
புதுமைப்பித்தனின் கதைகளிலேயே மிகச்சிறிய சிறுகதை இதுவாகத்தான் இருக்கும். “சன்னல்” என்பதைக்குறிக்கும் சொல்லே “சாளரம்” என்பதாகும். சாளரம், சாலேரம், காலதர் எனும் பழந்தமிழ்ச்சொற்கள் ‘சன்னல்” என்னும் போர்த்துகீசியச் சொல் வந்ததால் மறைந்துவிட்டன.
இச்சிறுகதை மூன்றே பக்கங்கள் கொண்டதாகும். ஓடிக்கொண்டிருக்கும் ஒரு பேருந்தில் நடக்கும் கதை இது. அப்பேருந்தில் பயணம் செய்யும் அரைமீசைப் பாதிரியார், மூட்டை சுமந்து கொண்டிருக்கும் ஒருவர், ஒரு கிழவர், ஓர் உச்சிக்குடுமி, புத்தகங்கள் சுமந்து கொண்டிருக்கும் ஒரு சிறுவன், பெயர் தெரியாத இருவர் ஆகியோரின் உரையாடல்களே கதையாக மாறி உள்ளது. எவருக்குமே புதுமைப் பித்தன் பெயர் சூட்டாத புதுமை செய்துள்ளார்.
அன்னிபெசண்ட் அம்மையாரின் மரணம் குறித்து உரையாடல் தொடங்குகிறது. சாவுச்செய்தி கேட்டவுடனேயே மனம் அது நம்மவராக இருக்குமா எனத் துடிக்கிறது. இரண்டு மூன்று திடீர்ச்சாவுகள் பேச்சில் வருகின்றன.
இறுதியில் பேருந்து நிற்கிறது. இறங்குகிறார்கள். திருமண ஊர்வலம் ஒன்று செல்கிறது. “அப்பொழுது நாதஸ்வரக்காரன் மிகுந்த சுவாரஸ்யமாக “சாந்தமுலேக” என்ற கீர்த்தனத்தை அப்படியே உருக்கி வார்த்துக் கொண்டிருந்தான்” என்கிறார் புதுமைப் பித்தன்.
இவ்வளவு நேரம் மரணம் பற்றியே தங்கள் மனச்சன்னல் வழி பார்த்தவற்றைப் பேசியவர்கள் இப்போது அமைதி அடைகிறார்கள். ”அவர்கள் எல்லாரும் அவிழ்த்து உதறிய நெல்லிக்காய் மூட்டை மாதிரிப் பிரிந்தார்கள் என்று கதை முடிகிறது.
