ஒரு தனித்துறையல்ல என்பது வெளிப்படை. அது எல்லாப் பகுதிகளுக்கும் பொதுவான ஒரு அம்சம். அதிலே இலக்கியத்தரம், மனிதத்தன்மைத்தரம் இரண்டும் சொல்ல இயலாது. நீதிக்கதை, உபயோகமானது, அசுவாரசியமானது, சுவாரசியமானது என்று பிரிவுகள் வேண்டுமானால் சொல்லலாமே தவிர, இலக்கியபூர்வமான தராதரம் சொல்ல இயலாது. கதை என்பது பொதுப்பட கவிதை, நாடகம், காவியம், வசன நூல்கள் பல, இவற்றிற்கெல்லாம் ஆதாரமாக இயங்குகிற ஒரு அடிப்படைக் கோப்பு. ஆனால் சிறுகதை என்பதோவெனில் இலக்கியத்தில் ஒரு தனித்துறை – அதாவது பரணி போல, உலா போல, குறவஞ்சி போல, காவியம் போல, நாவல் போல ஒரு தனித்துறை. இந்தச் சிறுகதை என்கிற இலக்கியத் தனித்துறை உலக இலக்கியத்திலேயே தலையெடுத்துச் சுமார் நூற்றிமுப்பது வருஷங்கள்தான் ஆகின்றன. எட்கார் ஆலன் போ என்கிற அமெரிக்க இலக்கியாசிரியர் தோற்றுவித்த இலக்கியத் தனித்துறை இது. (ஆனால் ஆங்கில, மேலை நாட்டுப் பண்டிதர்களில் சிலரும்கூட இதை இவ்வளவு தெளிவாக ஏற்றுக்கொண்டுவிடுவது கிடையாது. பைபிளில் இருக்கிறது சிறுகதை, கிரேக்க இலக்கியத்தில் உண்டு என்று பண்டிதர்களுக்கே உரிய பாணியில் அங்கும் சண்டைகள் உண்டு). இத்துறையில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ப்ரெட் ஹார்ட்டி, ஹாதார்ண் போன்ற அமெரிக்க ஆசிரியர்களும் ப்ரான்ஸ்வா காப்பி, மெண்டெஸ், மோபாஸான் போன்ற பிரெஞ்சு ஆசிரியர்களும் செக்காவ் போன்ற ருஷ்ய ஆசிரியர்களும் போற்றி வளர்த்து வளம் செய்தார்கள். இருபதாம் நூற்றாண்டிலே ஆம்பிரோஸ் பியர்ஸ், ஷெர்வுட் ஆண்டர்ஸன், ஹெமிங்வே, பாக்னர், வில்லியம் ஸரோயன் போன்ற அமெரிக்கர்களும் லாகர்லெவ், வான் ஹெய்டன்ஸ்டாம், டாபெர் ஹால்ஸ்டிராம் போன்ற ஸ்வீடிஷ்காரர்களும் பிராண்டெல் லோ, பாலஸெக்கி போன்ற இத்தாலியர்களும், கார்க்கி, ப்யூனின் போன்ற ருஷ்யர்களும், ஜாய்ஸ், ஓகானர் போன்ற ஐரிஷ்காரர்களும், காப்கா, தாமஸ் மான் போன்ற ஜர்மானியர்களும் அந்டோல் பிரான்ஸ் போன்ற பிரஞ்சுக்காரர்களும் இலக்கிய அடிப்படையில் வளர்த்து வந்திருக்கிறார்கள். மேலை நாட்டு அவசர யுகத்தின் தேவைகள் பலவற்றால் ஆங்கிலத்திலும், வேறு ஐரோப்பிய மொழிகளிலும் பத்திரிகைகள் யுகமும் அவசர யுகமும் தோன்றிய பின், கதை, சிறுகதை என்கிற இலக்கிய உருவம் பெற்றுப் பின்னர் பத்திரிகைக் கதை என்று ஒரு தேய்வும் பெற்றது. இந்தப் பத்திரிகைக் கதைகளுக்குச் சிறந்த உதாரணங்களாக, ஸாமர்ஸெட் மாம், ஏ. இ. கோப்பார்டு, இர்வின் ஷா முதலியவர்களைச் சொல்லலாம்.

மேலை நாட்டில் தோன்றிய இச்சிறுகதை இலக்கிய வளம் இருபதாம் நூற்றாண்டிலே, இந்தியாவிலும் சீனாவிலும் ஜப்பானிலும் புது இலக்கியத்தில் இந்திய உருவமும், சீன உருவமும், ஜப்பானிய உருவமும் எடுத்தது. சென்ற முப்பது வருஷங்களில் ஜப்பானியச் சிறுகதை பிரமாதமாக வளர்ச்சி பெற்றுள்ளது. சீனத்துச் சிறுகதை ஆரம்பத்தில் பிரமாதமான வளர்ச்சி பெற்று, அரசியல் காரணங்களினால், சோஷலிஸ யதார்த்தவாதம் என்கிற குட்டையிலே (இலக்கிய உத்தியிலே) வந்து தேங்கிவிட்டது. சிறுகதைக்கு இந்திய உருவம் தருகிற முயற்சியை ரவீந்திரநாத தாகுர் சிறப்பாகச் செய்தார்.

தாகுரின் சிறுகதை முயற்சியை வ. வே. சு. ஐயரும், கவி சுப்ரமணிய பாரதியாரும் பின்பற்றினார்கள். வ. வே. சு. ஐயர் ‘குளத்தங்கரை அரசமர’த்தில் தாகுர் செய்த காரியத்தையே ஓரளவு தமிழில் வெற்றியுடன் திரும்பவும் செய்து பார்த்தார். அவர் எழுதிய மற்ற கதைகளிலும் அவர் ஓரளவுக்குப் பிறர் செய்ததையே பின்பற்றினார் – எனினும் ஓரளவு வெற்றிபெற்றார் என்பதனால் தமிழில் சிறுகதைக்கு வ. வெ. சு. ஐயரைத்தான் தந்தையென்று சொல்லுவது வழக்கமாகிவிட்டது. கவி பாரதியாரின் கதைகளைச் சிறுகதைகள் என்று சொல்லமுடியாது. வெறும் கதைகளாகவே சொன்னார் அவர். ஆங்கில, பிரெஞ்சு மொழிச் சிறுகதைகளையும், தாகுர் சிறுகதைகளையும் அறிந்தேதான் பாரதியார் தன் கதைகளை எழுதினார். ஆனாலும் உருவத்தைவிட அவருக்குச் சீர்திருத்தக் கருத்திலே மோகம் அதிகமான படியினாலே, அவர் கதைகள் சிறுகதைகளாக அமையவில்லை. பல கதைகள் கதைகளாகவும்கூட அமைதி பெறவில்லை. உதாரணமாக பாரதியாரின் ‘பூலோகரம்பை’யைச் சொல்லலாம். அற்புதமான ஒரு கதையை உருவம், அல்லது ஒரு உருவமல்லாத பிரக்ஞையுடன் செய்யாமல் வழிந்தோட விட்டுவிடுகிறார் பாரதியார். இந்தக் குறை மாதவையாவின் ‘குசிகர் குட்டிக் கதைக’ளிலும் உண்டு என்றுதான் சொல்லவேண்டும்.