
விமர்சனம் என்ற துறையே தமிழில் முதன்முதலாக தொடங்கியது க.நா.சு. எழுத ஆரம்பித்த பிறகு தான். அவர் தன்னையும் விமர்சித்துக்கொண்டார். தன் சக எழுத்தாளர்களையும் விமர்சித்தார். விமர்சிக்கத் தொடங்கியதோடு சிறுகதை, நாவல், கவிதை மொழிபெயர்ப்பு என மற்ற வடிவங்களிலும் தொடர்ந்து செயல்பட்ட போதிலும், அவையெல்லாம் மறக்கப்பட்டு விமர்சகர் என்ற லேபிளே அவருக்கு ஒட்டப்பட்டது. இது ஒரு பரிதாபகரமான விளைவு. அது பற்றி அவர் கவலைப்படவில்லை என்பது வேறு விஷயம்.
ஆனால் சோகம் என்னவென்றால், விமர்சனம் என்ற மரபே தமிழில் அது வரை இல்லாத காரணத்தால், பெரும் வாசகப் பெருக்கத்தைக் கொண்ட எழுத்தாளர்கள் விரோதத்தைச் சம்பாதித்துக்கொண்டது அவர் எதிர்பார்த்தது தான். அது இயல்புதான். ஆனால், யார் யாருடைய எழுத்துகளின் இலக்கிய அங்கீகாரத்துக்காக அவர் வாதிட்டாரோ, அவர்களே கூட அதை வரவேற்கவில்லை. “நல்ல நாவல், கதைன்னு எழுதீண்டு இருந்தவர் ஏனோ இப்படி விமர்சனம் பண்றேன்னு கிளம்பி பேரைக் கெடுத்துக்கறார்” என்றோ அல்லது “இதெல்லாம் நம்ம வேலை இல்லை. காலம் அதைப் பாத்துக்கும். என்னத்துக்கு வீணா இவர் பழி சுமக்கணும்” என்றோதான் அவர்களது எதிர்வினையாக இருந்தது. அவரைக் கேலி செய்தவர்களும் இந்த வட்டத்தில் உண்டு.
வேடிக்கை என்னவென்றால் இப்படிச் சொன்னவர்கள், கேலி செய்தவர்கள் எல்லாம் க.நா.சு.வின் விமர்சன இயக்கத்தால்தான் இலக்கியத் தரம் கொண்ட எழுத்தாளர்களாக இனம் காணப்படார்கள். க.நா.சு-வால் இலக்கியத் தரமற்ற எழுத்து என்று ஒதுக்கப்பட்டவர்கள் தூற்றுதலை விட, அவர் ஏற்றுக்கொண்ட இலக்கிய எழுத்துக்காரர்ளின் அலட்சியப் பேச்சே தமிழில் விமர்சனம் என்றோ இலக்கிய மரபு என்றோ ஏதுமற்றிருந்த நிலைக்கு சாட்சியம் சொல்லும். நான் சிலபெயர்களைக் குறிப்பிட்டால் ஆச்சரியமாக இருக்கும். ”விமர்சனம் எதுக்கு? காலம் பார்த்துக்கும்” என்று சொன்னவர்களில் ந.பிச்சமூர்த்தியைக் காணலாம். க.நா.சு.வைக் கேலி செய்தவர்களில் பி.எஸ்.ராமையாவைக் காணலாம். சிட்டியைக் காணலாம். க.நா.சு.வைக் காட்டமாகத் திட்டியவர்களில் ஜெயகாந்தனையும் காணலாம். ஜெயகாந்தன் எழுதத் தொடங்கியபோது அவரது பிராபல்யத்தை மீறி அவரது இலக்கியத் தரத்தைப் பற்றிச் சொல்லிப் பாராட்டிய முதல் குரல் க.நா.சு.வினது. இத்தகைய அலங்கோலத்தில் இருந்தது அன்றைய தமிழ் எழுத்துலகம். க.நா.சு.வை மறைமுகமாகத் தாக்கும் ”உண்மை சுடும்” என்ற ஜெயகாந்தனின் முன்னுரையைப் பார்க்கலாம். “சுடவில்லை, உண்மையல்லாததால்” என்று க.நா.சு. வேறிடத்தில் பதிலளித்திருந்தார். யாராயிருந்தால் என்ன, புகழுரைகள் தான் இனிக்கும்.
ஆனால் அந்த நாள்கள் எனக்கு மிகுந்த உற்சாகம் நிறைந்த நாள்கள். க.நா.சுவின் எழுத்துகளை தமிழ் பத்திரிகைகளிலோ ஆங்கிலப் பத்திரிகைகளிலோ பார்க்கும்போது நான் அடைந்த உற்சாகம் சொல்லித் தீராது. அவர் எழுத்து மாத்திரம் அல்ல; தில்லியில் எனக்குப் பார்க்கக் கிடைத்து வந்த நாடகம், சினிமா, நாட்டிய நிகழ்ச்சிகள். மற்ற மொழிக்காரர்கள் பங்கு கொள்ளும் கருத்தரங்குகள் எல்லாம் தமிழை ஆக்கிரமித்திருந்த வெகுஜன கலாசாரத்தை நிராகரிப்பதாகவும், இதற்கு எதிரான க.நா.சு.வின் எழுத்தையும் குரலையுமே எதிரொலிப்பதாகவும் இருந்தது. அதை நான் ஒவ்வொரு கணமும் அனுபவித்து வந்தேன் என்றுதான் சொல்லவேண்டும். சுற்றிலும் கவிந்திருக்கும் இருட்டிலிருந்து வெளிச்சத்தில் கால் வைத்து முன்செல்லும் அனுபவம் அது.
நன்றி: தமிழ்இந்து.காம்
முகநூலில் : ஆர்.கந்தசாமி
