புன்னகைப்பொக்கிஷம்/செல்விபிரகாஷ்🌹

ஒரே ஒரு கீற்றுப் புன்னகைக்கு
எப்போதும் ஏங்கியபடி இந்த உலகம்.

மழையாய் புன்னகைக்கும் மேகத்தின் பூரிப்பை
மலையைவிட யார் அறிவார்.

பூத்துக்குலுங்கி வாசனையைப் புன்னகையாய்
பரவிடும் மலரின் மலர்ச்சியை
வண்டைத்தவிர யாரறிவார்.

மினுக்கியபடி நட்சத்திர
பல்காட்டி வெளிச்சமாய்
புன்னகைக்கும் இரவுக்கு
இன்முகம் காட்டுவது பூமியல்லவா.

ஓடிவந்து மேலிருந்து விழுந்தபடி
புன்னகைக்கும் நீர்வீழ்ச்சியின்
ரகசியக்கதைகளை
நாம் அறிந்ததில்லையா?

பகலின் சூரியப்புன்னகையில்
புவனம் சூல் கொள்கிறதே
தெரியாததா?

புத்தரின் மௌனப்புன்னகை
துறவிகளுக்கு ஞானம் போதிப்பதாயும்
மற்றவருக்கு வாழ்க்கையைப் போதிப்பதாயும்
உணர்த்த அவரின் அந்தக் கரங்களின் ஏந்தல்
காத்துக்கிடக்கிறது.

புன்னகையை வாரிவழங்கும்
புத்தரிடம் வஞ்சனையின்றி
பெற்றுக்கொள்ளுங்கள்
இறுகிய பாறையைப் பூப்படையச்செய்து
புன்னகை வீசவைக்கும்
ஓர் அற்புத ரகசியத்தை.