அன்பின் பாரா/பா.ராகவன்

அன்பின் பாரா, ஏராளமான மெட்ராஸ் பேப்பர் செய்திகளையே எழுதிக்கொண்டிருக்கிறீர்களே, நீங்கள் வழக்கமாக எழுதுவதையெல்லாம் இனிமேல் இங்கே எழுத மாட்டீர்களா?

O

அன்பின் நண்ப. உங்களுக்கு இரண்டு கதைகள் சொல்கிறேன்.

நேற்று முன் தினம் என்னுடைய சிறு வயது சிநேகிதி (நான்காம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்தவள்) ஒருத்தியின் மகனுக்குத் திருமணம். பதினான்கு வயதில் நான் கேளம்பாக்கத்தை விட்டுக் கிளம்பிய பிறகு அவளைப் பார்க்கவேயில்லை. என்ன ஆனாள், எங்கே இருக்கிறாள் என்றுகூடத் தெரியாது. தற்செயலாக ஒரு மாதம் முன்னர்தான் அவளது இருப்பிடம் தெரிந்தது; (அதையும் எழுதியிருந்தேன், மதுரவாயில் போலிஸ் ஸ்டேஷன்.) தொடர்பு கிடைத்தது.

வேலை மெனக்கெட்டு என் அலுவலகத்துக்கு வந்து பத்திரிகை கொடுத்து, கண்டிப்பாக மகன் திருமணத்துக்கு வர வேண்டும் என்றாள். அதைவிட வேறென்ன வேலை என்று உறுதி சொல்லி அனுப்பி வைத்தேன்.

ஆனால் போகவில்லை. மெட்ராஸ் பேப்பர் இறுதிக் கட்டப் பணிகளில், இதர அனைத்துமே சித்தத்தில் ப்ளர் ஆகிவிட்டன.

பிறகு அவளுக்கு ஒரு போன் செய்து பேசக் கூட நேரம் அமையவில்லை. இன்று அவளே அழைத்தாள். ‘ஒரு அஞ்சு நிமிஷம் வாய்ல வந்தபடி திட்டி முடிச்சிரு. அப்றம் பேசறேன்’ என்று சொன்னேன். ஆனால் அவள் திட்டவில்லை. ‘தெரியும்டா. நீ பத்திரிகை வேலைல பிசியா இருந்திருப்ப. பரவால்ல. முடிஞ்சப்ப வீட்டுக்கு வா’ என்று சொன்னாள்.

இரண்டாவது.

நேற்று எனக்குத் திருமண நாள். அதுவும் இருபத்தைந்தாவது ஆண்டு. பொதுவாக இந்நாளை உலக மக்கள் எப்படிக் கொண்டாடுவார்கள் என்று உங்களுக்கே தெரியும். ஆனால் என் மனைவியுடன் கோயிலுக்குக் கூடப் போக முடியவில்லை. காலை மெட்ராஸ் பேப்பர் வெளியீட்டு வேலைகள். பிறகு நாளெல்லாம் லாகின் பஞ்சாயத்துகள். வேறொரு பெண்ணென்றால் இந்நேரம் கட்டையால் அடித்து வீட்டை விட்டுத் துரத்தியிருப்பாள். என் பணியின் சிரமம் புரிந்தவர் என்பதால் என் அட்மின் அதைச் செய்யவில்லை.

பெரிய செயல்களில் ஈடுபடும்போது சில இழப்புகளும் இம்சைகளும் தவிர்க்க முடியாதவை.

என்ன ஒன்று, இழப்பு-இம்சை இரண்டுமே எனக்கல்ல; என்னைச் சார்ந்தோருக்கு. இந்த வினாவை எழுப்பியதன் மூலம் நீங்களும் என்னைச் சார்ந்தோரில் ஒருவர் ஆகிவிடுகிறீர்கள்.

வேறு வழியில்லை. சிறிது பொறுத்துத்தான் தீர வேண்டும்.