ஔவையாரின் தனிப்பாடல்கள்(தொடர்ச்சி)/வளவ.துரையன்

9.

சுரதம் தனில்இளைத்த தோகை; சுகிர்த
விரதம் தனில்இளைத்த மேனி – நிரதம்
கொடுத்திளைத்த தாதா; கொடுஞ்சமரிற் பட்ட
வடுத்துளைத்த கல்லபி ராமம்.


சுரதம் = கலவி, உடலுறவு; தோகை = மயில், மயில்போன்ற மெல்லிய தலைவி; சுகிர்தம் = நற்செயல், தவவிரதம்; நிரதம் = ஓயாமல்; தாதா = கொடையாளி; சமர் = போர்; வடு = புண்; துளைத்த = பீடும் பெயரும் பொறித்த; கல் = நடுகல்; அபிராமம் = அழகு
தலைவனோடு கூடிய கலவியால் களைத்த பெண்மயிலாள்; தவவிரதத்தால் மெலிந்த தவசியின் உடம்பு; ஓயாமல் கொடுத்தே களைத்த கொடையாளி; கொடிய போரிலே வீரன் பட்ட புண்களும்; போரிலே வீழ்ந்துசெத்த மறவனுக்கு அவன் பீடும் பெயரும் பொறித்த நடுகல், இவையெல்லாம் அழகு.

10.

நம்பன் அடியவர்க்கு நல்காத் திரவியங்கள்
பம்புக்காம் பேய்க்காம் பரத்தையர்க்காம் – வம்புக்காம்
கொள்ளையர்க்காம் கள்ளுக்காம் கோவுக்காம் சாவுக்காம்
கள்ளர்க்காம் தீங்காகும் காண்


நம்புகின்ற அடியவர்களுக்கு நல்காமல் சேர்த்துவைத்த செல்வமானது, பதுக்குவதற்கும், பேய் போன்ற கொடியவர்களுக்கும், பரத்தைப் பராரிகளுக்கும், பிறரிடம் வம்பு செய்வதற்கும், கொள்ளையர்களுக்கும், கள்ளுக்கடைக்கும், அரசன் எடுத்துக்கொள்வதற்கும், பணக்காரனைச் சாகடிப்பதற்கும், திருடர்களுக்கும் உதவும். இது பணம் பதுக்கியவனுக்குத் தீங்குதானே?