
“சுஜாதாட்ஸ் என்ற தலைப்பில் இரண்டரை வருஷத்துக்கு முன் ஒரு மாலைப் பத்திரிகையில் சில கட்டுரைகள் எழுதினேன். அவைகள் புத்தக வடிவில் வரவில்லை. அந்த மாலைத் தாள் பொருளாதாரக் காரணங்களால் நின்று போயிற்று.
அந்தக் கட்டுரைகள் சிலவற்றை மீண்டும் கொடுப்பதில் எனக்குத் தயக்கமில்லை.”
இப்பொழுது அவரின் கட்டுரை.
எனது நண்பர் ராமனாதன் தன் மனைவி அகிலா ( மாற்றப்பட்ட பெயர்கள் ) விடமிருந்து பரஸ்பர சம்மதத்துடன் டிவோர்ஸ் வாங்கி
விட்டார். வயசு 40. முதலில் சுதந்திரமும் மீண்டும் பிரம்மச்சாரி வாழ்க்கையும் கிடைத்ததைக் கொண்டாட தன் திருவான்மியூர் வீட்டில் ம்யூஸிக் ஸிஸ்டம் ஐகூஸி என்று அமைத்து ராத்திரி நண்ப , நண்பிகளை அழைத்து ,கலக்கலாக பார்ட்டி வைத்து , கிழக்கு வெளுக்கும்
வரை குடித்துப் பாடியாடி , சந்தோஷம் என்கிற வஸ்துவைத்
தேடினார்.
இதெல்லாம் ஓரிரு மாதங்களுக்கு மேல் தாங்க வில்லை. 40 வயதில் சில காரியங்கள் சிரமப்படும்.
தொப்பையையும் , முதல் நரைகளையும் மறைத்து ,என்னதான்
மீசை வைத்துக் கொண்டு கழுத்தில் சில்க் ஸ்கார்ஃபைக் கட்டினாலும்
மாமாத்தனமான தோற்றத்தை மறைக்க முடியவில்லை. மேலும் குழந்தைகளிடமிருந்து பிரிந்திருப்பது அவரைத் தாக்க ஆரம்பித்தது. மனைவியோடு இருந்தவரை அவர் குழந்தைகளைக்
கவனித்ததே இல்லை. அது அவள்
டிபார்ட்மெண்ட்.
எப்போதாவது ஆபீசிலிருந்து திரும்பும்போது பார்க்கும்போது ‘எப்டி இருக்கேம்மா பாப்லு ‘ என்று மகளையும் ‘ எப்டி இருக்கே பாப்ஜி ‘
என்று மகனையும் கன்னத்தில் இலேசாகத் தட்டிக் கொடுத்து விசாரித்து விட்டுத் தன் பாட்டுக்கு
ஜிம்கானா போய் விடுவார். மனைவி
மீசில்சிலிருந்து ரிப்போர்ட் கார்டு வரை கவனித்து வந்தாள். ( விவாக
ரத்துக்குக் காரணங்களில் இதுவும் ஒன்று. )
இப்பொழுது பிரிந்து கோர்ட் தீர்ப்பின்படி ” தந்தை இரு குழந்தைகளையும் வாரம் இரு நாள் சந்திக்க உரிமை உள்ளது.அதற்குத் தாய் ஏற்பாடு செய்ய வேண்டும். தடுக்கக் கூடாது ” என்று தீர்ப்பு சொன்னதிலிருந்து இருவருமே இந்த இரு தினங்களை ஆவலுடன் எதிர் பார்க்கிறார்கள். அகிலாவுக்கு
இரண்டு நாளாவது நிம்மதி.
ராமனாதனுக்கு ரெண்டு நாள் சந்தோஷம்.
ஆம் சதோஷம்தான்.
வெள்ளிக்கிழமை காலையே அகிலா சமையல் மாமிக்கு போன் பண்ணி ” குழந்தைகளை அழைத்துப்
போவதாயிருந்தால் ஆறு மணிக்குள்
வரச் சொல்லுங்க. நான் ஜெர்மன் க்ளாஸ் , கீதா க்ளாஸ், அல்லது ரெய்க்கி போகணும் ” என்று சொல்வாள்.
அவரும் வாரம் தவறாமல் அழைத்து வந்து விடுகிறார். புருஷன் பெண்சாதி சந்திப்பதே இல்லை.
குழந்தைகளிடம் ஒருவர் மற்றவரைப் பற்றி விசாரிப்பதே இல்லை. சமர்த்தான குழந்தைகள். அம்மா அப்பாவுக்குள் சரிப்பட்டு வரவில்லை.
அந்த டாப்பிக்கே எடுக்கக் கூடாது என்ற விபரம் தெரிந்தவர்கள். அதனால் கிடைத்த நேரத்தை சுவாரஸ்யமாகவே பொழுது போக்குவார்கள்.( அதில் கொஞ்சம்
அகிலாவின் யோசனைகளும் உண்டு .)
ராமனாதன் அவர்களை ஐஸ்க்ரீம் பார்லர் , டிஸ்ஸி வேர்ல்ட் , வி .ஜி.பி,
இண்டர் நெட் கஃபே என்று கேட்ட இடத்துக்கெல்லாம் தன் லான்சரில் அழைத்துச் செல்கிறார்.
அதனுடன் அப்பா ஸ்தானத்தில் குழந்தைகளை வளர்ப்பது பற்றி
வாரம் இரண்டு நாளில் புதிய சில
தந்திரங்களையும் கற்று வருகிறார்.
மகள் சாப்பிடப் படுத்துவாள். அவளை
அவள் போக்கில் அப்படியே விட்டு விடுவதா அல்லது நைச்சியம் பண்ணி சாப்பிட வைப்பதா ? மகனைக் குளிக்க வைக்க என்ன தந்திரம் செய்ய வேண்டும் ? அவன் ஸ்னீக்கர் ஜோடியை , ஒன்று வாசலிலும் , மற்றொன்று சோபா அடியிலும் இல்லாமல் ஒரே இடத்தில் கழற்றி வைக்கச் செய்வது எப்படி ?
மகளுக்குத் தலை பின்னுவது எப்படி ? போன்ற எளிமையான
சந்தோஷங்களையெல்லாம் கற்று
வருகிறார் .
அவர்களிடமிருந்து பல பொது அறிவு
விஷயங்களைப் புதுசாகக் கற்றுக் கொள்கிறார் ‘கடலை கொடுப்பது ‘ என்பதற்கு என்ன அர்த்தம் என்று மகள்தான் சொன்னாள். பலூனுக்கு ஸ்பெல்லிங்கில் இரண்டு எல் , இரண்டு ஓ இருக்கிறது என்று மகனிடமிருந்துதான் தெரிந்து கொண்டார்.கிரிக்கெட்டில் ‘ ரிவர்ஸ் ஸ்விங் எப்படிப் போடுவது ‘ என்பதும் அவனிடமிருந்தே . குழந்தைகளுடன்
தனியாக இருக்கும் போது அவர்கள் சுவாரஸ்யமானவர்கள் என்பதை
அறிந்து கொண்டார்.
ஓட்டப் பந்தயத்தில் பாப்லுவுக்கு ஈடுபாடு இருக்கிறது என்பதையும்
பாப்ஜிக்கு இரண்டுகைகளாலும் பத்து விரல் கொண்டு கீபோர்ட்
வாசிக்க வருகிறது என்பதையும் அறிந்து கொண்டார்.
படிப்பில் ரொம்பக் கெட்டிக்காரர்கள்
என்று இல்லாவிட்டாலும் சுமாராகப் படித்து ஆரோக்கியமான எண்ணங்கள் கொண்ட குழந்தைகள் ,
தம் நிலைமைக்காக அம்மா அப்பாவை வெறுக்கவில்லை என்பதையும் கண்டு கொண்டார்.
இதையெல்லாம் ராமனாதன் சொல்லித்தான் எனக்குத் தெரியும்.
நான் அவரைக் கேட்டேன். ” இப்படியே
மெல்ல மெல்ல அகிலாவுடன் சமரசம்
பண்ணிக் கொண்டு சேர்ந்து விடப் பாருங்களேன்.”
” அது மட்டும் வேண்டாம் ” என்றார் உடனே .
” ஏன் ? “
” காரணம் அவளுடன் சேர்ந்து வாழ்ந்த பத்து வருஷத்தை விட நான் இந்த பத்து மாசத்தில் அதிக நேரம் என் குழந்தைகளுடன் இருந்திருக்கிறேன் ” என்றார்.
அமெரிக்காவில் இந்த நிலைமை
சாதாரணம்.நமக்குக் கொஞ்சம் புதுசு.
டிவோர்ஸ் வாங்கியவர்களின் குடும்ப நிலையை அழகாக விளக்கும்
கட்டுரை. குழந்தைகளைப் பெற்றோர்களும் , பெற்றோர்களைக்
குழந்தைகளும் புரிந்து கொள்கிறார்கள் என்பதை அப்போதே கூறியிருக்கிறார். தொலை நோக்குக் கொண்ட சுஜாgதா சுஜாதாதான். அவரது எழுத்தும்
எழுத்துத்தான் !
உபயம் : அறிவி ஜீவி சுஜாதா வாசகர் குழு
