காற்று கவிதைகள்/ கி. தாமரைச்செல்வன்

காதோரம் காற்று
ஏதேதோ சொல்லி விட்டுப்
போகிறது.

காற்றின் நிசப்தம்
கனக்கின்ற மௌனம்
காரணமேன் ?

அரையிருளில் வானம்
அடிவருடும் காற்று
மெலிதான தூறல்.

அரசமரத்தை அசைக்கும் காற்று
நாணலின் தலையைக் கோதிச் செல்கிறது .

உட்செலும் போது பிராணமாய்
வெளி வரும் போது கரியமிலமாய்
ஜாலம் காட்டுகிறது காற்று .

தென்றலாய் தீண்டும்
வாடையாய் வசீகரிக்கும்
புயலாய் புழுதி கூட்டும்
காற்று .

காட்டு மரங்களையே
ஆட்டுவிக்கும் காற்று
கண்ணுக்குத் தெரிவதில்லை .

பூட்டிய மனங்களைத் திறக்கும்
புனிதச் சாவி
காற்று .

குப்பையைக் கோபுரத்திலும்
அடுத்த நொடி அடித் தளத்திலும்
கொண்டு சேர்க்கும் காற்று .

உலகம் நினைக்கிறது
‘ நான் இல்லையேல் காற்று இல்லை ‘
காற்றுக்குத் தெரியும் உண்மைக் கதை .

ஒளி புக முடியா இடத்திலும்
இருள் புக முடியா தடத்திலும்
சரளமாய் நுழைவது காற்று .

கண்ணுக்குத் தெரியாதன
நம்ப மறுக்கும் உலகம்
காற்றை நம்பியே சுவாசிக்கின்றது .

காற்றின் தலைகோதல்
காணாத தலை
இருந்து என்ன பயன் ?

புயலுக்கான வரவேற்பை
வாசிக்கிறது
காற்றின் மௌனம் .

ஒலியாய்க் கேட்கும் காற்றை
விழியால் காண
விழைகிறது மனம் .

One Comment on “காற்று கவிதைகள்/ கி. தாமரைச்செல்வன்”

Comments are closed.