எதிரி – சுஜாதா


(நன்றி : பழைய தேவி வார இதழ்)
நோட்டுக்கள் கை மாறினதும் சின்னப்பன் அந்த முரட்டு ஆசாமியைப் பார்த்து, “ஜாக்கிரதை! சாவடிச்சுறாதே!” என்றாள்.
“நீங்க கவலைப்படாதீங்க… ஆறு மாசத்துக்கு ஆளை நடமாட்டம் இல்லாதபடி செய்துறுவம். போதுமில்ல?”
“போதும். உன் பேர் என்ன சொன்னே?’
“மாரின்னு வெச்சுக்கங்களேன். பாக்கிப் பணம்? “
“வேலை முடிஞ்சதும் தர்றனே!”
‘சரிங்க என்று மாரி பளிச்சென்று சிரித்தான். பார்க்கப் பயமாக இருந்தது. புஜத்தை இறுக்கித் தாயத்துக் கட்டி, புஸ்தி மீசையும் பனியனுமாக துஷ்ட காரியங்களுக்கு ஏற்பட்டவன் என்பதை சுலபமாகச் சொல்ல முடிந்தது.
“என்ன செய்வே? என்றான் சின்னப்பன், தயக்கத்துடன்.
‘வழக்கம் போலத்தான். சைக்கிள் செயினு, ராடு. உயிர்ச்சேதம் ஏற்படாம பார்த்துக்குவம். மண்டைல அடிக்கற வழக்கமில்லை. மர்மத்தில் அடிக்கறதில்லை. மத்தபடி எல்லா இடத்திலயும் கொடுப்போம். அப்புறம் ரெண்டு ஆளு சேர்த்து படுக்க வெச்சு மார்ல மிதிப்போம். பெரும்பாலும் ஒண்ணு ரெண்டு எலும்பு முறிஞ்சு…”
‘வேண்டாம் சொல்லாதே”
‘அப்ப வரட்டுங்களா? எசமான் தயவு ஏழைங்களுக்கு எப்பவும் வேணும் என்று கூழைக் கும்பிடு போட்டவன் வார்த்தைகளில் இருந்த ஏளனம் உறுத்தியது.
“ஆள் யாருன்னு தெரியுமில்லே?”
“அதான் காட்டிப்புட்டிங்களே, பிடாரி கோயில்ல. பஞ்சாயத்து ஆபிசில பலமுறை பார்த்துட்டங்க. ஒரு தடவை பீடிக்கு நெருப்புக் கேட்டிருக்கேன். கழுத்திலே மச்சம். சைடா கிராப் வெச்சிக் கிட்டு பூபாலன்தானே பேரு?”
“அவன்தான்”
“ஒருமுறை பார்த்துட்டா எனக்குப் போதுங்க. துப்புரவா காரண்டியா செய்துர்றம். வேற ஏதாவது வேலை இருக்குதுங்களா?”
“இதை முடி!” என்றான் சின்னப்பன்.
“வரேங்க. வெள்ளிக் கிழமைக்குள்ள முடிஞ்சறும். சின்னம்பட்டில் ஒரு ஜோலி இருக்குது.”
“பின்புறமா போயிடு. தோப்பாண்டை ஒதுங்கி ஒத்தையடிப் பாதையை…..”
“கவலைப்படாதீங்க. நான் இங்கே வர்றது போறது ஒருத்தருக்கும் தெரியாது… வரட்டுங்களா?”
அவன் சென்றதும் தன் கரங்கள் நடுங்குவதை உணர்ந்தான், சின்னப்பன். குற்ற உணர்ச்சி நெஞ்சை அடைத்தது. கொஞ்சம் அதிகமோ… தீர்மானித்தாகிவிட்டது. இனிமேல் தயங்கிப் பிரயோசனமில்லை.
பூபாலன் தொல்லைக்கு ஒரு முடிவு டே ஆக வேண்டும். பகை மெல்ல வளர்ந்து இப்போது விஸ்வரூபம் எடுத்து பஞ்சாயத்து தேர்தல் வரை வந்துவிட்டது.
கூலி வேலைக்கு வந்தவன் ஒன்று பத்து இருபது என்று ஆசாமிகளைச் சேர்த்து வைத்துக் கொண்டு, எத்தனை விதங்களில் சின்னப்பனுக்குத் தொந்தரவு செய்திருக்கிறான்! விவசாய ஆபீசில் டிராக்டர் எடுக்கப்போனால், பூபாலன்… முந்திக் கொண்டிருக்கிறான்….. விதை, நெல், கரும்பு நாற்று, உரம் எல்லாவற்றிலும் முந்தல்…… வாய்க்காலில் தண்ணீர் வந்தபோது சச்சரவு…… இருபது வருஷமாக கொடி கட்டிப் பறந்தவனுக்கு நேற்று வந்தவன் தண்ணி காட்டுகிறான். உரிமைகளைப் பற்றிப் புதுசாகப் பேசுகிறான்……
போலீஸ் வந்து விசாரிப்பார்கள். விசாரிக்கட்டும். எனக்கு தெரியும்? அவங்களுக்குள்ள என்ன பகையோ? பொம்பளை விசயம் ஏதாவது இருக்கும். வெளியூர்க்காரங்க கலகம் செஞ்சா அதுக்கு நாம் பொறுப்பா? சும்மா கிடக்கேன்.அந்த ஆளை எனக்குத் தெரியாது. பார்த்ததே இல்லை. மாரியா யாரது?
சின்னப்பனுக்கு சற்று உற்சாகம் வந்து ஊஞ்சலாடினான்.
மற்றவர்களுக்கு ஒரு மறைமுகமான எச்சரிக்கையாகவும் இருக்கட்டும். என் கூட மோதினா என்ன ஆகும்னு அவுங்க தெரிஞ்சுக்கட்டும்…
எழுந்து நிலைக்கண்ணாடில மீசையைப் பின் கையால் தள்ளிக் கொண்டான்.
தனம் தெரிந்தாள்.
“என்ன?”
“டவுனுக்கு ஒரு முறை போய்ட்டுவரணுங்க. டாக்டர்கிட்ட காட்டணும்.”
“உனக்கு எப்பவும் வியாதி!” தனம் முகம் பூரா குங்குமம் வைத்து ஒடிசலாக இருந்தாள். ராத்திரி தொட்டால் மரவட்டை மாதிரி சுருங்கிக் கொள்கிறாள்… ஒரு பிள்ளைக்கு வழியைக் காணோம், நாலு வருஷமாச்சு…
“சரி, சரி, சாமிக்கண்ணு வந்தா வண்டி கட்டிட்டுப் போ”.
“நீங்க வர்லியா?”
“நான் எதுக்கு? உனக்குத்தானே வியாதி!” அவள் சற்று நேரம் முறைத்துப் பார்ப்பது கண்ணாடியில் தெரிந்தது.
இருட்டறைக்குப்போய் விளக்குப் போட்டு, பெட்டியைத் திறந்து வெள்ளை வேட்டி எடுத்துக் கட்டிக் கொண்டான். அந்தப் படங்களை ஒரு முறை புரட்டிப் பார்த்தான். பூட்டிவிட்டு, நான் வர நேரமாகும்” என்று சொல்லிவிட்டு, புறப்பட்டு வீதியில் நடந்தான்.
அங்கங்கே ஆட்கள் “கும்பிடறேனுங்க”க்களை தலையசைத் துப் பெற்றுக் கொண்டு ராஜாங்கமாக நடந்தான். மரத்தடியில் குந்தியிருந்தவர்கள் எழுந்து நின்றார்கள். காதர் பாச்சா கடைக்குச் சென்று “சோடா குடு பாய்” என்று பெஞ்சில் கால்மேல் கால் போட்டு உட்கார்ந்தான்.
பஞ்சாயத்து ஆபிசிலிருந்து பூபாலன் நடந்து வருவது தெரிந்தது. கவனிக்காதவன்போல் காலை ஆட்டிக் கொண்டு கோயில் பக்கமாக முறைத்தான். பூபாலன் அவன் அருகே வந்து நிற்பது ஓரக்கண்ணில் தெரிந்தது.
“வணக்கம் அய்யா!”
“அய்யா உங்களைத்தான்!”
“ஓ பூபாலனா? கவனிக்கலை. சவுக்கியமா இருக்கியா?
‘ஏதோ உங்க தயவில்.”
“என் தயவு உனக்கு எதுக்கப்பா? பஞ்சாயத்தில் நீயும் தாக்கல் செய்திருக்கியாம்ல?”
“ஏதோ கூட்டாளிங்கள்லாம் கட்டாயப்படுத்தினாங்க….. உங்களுக்கு எதிர நிக்கறதுன்னா .. எனக்குத் தயக்கந்தாங்க… இப்பகூட வாபஸ் வாங்கிக்கிறேங்க, அய்யா மனசு வெச்சா?”
“என்ன செய்யணும்?”
“கோயில் நிலத்தை பெரியசாமிக்கு விட்டுக் கொடுத்துடனுங்க.”
“வேடிக்கையா இருக்குப்பா நீ சொல்றது. முதலில் அது கோயில் நிலம்னு யார் சொன்னாங்க?”
“பட்டா இருக்குதில்ல?”
“பட்டா எனக்குந்தான் உண்டு. வெவரம் தெரியாமப் பேசாதே.”
‘பெரியசாமி ரொம்பக் கஷ்டப்படறாங்க.”
“யார்தான் சவுகரியமாக இருக்காங்க, இந்த ஊர்ல. நான் கஷ்டப்படலியா?”
“அய்யா வேடிக்கையாப் பேசுறீங்க.”
“இதபார் பூபாலன், நீ நிக்கறதில எனக்கு சந்தோசம்தான். ஜெயிச்சாலும் சந்தோசம்தான். சம்பந்தமே இல்லாததை வச்சு எலக்சனைக் குழப்பாதே…”
“ரொம்ப புடிவாதங்க அய்யா!”
“இப்ப உனக்குப் பிடிவாதம் இல்லியா?’
“விரோதமில்லாம இருந்தா சரி!”
“சேச்சே, அதெல்லாம் கிடையாது. நாம் என்ன சின்னப் ள்ளைங்களா?” எழுந்து எழுந்து அவன் தோள்மேல் கை வைத்து அணைத்து, “பாய், பூபாலனுக்கு ஒரு ஆரஞ்சு கொடு… என் கணக்கில்…”
காதர்பாய் உடம்பு முழுவதும் சிரித்து, “அதாங்க வேணும். ரெண்டு பேரும் ஒன்னு சேர்ந்துட்டிங்கன்னா கட்டிப்பிடிக்க முடியாது நம்ம கிராமத்தை.”
சின்னப்பன் உற்சாகமாகச் சிரித்தான். “வர்றேன்.”
“அய்யா நம்ம கரும்பை வந்து பார்க்கிறீங்களா?”
“இன்னொரு சமயம் வர்றேன் பூபாலா. கோயிலுக்குப் போயி பார்க்கணும். தர்மகர்த்தா வேலை வேற இருக்குது பாரு…..”
சின்னப்பன் கோயிலில் நுழைந்தபோது பூசாரி சடக்கென்று எழுந்து நின்று துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டார். வெள்ளிக்கிழமை தட்டுக்காக அஞ்சு ரூபா சில்லறை, அரிசி, வெல்லம் வந்துதுங்க. உண்டியப் பொட்டிலயும் கொஞ்சம் விழுந்துதுங்க… ரெண்டு சேவல், ஒரு மஞ்சத் துணி… …….”
அந்தப் பெண் கோயிலுக்குள் வந்து மணியடித்து விட்டு, ‘பூசாரி இதை அம்மனுக்கு சாத்திடுங்க” என்று ரோஜா நிறத் துணியைக் கொடுத்தாள். கையில் தட்டு நிறைய பூக்களுடன் நேராக சன்னதிக்குச் சென்று கண்ணை மூடிக் கும்பிட்டாள். சின்னப்பன் அவளை முழுவதும் பார்த்தான்.
மாநிறமாக இருந்தாள். மெல்லிய மஞ்சளில் பூப்போட்ட பாவாடையும் தாவணியும் மார்புடன் படிந்திருந்த சங்கிலியும் பக்கவாட்டில் சற்றே வியர்வையும், செதுக்கி வைத்தாற்போல் மூக்கும், பிரார்த்தனைத் துடிப்பில் அசையும் உதடுகளும்… யார் இவள்?
காற்று அடிக்க, இடுப்புடன் பாவாடை ஒட்டிக் கொள்ள, இலைபோல் அழுந்திய வயிறும் உடம்பில் துடிப்பான சாத்தியங்களும்… மறுபடி மணியடித்துவிட்டு சின்னப்பனை ஏறிட்டுக்கூடப்பார்க்காமல் பிரகாரத்தைச் சுற்றி நடந்தாள்.
“பூசாரி யாரது?”
“கமலம், நம்ம பெரியசாமி தங்கச்சி பொண்ணுங்க”
“புதுசா வந்திருக்கா?”
“ஒரு வாரம் ஆகுதுங்க. தங்கமான பொண்ணுங்க. நிதம் ரெண்டு வேளை கோயிலுக்கு வருது…….”. அவள் பிரகாரத்தில் இருந்து வெளிப்பட்டு மறுபடி சின்னப்பனுக்குத் தெரிந்தாள்.
“குங்குமம் கொடுக்கறிங்களா பூசாரி?” மீண்டும் சின்னப்பனைப் பார்க்கவே இல்லை.
சின்னப்பனுக்கு வயிற்றில் மெலிதான அழுத்தம் ஏற்பட்டு உடம்பு பூரா பரவியது.
அவள் நடந்து சென்றபோது பின்புறம் அசைய, பாடி -போட்டிருப்பது லேசாகத் தெரிந்தது. ஒரு கணம் தனத்தின் சோகை படிந்த முகம் மனதில் பளிச்சிட்டது.
*திங்கட்கிழமை ஒரு படையலுக்கு சொல்லி இருக்காங்க, அரிசியும் வெல்லமும் கொடுத்திருக்காங்க…”
வெல்லம்தான். நாக்கால் தொட்டுப் பார்த்தால் வெல்ல கத்தான் இனிப்பாள்…” ‘நான் போய் வறேன் பூசாரி…”
‘குங்குமம் வாங்கிட்டு போங்க.”
கமலத்தைப் பார்த்ததும் சின்னப்பனுக்கு மற்ற விஷயங்களின் முக்கியத்துவங்கள் குறைந்துவிட்டன.
கிராமத்தில் இந்த மாதிரி பொண்ணு உலா வர்றதாவது… பெரியசாமி வீட்டுக்குப் போய் விசாரிக்கலாம் என்றால், அவனுடன் நிலத் தகராறு. நேராகச் சென்று சமாதானப்படுத்திக் கொண்டு…என்ன கேட்பது? ‘உன் தங்கை மகளை எனக்குத் ‘என்றா?
இரண்டாம் கல்யாணமா…?
அவள் ஏன் ஒரு முறை கூட என்னைப் பார்க்கவில்லை………..அவ்வவளவு திமிரா?
‘ஐயா, ஏதாவது வேலை இருக்குதுங்களா?”
“ஒரு பொண்ணைக் காண்பிச்சுக் கொடுக்கறேன். அதை நம்ம வீட்டுக்கு கொண்டார முடியுமா?”
இப்போது மாரியை எங்கே தேடுவது? அவன் முதல் காரியத்தை முடிக்கட்டும். அதற்குள் அவசரப்படாதே. நிதானமாக யோசி…..நிதானமாக… நிதானமாக அவள் உடைகளை ஒவ்வொன்றாக உரித்து… சே, நிறுத்து….யோசனை செய்…
‘டேய் கிட்டா இங்க வாடா?”
“என்ன எசமான்?”
“சாப்பிட்டியா?”
“ஆயிடுச்சுங்க, எசமான்” என்று எதிர்பாராத அக்கறை கிடைத்ததில் பல் இளித்தான், கிட்டன்.
“கமுக்கமாக ஒரு காரியஞ் செய்வியா? “
“செய்யறேனுங்க”
“யாருக்காவது தெரிஞ்சா தோலை உரிச்சு எண்ணெய் தடவிடுவேன்…”.
“வேண்டாங்க!”
“நம்ம பெரியசாமி இருக்கான் இல்லை, அவன் வீட்டில் ஒரு பொண்ணு வந்திருக்கு… ஏய் பயப்படாதே. நீ ஒண்ணும் செய்ய வேண்டாம்.. அந்தப் பொண்ணைப் பத்தி யாரும் அறியாம கொஞ்சம் தகவல் சேகரிச்சுக்கிட்டு வரணும்.
கிட்டன் அவன் கேட்ட தகவல்களை மூன்று தினங்களில் தெரிந்து கொண்டு வந்து சொன்னான்.
“காலைல விடியறதுக்கு முந்தி எந்திரிச்சு குடத்தைத் தூக்கிட்டு ஆத்தங்கரைக்கு போவுதுங்க. வெளிச்சம் வந்ததும் குளிச்சுட்டுப் பளிச்சுனு வருதுங்க. கோயிலுக்குப் போவுதுங்க. அப்புறம் பெரியசாமிக்கு டிபன் பாக்சில் சோறு எடுத்துட்டு வயக்காட்டுக்குப் போவுதுங்க… மத்தியானம் சின்னப் புள்ளைங்களோட பாண்டியாடுதுங்க… தோட்டப் பக்கம் போய் பூப்பறிச்சு தொடுத்து அம்மனுக்குக் கொண்டு வந்து கொடுக்குதுங்க, சாயங்காலம் காதர் கடைக்கு ஒரு முறை வந்து சோப்புக் கட்டி, ரவுண்டு முட்டாயி இப்படி எதனாச்சியும் வாங்குதுங்க. பஞ்சாயத்து டீப்புலைட்டு வெளிச்சத்தில் ராத்திரி மத்தப் பெண்களோட அம்மானை ஆடுதுங்க… ரேடியோ கேக்குதுங்க… கிராம நிகழ்ச்சி முடிஞ்ச கையோட ஊட்டுக்குப் போயிடுதுங்க… ஊட்டுக்கு உள்ள தான் தூங்குதூங்க…”
“சரிபோதும், இந்தா எட்டணா…. கடலை வாங்கித்தின்னு”
கிட்டன் தயங்கி, ‘நல்ல பொண்ணுங்க?” என்றான்.
“யாரு இல்லைன்னாங்க. நீ ஏதோ நினைச்சுக்காதே. அடுத்த கிராமத்தில் நமக்கு தெரிஞ்சவங்க மகனுக்கு இந்தப் பொண்ணை எடுக்கலாமான்னு விசாரிக்கச் சொன்னாங்க. அதுக்குத்தான். நீ எதுக்கும் இதை அம்மாகிட்ட சொல்ல வேண்டாம்… என்ன?
“சரிங்க…”
அன்று ராத்திரி படுக்கப் போகுமுன் “தனம், என்னை காலைல அஞ்சு மணிக்கு எழுப்பிடு… டவுனுக்குப் போகணும்” என்றான். “சரிங்க” என்று சொல்லிவிட்டு, தனம் என்றும் இல்லாமல் அவன்மேல் சாய்ந்து, கைகளால் அவனைச் சிறைப்படுத்தியதை விலக்கி, “ஊகூம், எனக்குத் தூக்கம் வருது” என்று திரும்பிப் படுத்துக் கொண்டான்.
தூங்கவில்லை. காலை விடிவதற்குமுன் ஆற்றங்கரை. ஆற்றங்கரைக்குச் செல்லும் வழியில் சோலை. இருட்டு, தனிமை, சந்தர்ப்பம். ஒரே சந்தர்ப்பம். அவளை வீழ்த்தி… தனம் வந்து எழுப்பக் காத்திருந்தான், சின்னப்பன்.
இருட்டின் அமைதியில் மெதுவாக காலடி ஓசை கேட்க நடந்தான். பஞ்சாயத்தின் ஒற்றை விளக்கு வெற்றுக்கு எரிந்துகொண்டிருந்தது. காதர் கடை பூட்டியிருந்தது. கோயில் மூடியிருந்தது. மரத்தடியில் சின்னக்குன்றுகளாக ஆட்கள் படுத்திருந்தனர். சின்னப்பன் சோலை இருட்டை நோக்கி நடந்தான். ஆற்றங்கரை பக்கம் செல்லும் மண் பாதையில் சற்றே விலகி ஒரு மரத்தின் முன் நின்றான்.
படித்துறை அருகில் மஞ்சள் விளக்கின் ஒளி நீரில் நடனம் செய்து கொண்டிருக்க, சின்னப்பன் அவளுக்காகக் காத்திருந்தான்,
கிழக்கு மிக மெலிதாக வெளுக்கத் தொடங்கி, பறவைகள் ஆரம்ப கானங்களுக்குத் தயாராகிக் கொண்டிருக்க சின்னப்பன் அந்தப் பாதையை ஆவலுடன் துடிப்புடன் நடுக்கத்துடன் பார்த்துக் காத்திருந்தான்.
மெலிதான பாடல் முணுமுணுப்புக் குரல் கேட்டது. அவள்தான். அந்த நடை அவளைக் காட்டிக் கொடுத்தது. கையில் குடம். தோளில் துணிகள். உதட்டில் சினிமாப்பாட்டு………..
சின்னப்பன் அவள் அருகே வரக் காத்திருந்தான்.
அவள் வெகு கிட்டத்தில் தெரிந்தாள். மார்பில் இறுக்கக் கூட்டியிருந்த சேலை, இடுப்பில் பாவாடை… சின்னப்பன் சட்டென்று வெளிப்பட்டு, “என்ன கமலம் சௌக்கியமா?” என்றான்.
அவள் திடுக்கிட்டுத் திரும்ப, இடுப்புக் கயிற்றை சரக்கென்று பிடித்து சுருக்கை விடுவித்தான்.
“இவன் தானாடா பூபாலன்!? “
“இவனேதான்! மாரி அண்ணன் கரக்டா சொல்லியிருக்காரு. இந்தப் பொண்ணை அடிக்கடி ஆத்தங்கரைல பூபாலன் சந்திக்க வருவான்னு… எடுடா செயினை….. “.
கமலத்தைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்த சின்னப்பன் மேல் அவ்விருவரும் “டேய்” என்று ஆக்ரோஷமாக பாய்ந்தார்கள்.

நன்றி : அறிவு ஜீவி சுஜாதா வாசகர்கள் குழு