ஒருமுறை, நாங்கள் நடத்திக்கொண்டிருந்த ‘மய்யம்’ பத்திரிகையில் /கமல்ஹாசன்

ஒருமுறை, நாங்கள் நடத்திக்கொண்டிருந்த ‘மய்யம்’ பத்திரிகையில் சரிகா அவர்களை விட்டு அப்பாவை ஒரு பேட்டி எடுக்கவைத்தேன். அது, ஆங்கிலத்தில் எடுக்கப்பட்டுத் தமிழாக்கம் செய்து வெளியிடப்பட்ட பேட்டி. அப்போது ராசி அழகப்பன் போன்றோர் உடன் இருந்தனர். ‘நீங்கள் காந்தியை நேரில் பார்த்திருக்கிறீர்களா?’’ என்ற கேள்விக்கு, ‘பார்த்திருக்கிறேன். அவர் பரமக்குடிக்கு வந்த இருமுறையும் சந்தித்திருக்கிறேன்’’ என்றார். அதுவே எனக்கு வியத்தகு செய்தியாக இருந்தது.

‘`அவர் முதல்முறை வரும்போது நான் சிறுவன். இரண்டாவது முறை வரும்போது நான் வக்கீலாகிவிட்டேன். முதல் சந்திப்பில் ஒரு வாணலியைக் கையில் நீட்டியபடி நடந்தார். அதில் எல்லோரும் சில்லறைக் காசுகளைப் போட்டனர். அப்போது என் கையில் ஒரு ஓட்டைக் காலணா மட்டுமே இருந்தது. அதைப் போட்டுவிட்டு அவரின் முழங்கையிலிருந்து முன்கை வரை ஒரு தடவு தடவினேன். அவ்வளவு சந்தோஷமாக இருந்தது.

ஆனால், நான் வக்கீலான பிறகு காந்தியின் அருகில் போகமுடியவில்லை. அவரை, தள்ளி நின்றபடி பார்த்துக் கொண்டிருந்தேன். என் கண்களெல்லாம் நனைந்து விட்டது. ‘காலணா போட்டு விட்டு அன்று கையைத் தொட்டதற்குப் பதிலாகக் காலைத் தொட்டிருக்கலாம். இவரைப் பார்த்ததும் அன்று ஒன்றுமே தோணாமல் போய்விட்டதே. இந்தக் கிழவன் நம்மை ஏமாற்றிவிட்டாரே என்று தோன்றியது’’ என்றார்.

காந்தியின் மீது, காந்தியத்தின் மீது அவர் கொண்டிருந்த விடாப்பிடியான பிடிப்பு அப்பாவுக்குக் கடைசி நாள் வரை இருந்தது. டிரினிட்டி நர்ஸிங் ஹோமில் அவரைச் சேர்த்திருந்தோம். தினமும் போய்ப் பார்ப்போம். அன்று பட்டுச்சட்டை வேட்டி கொண்டு போயிருந்தேன். அந்தத் துணி உடுத்தி அவரை நான் பார்த்ததே கிடையாது. அவர் அணிந்தது அனைத்துமே கதராடைகள்தாம். ‘என் சந்தோஷத்துக்காக இன்னைக்கு ஒருநாள் மட்டும் இதைப் போட்டுக்கங்க. போட்டுவிடச் சொல்றேன்’’ என்றேன். ‘முடியாது’’ என்பதுபோல் தலையை ஆட்டினார். ‘உங்க பையன் சந்தோஷத்துக்குத்தானே கேக்குறேன்’’ என்றேன். ஆக்சிஜன் குழாயை வாயிலிருந்து எடுக்கச் சொன்னவர், ‘எனக்கு வசதி இருந்தும் நான் கதர் போட்டுக்குறேன். ஆனா, வசதி இல்லாம, கதருக்குக்கூட வழியில்லாம இருக்கிறவங்க இங்க ஏகப்பட்டபேர் இருக்காங்க. முதலில் அவங்க எல்லோரும் பட்டுச்சட்டை வாங்கி உடுத்திக்கிற அளவுக்கான வசதியைக் கொடு, பிறகு நான் போட்டுக்குறேன்’’ என்றார். கண்கலங்கிவிட்டேன். ஆம், அவர் அணிந்த கதர், தன்னால் இயலாததாலோ, காந்திக்குக் காட்டுவதற்காகவோ போட்டுக்கொண்டது அல்ல. அது எளிமையின் அடையாளம். சுதந்திரப்போரின் அடையாளம். அகிம்சையின் அன்றைய ஓர் உன்னதக் கேடயம்.

இப்படி அப்பாவைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் கூடவே ராமநாதபுரமும் சேர்ந்தே நினைவுக்கு வருவது உண்டு. தவிர நான் மிகவும் மதிக்கும் மனிதர் கலாம் அவர்கள் அதே ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் அவருக்கும் எங்கள் குடும்பத்துக்கும் தொடர்பு உண்டு என்பதையும் இங்கே பதிவு செய்கிறேன். அட்வகேட் ஜெனரல் பராசரன் அவர்களின் மாமனார் என் சொந்த சித்தப்பா. அதாவது என் அப்பாவின் தம்பி. அவருக்கு அப்துல் கலாம் அவர்களின் குடும்பம் மிக நெருக்கம்.

ஜெயகாந்தன் அவர்களை என் வாழ்க்கையில் மொத்தமாக ஏழெட்டுமுறைதான் சந்தித்திருப்பேன். ஆனால், என் மிக முக்கியமான ஆளுமைகளில் அவரும் ஒருவர். அதேபோலதான் சிவாஜி சாரை நான் அடிக்கடி சந்தித்துப் பேசியதாக ஒரு தோற்றம் உண்டு. இதேபோல்தான் பாலசந்தர் சாரிடமும். ‘இந்த உறவு எந்தக் காரணத்தைக்கொண்டும் முறிந்துவிடக்கூடாது’’ என்கிற பதற்றத்தால், ‘கமல் ஏன் வரலை’’ என்று கேட்பதுபோல் வைத்துக்கொள்ளவேண்டும் என்பதே என் நோக்கமாக இருந்தது. இப்படி கலாம் அவர்களுடனும் நான் நெருங்கிப் பழகியதில்லை. ஆனால், ஆக்கப்பூர்வமான எண்ணங்களால் இணைந்திருந்தோம்.

கலாம் அவர்களின் ப்ரொஃபைல் பெரிதாவதற்கு முன்பே, ஒரு சயின்டிஸ்டாக அவரைப்பற்றி சுஜாதா அவர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அவர் ஜனாதிபதியான பிறகு ஊரே அவரைப்பற்றி பேச ஆரம்பித்தது.‘நம்ம கலாம் எளிமையான மனிதர்’ என்று பலர் சொல்லக்கேட்டிருக்கிறேன். ஒருமுறை விமானப் பயணத்தில் அவருடன் இரண்டரை மணிநேரம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. எல்லா நல்ல, பெரிய மனிதர்களைப் பற்றியும் பாதிதான் வெளியில் வரும். என்னதான் விளம்பரப்படுத்தினாலும் சிறப்பான, சொல்லாத குணங்கள் எவ்வளவு கொட்டிக்கிடக்கின்றன என்று தெரியும். அதை நான் அன்று கலாம் அவர்களிடம் கண்டேன்.

  • கமலஹாசன்

www.vikatan.com

முகநூல் வழியாக தகவல் தந்தவர் : ஆர்.கந்தசாமி