கு.அழகிரிசாமிக்கு சீதாலெட்சுமியின் ‘அன்பளிப்பு’ -ஆசை

கு.அழகிரிசாமிக்கு சீதாலெட்சுமியின் ‘அன்பளிப்பு’
தமிழ்ச் சூழலில் எழுத்தையே நம்பி வாழும் எழுத்தாளர்களின் வாழ்க்கை பெரும் போராட்டமாகத்தான் இருக்கிறது. அதிலும் ஒரு எழுத்தாளர் அகால மரணமடைந்துவிட்டால் அவரின் குடும்பம் பெரும் போராட்டத்துக்கு ஆளாகிறது. இதுதான் தமிழின் முன்னோடி எழுத்தாளர்களுள் ஒருவரான கு.அழகிரிசாமியின் (1923-70) மனைவி சீதாலெட்சுமிக்கும் நேர்ந்தது.

காலமான சீதாலெட்சுமி திருச்செந்தூரில் பாரம்பரியமான இசைக் குடும்பத்தில் பிறந்தவர். சீதாலெட்சுமியின் தந்தை ஹரிஹர அய்யர் பிரசித்தி பெற்ற ஹார்மோனிய வித்வான். சீதாலெட்சுமி சிறுமியாக இருக்கும்போது அவருடைய அப்பா மலேசியாவுக்குக் குடும்பத்தை அழைத்துச்செல்கிறார். சீதாலெட்சுமியுடன் பிறந்தவர்கள் ஏழு சகோதரிகள், ஒரு சகோதரன். மலேசியா சென்ற சிறிது காலத்தில் சீதாலெட்சுமியின் தந்தை இறந்துபோகவே அந்தக் குடும்பம் பாட்டு, நடனம் போன்றவற்றைச் சொல்லிக்கொடுத்து வாழ்க்கைப்பாட்டைக் கவனித்துக்கொள்கிறது. சீதாலெட்சுமி நன்றாகப் பாடக்கூடியவர்.

1952-ல் மலேசியாவுக்கு வந்த அழகிரிசாமி ‘தமிழ்நேசன்’ பத்திரிகையில் ஆசிரியராகச் சேர்ந்தார். ’முக்கூடற்பள்ளு’ போன்ற இசை நாடகங்களுக்கு அழகிரிசாமி பாடல்களை எழுதிக்கொடுக்க சீதாலெட்சுமி பாடியிருக்கிறார். ராஜரத்தினம் பிள்ளை மலேசியாவுக்கு மூன்று மாதப் பயணமாக வந்திருந்தபோது அவரைப் புகழ்ந்து அழகிரிசாமி எழுதிய பாடலை சீதாலெட்சுமிதான் பாடியிருக்கிறார். அவர்களுக்கு இடையிலான காதல் கடிதங்களுள் ஒன்று அப்போது எப்படியோ ராஜரத்தினம் பிள்ளையின் கையில் சிக்கிவிட அவர்தான், “ஆசிரியருக்கும் அய்யர் பொண்ணுக்கும் காதல்” என்று பகிரங்கப்படுத்தியிருக்கிறாராம்.

அவர்களின் காதலுக்குப் பெண்வீட்டில் வசதி உள்ளிட்ட காரணங்களால் கடும் எதிர்ப்பு. எனினும், சீதாலெட்சுமி தைரியமாக வீட்டை விட்டு வெளியேறி 1955-ல் அழகிரிசாமியை மணந்துகொண்டார். இதற்கிடையில் பத்திரிகை நிர்வாகத்துக்கும் அழகிரிசாமிக்கும் இடையே உரசல் உண்டானது. தன்னுடைய எழுத்துகளுக்கு உரிய களம் இந்தியாதான் என்று உணர்ந்த அழகிரிசாமி 1957-ல் குடும்பத்தோடு இந்தியா திரும்புகிறார்.

இந்தியா வந்த பிறகு காந்தி நூல்கள் மொழிபெயர்ப்புப் பணி அவருக்குக் கிடைத்தது. அதன் பிறகு, ’நவசக்தி’ இதழில் 5 ஆண்டுகள் வேலைபார்த்தார். அதற்குப் பிறகு, எந்த வேலையும் அவருக்கு நிரந்தரமாக அமையவில்லை. அழகிரிசாமி இறப்பதற்கு சிறிது காலத்துக்கு முன்புதான் தொமுசி ரகுநாதன் உதவியால் ‘சோவியத் நாடு’ என்ற தமிழ் இதழில் வேலை கிடைக்கிறது. வேலைக்குச் சேர்ந்து ஒரு வாரத்திலேயே உடல்நலம் குன்றுகிறது. எலும்பில் காசநோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. மூன்று மாதம் படுத்த படுக்கையாகக் கிடந்து இறுதியில் இதயத்தில் ஏற்பட்ட ஓட்டை காரணமாக 1970-ல் அழகிரிசாமி உயிரிழந்தார்.

நான்கு பிள்ளைகளும் சீதாலெட்சுமியும் அடுத்த வேளை உணவுக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில்தான் அடுத்து வந்த நாட்களைத் தள்ளினார்கள். அழகிரிசாமியின் நண்பரும் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதிச் செயலராக இருந்தவருமான வி.எஸ்.சுப்பையா, சீதாலெட்சுமி எப்பாடுபட்டாவது எஸ்எஸ்எல்சி முடித்துவிட்டால் வீட்டு வசதித் துறையிலேயே வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்தார். அதன் பிறகு, சீதாலெட்சுமி எஸ்எஸ்எல்சி படித்தார். அவருடைய மூத்த மகள் அவருக்குப் பாடங்களைச் சொல்லிக்கொடுத்தார். படிப்பை முடித்ததும் வி.எஸ்.சுப்பையா தான் வாக்களித்தபடி குமாஸ்தா வேலையை சீதாலெட்சுமிக்கு வாங்கித்தந்தார். மாதம் மாதம் உத்தரவாதமான சம்பளம். பிள்ளைகள் தலையெடுத்தாலும் ஓய்வுபெறும் வரை அந்த வேலையில்தான் சீதாலெட்சுமி இருந்தார்.

அந்த வேலையில் இருந்துகொண்டுதான் தன்னுடைய குடும்பத்தை முன்செலுத்தினார். அழகிரிசாமி இறந்த பிறகு கிடைத்த சாகித்ய அகாதமி விருதுத் தொகை ரூ.5 ஆயிரம், தனது வருமானம் போன்றவற்றைக் கொண்டு பிள்ளைகளைப் படிக்க வைத்தார். சீதாலெட்சுமியின் மூத்த மகன் ராமச்சந்திரன் வங்கி மேலாளராக இருந்து ஓய்வு பெற்றிருக்கிறார், மூத்த மகள் ராதா மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்தவர், இளைய மகன் சாரங்கநாதன் ஒளிப்பதிவுக் கலைஞர், இளைய மகள் பாரதி மனநல மருத்துவர். தன் பிள்ளைகளுக்கு எப்படிப்பட்ட வாழ்க்கை அமைய வேண்டும் என்று கு.அழகிரிசாமி ஆசைப்பட்டிருப்பாரோ அதை நிறைவேற்ற சீதாலெட்சுமி பட்டிருக்கும் துயரங்கள் கொஞ்சநஞ்சமல்ல. “இதற்கெல்லாம் காரணம் அவருடைய மனவுறுதிதான்” என்கிறார் அவருடைய மகன் சாரங்கன்.

கு.அழகிரிசாமிக்கு சீதாலெட்சுமி வழங்கிய மகத்தான ‘அன்பளிப்பு’ இதுதான்.

நன்றி: இந்து தமிழ் திசை

முகநூலிஸிருந்து : ஆர. கந்தசாமி