கிழக்கு என்னும் கோவில்/ஹரன் பிரசன்னா

இன்றோடு கிழக்கு பதிப்பகத்தில் இருந்து விடைபெறுகிறேன். பதினான்கு வருடப் பயணம். நிறைவான பயணம். நன்றியுடனும் உணர்ச்சிப் பெருக்குடனும் விடைபெறுகிறேன்.

*

திடீரென நானாக எடுத்த முடிவு இது. ஏப்ரல் 15 வாக்கில் என்ன என்னவோ எண்ணங்கள், கேள்விகள். உடனே முடிவெடுத்து அதை பத்ரியிடம் சொன்னேன். என்னைவிட எனக்காக அதிகம் யோசித்தார். பின்பு விடை தந்தார்.

*

சரியாகப் பதினான்கு வருடங்களுக்கு முன்பு, குன்றத்தூர் முருகன் கோவிலில் இருந்து பத்ரிக்கு போன் பேசினேன். திருவனந்தபுரத்தில் இருந்தார். சென்னைக்கு அவர் வந்தபின்பு என்னை நேரில் வந்து பார்க்கச் சொன்னார். இன்னொரு எம்.டியான சத்யா நேர்முகம் செய்தார். நேர்முகம் முடிந்து பல குழப்பங்களுடனும் கேள்விகளுடனும் பைக்கில் சென்று கொண்டிருக்கும்போது பத்ரி அழைத்தார். என் குழப்பத்தைப் புரிந்துகொண்டு அவர் சொன்னது, ‘வந்து ஜாய்ன் பண்ணு, நான் பாத்துக்கறேன்’. இதோ இன்று விடைபெறும் வரை அவர் சொன்ன சொல்லில் இருந்து ஒரு இன்ச் கூட விலகவில்லை.

கிழக்கு கோவில் என்றால் பத்ரியைப் போன்ற ஒரு எம்.டி தெய்வம். கிஞ்சித்தும் மிகை இல்லை. உண்மை.

என்னுடன் முன்பு பணியாற்றிய நண்பர்கள், இப்போது பணியாற்றும் நண்பர்கள், விற்பனையாளர்கள், எழுத்தாளர்கள், அச்சக நண்பர்கள், சக பதிப்பாளர்கள், வாசகர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

குறிப்பாக என் டீம். மறக்க முடியாத டீம். இவர்களுக்கு நன்றி என்று சொல்வது பத்தாது. அதற்கும் அதிகமாக எதாவது சொல்லவேண்டும். இதைப் படிக்கும் அவர்களே புரிந்துகொள்ளட்டும்.

எனக்கென தீவிர அரசியல் நிலைப்பாடு இருந்தும் என்னைப் புரிந்துகொண்டு என்னுடன் பயணித்த ஒவ்வொருவருக்கும் நன்றி.

ஒரு நிறுவனம் எப்படித் தன் பணியாளர்களை நடத்த வேண்டும்? கிழக்கைப் போல.

ஒரு தொழில் முனைவர் எப்படித் தன் பணியாளர்களை நடத்த வேண்டும்? பத்ரியைப் போல.

இந்த இரண்டும் அமைந்தால் ஒரு பணியாளன் எப்படித் தன் நிறுவனத்தை நினைப்பான்? என் நிறுவனம் அது என்று நினைத்த என்னைப் போல.

சொல்ல முடியாத உணர்ச்சிப் பெருக்குடன் விடை பெறுகிறேன்.

  • அடுத்து என்ன? விரைவில் அறிவிக்கிறேன்.

One Comment on “கிழக்கு என்னும் கோவில்/ஹரன் பிரசன்னா”

Comments are closed.