திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில்/பென்னேஸ்வரன்

திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள வீட்டில் நான், பேராசிரியர் செ.ரவீந்திரன், ந.முத்துசாமி மூவரும் இரவு ஒரு மணி வரை மது அருந்திவிட்டு ஆட்டோ பிடித்து சின்மயா நகரில் அவருடைய வீட்டுக்குப் போவோம்.

உள்ளே சென்று தூங்கிக் கொண்டிருந்த மாமியை உலுக்கி எழுப்புவார்.

“குஞ்சலி, ரவீந்திரனும் பென்னேஸ்வரனும் வந்திருக்காங்க” என்று எழுப்பி விடுவார்.

மாமி, தூக்கக் கலக்கத்துடன், “வாங்கோ, கொழந்தைகள் எல்லாம் வரல்லையா?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே சென்று விடுவார்.

சிறிது நேரத்தில் உள்ளிருந்து சூடாக வார்த்த தோசை, மிளகாய்ப் பொடியோடு மாமி தட்டை கையில் திணித்து விட்டு சட்டுவத்துடன் உள்ளே போவார்.

மிகவும் குற்ற உணர்ச்சியோடு சாப்பிடுவோம். சாப்பிடவில்லை என்றால் முத்துசாமியும் மாமியும் விடமாட்டார்கள்.

காலையில் காப்பியோடு 6.00 மணிக்கு மாமி எங்களை எழுப்பிவிடும்போது முத்துசாமி முற்றத்தில் ஊஞ்சலில் ஆடிக்கொண்டே பூனையைக் கொஞ்சிக் கொண்டிருப்பார்.

ஞாயிற்றுக்கிழமைகளில் காசியை விட்டு தன் பூனைக்கு மீன் வாங்கி வரச்சொல்லி ஊட்டிவிடுவார்.

மிகவும் ஆச்சாரமான முத்துசாமியின் தாயார் அவரை செல்லமாகக் கடிந்து கொள்வார்.

“ஏண்டா இப்படி படுத்தறே? என்ன கருமமோ”

முத்துசாமிக்கு பூனைகள் மிகவும் பிடிக்கும்.

முத்துசாமி நினைவில் எங்கள் வீட்டில் நான்கு பூனைகளில் ஒன்றுக்கு முத்துசாமி என்று பெயர் வைத்தேன்.

இன்று முத்துசாமி பிறந்தநாள் என்று மு.நடேஷ் ஆசான் டைம்லைனில் படித்தேன்.

மாமியையும் முத்துசாமியையும் மிக்க நெகிழ்வுடன் நினைவு கூருகிறேன்.

One Comment on “திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில்/பென்னேஸ்வரன்”

Comments are closed.