வெ.சாமிநாதசர்மாவின் நூல்கள்/எம்.டி.முத்துக்குமாரசாமி

வெ.சாமிநாதசர்மாவின் நூல்களை இன்று யாரும் வாசிக்கிறார்களா என்று தெரியவில்லை. புராதன இந்தியாவின் அரசியல், கிரீஸ் வாழ்ந்த வரலாறு, ரூசோ, பிளேட்டோ, ஹிட்லர், முசோலினி, மாஜினி ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகள் போன்ற முக்கியமான நூல்களை எழுதியவர். சீனா, துருக்கி, ரஷ்யா ஆகிய நாடுகளின் வரலாறுகளையும் சாமிநாத சர்மா எழுதிருக்கிறார். “பிளட்டோவின் அரசியல்”, ரூஸ்ஸோவின் ‘சமுதாய ஒப்பந்தம்” ஆகிய நூல்களை அவர் அருமையாக மொழிபெயர்த்திருக்கிறார். அவருடைய ‘பர்மா வழி நடைப்பயணம்’ இரண்டாம் உலகப்போரின்போது பர்மாவிலிருந்து தமிழகத்திற்கு அவரும் அவர் மனைவியும் போருக்குத் தப்பிக் கால்நடையாக வந்தபோது ஏற்பட்ட இன்னல்களைச் சொல்லும் நூல். பர்மிய உழவர்களைபற்றிய சித்திரம், நாகர்கள், மணிப்புரிகள் ஆகியோரைப் பற்றிய ஒப்பீடு, மணிப்புரிமக்களின் கலையுணர்வு எனப் பலவற்றையும் சாமிநாதசர்மா எழுதியிருக்கிறார். ‘பர்மா வழி நடைப்பயணம்’ நூலில் ‘ஒரு சட்டைக்குள் இருவர்’ என்ற அத்தியாயத்தில் அவர் எழுதியிருக்கும் இந்தப் பத்தியை நான் அடிக்கடி நினைவுபடுத்திக்கொள்வேன்.

“மனிதன் எப்பொழுதுமே தனக்கு மிஞ்சின ஆபத்திற்கோ, துன்பத்திற்கோ உட்படுகிறபோது அவன் உள்ளத்திலுள்ள அற்ப சொற்ப ஈரங்கூட உலர்ந்து போய்விடுகிறது. கல்நெஞ்சனாகிவிடுகிறான். பனிக்குளமாக வேண்டிய அவன் கண்கள் பாழுங்கிணறுகளாகின்றன. “வாழ்வாவது மாயம் மண்ணாவது திண்ணம்” என்று யாரோ எப்பொழுதோ பாடியது அவனுக்குத் தெரிந்திருக்குமோ, தெரியாதோ, அந்த வாசகத்தின் உண்மையைச் நேரடியான அனுபவத்தின் மூலம் உணர்ந்துகொண்டுவிடுகிறான். ஆனால் இந்த அனுபவம் சிறிது நேரந்தான், அவனிடம் தங்கியிருக்கிறது. “ஊருஞ்சதம், உற்றாருஞ்சதம், தானும் தான் பெற்ற பேரும் பொருளும் சதம், எல்லாம் சதம்” என்ற எண்ணத்தின் மீது ஊர்ந்து சென்று பழையபடி சம்சாரச்சூழலில் பந்த பாசங்களில் சிக்கிக்கொண்டு நெளிய ஆரம்பிக்கிறான்.”