ஔவையாரின் இரு பாடல்கள்/வளவ துரையன்

1.விரகர் இருவர் புகழ்ந்திட வேண்டும்
விரல்நிறை மோதிரங்கள் வேண்டும் – அரையதனில்
பஞ்சேனும் பட்டேனும் வேண்டும் அவர்வித்தை
நஞ்சேனும் வேம்பேனும் நன்று. 2
கலைவித்தை எப்போது எடுபடும்? தந்திரமாய் இரண்டுபேரைப் புகழவைக்க வேண்டும். விரல்களில் மோதிரம் போட்டிருக்க வேண்டும். நிழலில் பஞ்சுமெத்தையோ பட்டோ விரித்து அதன்மேல் அமர்ந்திருக்க வேண்டும். இப்படி இருந்துகொண்டு வித்தையை வெளிப்படுத்தினால், அது நஞ்சானாலும் வேம்பானாலும் நன்று என்பது உலகியல்பு

2.வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கறையான்
தேன்சிலம்பி யாவர்க்கும் செய்யரிதால் – யாம்பெரிதும்
வல்லோமே என்று வலிமைசொல வேண்டாங்காண்
எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது. 3
தூக்கணாங்குருவிக் கூடு, கறையான் புற்று, சிலந்திவலை, ஆகியவற்றை எல்லாராலும் செய்யமுடியாது. எல்லார்க்கும் ஒவ்வொன்று எளிது. எனவே நானே வல்லவன் என்று யாரும் தம்பட்டம் அடித்துக்கொள்ளக் கூடாது.