
படிப்பதை மட்டுமே வாழ்க்கையையாகக் கொண்டிருந்த அவருக்கு முதுமையில் கண்பார்வை குறைந்து போனது. அதனால் மிகுந்த மனவேதனை கொண்டார். கண்சிகிட்சை செய்த போதும் அவரால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. அது அவருக்கு மன உளைச்சலாக இருந்தது
ஊஞ்சல் ஆடுவதில் விருப்பம் கொண்டிருந்த மௌனி, கி. அ. சச்சிதானந்தம் வீட்டு ஊஞ்சலில் வேகமாக ஆடுவாராம். அப்போது அவரைக்காண ஒரு குழந்தையைப் போலிருக்கும் என்றார் சச்சிதானந்தம்
பேச்சின் நடுவில் சுந்தர ராமசாமி பற்றி சொன்ன கி.அ.ச. சுரா வேகமாக கார் ஒட்டக்கூடியவர், அவரோடு காரில் உட்கார்ந்து போகப் பயமாக இருக்கும். அவரது அம்பாசிடர் காரில் போய் பூதப்பாண்டியில் உள்ள கிருஷ்ணன் நம்பியை பார்த்துவந்திருக்கிறேன், அப்போது கிருஷ்ணன் நம்பி உடல்நலக்குறைவு கொண்டிருந்தார், ஆனாலும் அன்பாகப் பேசினார். திடீரென பிரமீள் பற்றிய பேச்சு வந்துவிடவே அவர் உஷ்ணமாகி அந்த ஆளைக் கொல்லவேண்டும் என்று கத்தினார்.
ஏன் இவ்வளவு கோபம் என்று சுராவிடம் கேட்ட போது அது பெரிய கதை. பிரமீள் கிருஷ்ணன் நம்பியோடு சண்டைபோட்டுவிட்டார் என்றார். நட்பாக பழகிய அத்தனை பேருடனும் பிரமீள் சண்டையிட்டிருக்கிறார். அவரது மனவிசித்திரமது.
சுந்தர ராமசாமிக்கு மௌனி மீது மிகுந்த ஈடுபாடு இருந்தது, ஆனால் மௌனி அவரை வெறும் கிராப்ட்ஸ்மேன் என விமர்சனம் செய்த காரணத்தால் அவர் கோவித்துக் கொண்டுவிட்டார் என்று சச்சிதானந்தம் கூறினார்
தான் சிதம்பரம் சென்றுவிட்டால் மௌனி வாய் ஒயாமல் பேசிக் கொண்டிருப்பார். இரவு பனிரெண்டரை மணி வரை பேசிக் கொண்டிருந்துவிட்டு அதன்பிறகு படிக்கத் துவங்குவார். எப்போதும் தன்னைப்பற்றியே பேசிக் கொண்டிருக்ககூடியவர். அது சில நண்பர்களுக்குப் பிடிக்காமல் போய்விட்டது என்றார் சச்சிதானந்தம்
ஒரு கதையை நாலைந்து முறை மாற்றி எழுதுவார், திருத்தி திருத்தி தான் அதன் இறுதிவடிவை உருவாக்குவார். ஆகவே அவரிடமிருந்து கதையைப் பெறுவது எளிதானதில்லை. அவரது குறுநாவல் ஒன்று பத்திரிக்கைக்கு அனுப்பிவைக்கபட்டு தொலைந்து போய்விட்டது, அதை இன்று வரை கண்டுபிடிக்கவே முடியவில்லை.
தனக்குச் சிறுகதை என்ற வடிவம் தான் நெருக்கமாக இருக்கிறது, நாவல் எழுதுவது தனக்கு விருப்பமாகயில்லை என மௌனி சொல்வார். தனது காலத்திற்குப் பிறகு தான், தனது எழுத்தைப் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. இதை அடிக்கடி சொல்லிக் கொண்டேயிருப்பார்.
அந்த நாட்களில் எழுத்தாளர்கள் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதற்குக் கி. அ. சச்சிதானந்தம் ஒரு உதாரணம் சொன்னார்.
சிதம்பர சுப்ரமணியனின் மண்ணில் தெரியுது வானம் நாவலைக் கடுமையாக விமர்சனம் செய்து தான் நடை பத்திரிக்கையில் ஒரு கட்டுரை எழுதியிருந்தாகவும் அதன்பிறகு. ஒருமுறை மௌனியோடு எதிர்பாராமல் சிதம்பர சுப்ரமணியன் வீட்டிற்குச் சென்ற போது அன்று அவரது பிறந்தநாள் என்பதால் வடைபாயசத்தோடு சாப்பாடு போட்டிருக்கிறார்கள்.
மௌனி சிதம்பர சுப்ரமணியத்திடம் உன் நாவலைக் கடுமையாக விமர்சனம் செய்தவர் இவர் தான் என அறிமுகம் செய்திருக்கிறார், ஒருவரை திட்டிஎழுதிவிட்டு அவரது வீட்டில் எப்படிச் சாப்பிடுவது எனச் சச்சிதானந்தம் தயங்கியபோது ,அவருக்கு என்னோட நாவல் பிடிக்கவில்லை, அதைப் பற்றி எழுதியிருக்கிறார், இதில் என்ன தப்பு இருக்கிறது எனச் சொல்லியதோடு அன்போடு உணவு கொடுத்து உபசரித்துப் பழகினார், விமர்சனத்தில் வெளிப்படும் கோபத்திற்காக அதை எழுதியவனோடு பகை கொள்ள வேண்டியதில்லை என்ற சிதம்பர சுப்ரமணியத்தின் பண்பு மறக்கமுடியாதது என்றார்.
நகுலன் மீது மௌனிக்குப் பிடித்தம் இருந்தது, நகுலன் ஆங்கிலப்பேராசிரியராக இருந்தவர், அவர் எழுதிய ஆங்கிலக் கட்டுரையில் தவறு இருக்கிறது என மௌனி கண்டுபிடித்துச் சுட்டிக்காட்டியிருக்கிறார். மௌனிக்கு புதுமைப்பித்தனைப் பிடிக்கும். நாலைந்து முறை புதுமைபித்தனைச் சந்தித்திருக்கிறார், கு.ப.ரா. பிச்சமூர்த்தி. பி.எஸ்.ராமையா, க.நா.சு இவர்களோடு நல்ல நட்பிருந்தது.
ஆரம்பத்தில் பிரமீளுடன் மௌனி மிகுந்த நட்பாகப் பழகினார், ஆனால் பிரமீள் திடீரென அவர் மீது கோவித்துக் கொண்டு கடுமையாக நடந்து கொண்டார். அது பிரமீளின் இயல்பு. மௌனி கதைகள் தொகுப்பாக வந்த போது அதற்குப் பிரமீள் எழுதிய முன்னுரை முக்கியமானது, ஆனால் அதை மௌனியே அடுத்தப் பதிப்பில் சேர்க்க வேண்டாம் என நீக்கச்சொல்லிவிட்டார், அதைப் புரிந்து கொள்ளாமல் தன்மீது கோபம் கொண்டு பிரமீள் தன்னைத் திட்டியதாகச் சச்சிதானந்தம் நினைவு கொண்டார்
மௌனியின் புகைப்படங்கள் பற்றிக் கேட்ட போது அது சிதம்பரத்தில் உள்ள ஸ்டுடியோவில் வைத்து எடுக்கபட்ட புகைப்படங்கள் என்று சொன்னதோடு, அகில இந்திய எழுத்தாளர் மாநாட்டில் மௌனியைப் பார்த்த ஒரு வட இந்திய புகைப்படக்கலைஞர் அவரை எடுத்த புகைப்படம் தான் இப்போது அவரது நூலின் அட்டையில் வெளியாகி உள்ளது என்றார்.
தகவல் கொடுத்தவர் : ஆர்.கந்தசாமி


அருமை .யாராய் இருந்தாலும் வினைப்பயனை அனுபவித்துத்தானே ஆக வேண்டும். எழுத்தாளாராய் இருந்தால் என்ன ? ஆனாலும் திருமூலரின் சிந்தான எழுத்து அனைவரையும் சிந்திக்க வைக்கக்கூடியது.