பாலகுமாரன் நாவல்களில்..

பாலகுமாரன் நாவல்களில் மெர்குரிப் பூக்கள், இரும்புக் குதிரைகள் ஆகியவை மிகவும் குறிப்பிடத்தகுந்த படைப்புகளாகும்.

“கல்கியில் வெளிவந்த இரும்புக் குதிரை ஒரு மிகச் சிறந்த படைப்பு. எல்லாவற்றுக்கும் மறுபக்கம் உண்டு என்பதை அந்த நாவல் காட்டியது. அடித்தள மக்களைப் பற்றிய மத்திய தர வர்க்கத்தின் கருத்துக்களை புரட்டிப்போட்டது. குதிரையைப் பற்றிய நிறைய கவிதைகள் அந்த நாவலின் ஊடே இருந்தன. கல்கி மாதிரியான ஒரு வெகுஜன பத்திரிகையில் அதைச் செய்தது பெரிய சாதனை” என்கிறார் எழுத்தாளரும் பத்திரிகையாளருமான மாலன்.

இளைஞர்களை பெரிதும் பாதித்த எழுத்தாளர்

உடையார் என்ற பெயரில் ராஜராஜ சோழனைப் பற்றியும் தஞ்சைப் பெரிய கோவிலைப் பற்றியும் 6 பாகங்களில் இவர் எழுதிய நாவல் இவருடைய குறிப்பிடத்தக்க படைப்புகளில் ஒன்று.

“அவரை நவீன எழுத்தாளர் இல்லை என்று சொல்ல முடியாது. நாவலில் கவிதைகளைப் பயன்படுத்தியதே ஒரு நவீன முயற்சிதானே. பிற்காலத்தில் ஆன்மீகத்தைச் சொல்ல அவர் தன் எழுத்தைப் பயன்படுத்தியது குறித்து பலருக்கு விமர்சனம் இருக்கலாம். ஆனால், அது அவருடைய தேர்வு” என்கிறார் மாலன்.

80களின் துவக்கத்தில் இளைஞர்களை வெகுவாக பாதித்த எழுத்து பாலகுமாரனுடையது என்கிறார் எழுத்தாளரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளருமான து. ரவிக்குமார்.

தமிழ் கலாசாரத்தில் ஈடுபாடு

“மெர்க்குரிப் பூக்கள் வடவமைப்பிலும் நேர்த்தியிலும் மிகச் சிறந்த படைப்பு. அந்தத் தொடர் வெளிவந்த காலத்தின் இளைஞர்களின் மனநிலையை அது வெகுவாகப் பாதித்தது. தமிழ்க் கலாசாரம் தொடர்பான விஷயங்களில் மிகுந்த தேர்ச்சியும் ஈடுபாடும் இருந்தது அவருக்கு. அதைப் படிக்க வேண்டும் என்பதை அவர் உணர்ந்திருந்தார். இவரை ஜெயமோகனோடு ஒப்பிட்டால், பல முயற்சிகளில் பாலகுமாரன் மேலானவர். காரணம், தமிழ் மரபு மீது அவருக்கு இருந்த புலமைதான் காரணம்” என்கிறார் ரவிக்குமார்.

பாலகுமாரன் கடந்த பல வருடங்களாகவே ஆன்மீகம் குறித்து எழுதுவது, யோகி ராம்சுரத்குமார் சத்சங்கம் என்ற பெயரில் ஆன்மீகக் கூட்டங்களை நடத்துவது எனச் செயல்பட்டுவந்தார். “பாலகுமாரன் தன் ஆன்மீகத்தை மற்றவர்களின் மீதான வெறுப்பாக மாற்றவில்லை. அது மிக முக்கியமானது” என்கிறார் ரவிக்குமார்

நன்றி: பிபிசி தமிழ்

முகநூலில் தெரிவித்தவர் : கந்தசாமி ஆர்.