
சின்ன அண்ணாமலைக்கும் அரசியல் ஈடுபாடு உண்டென்பதால் ‘சக்ரவர்த்தி திருமகள்’ படப்பிடிப்பின் இடைவேளையில் சலிக்காமல் அவரோடு அரசியல் விவாதம் செய்வாராம் எம்.ஜி.ஆர்.
நாட்கள் செல்லச் செல்ல படப்பிடிப்பு தளத்தில் இருவரும் ஒன்றாகவே உணவு அருந்துகின்ற அளவுக்கு அவர்கள் நட்பு வளர்ந்தது. சின்ன அண்ணாமலை நகைச்சுவையாகப் பேசுவதில் வல்லவர் என்பதால், தன்னுடன் பழகுகின்ற எவரையும் மிக எளிதில் கவர்ந்துவிடக் கூடிய ஆற்றல் அவருக்கு இருந்தது.
எம்.ஜி.ஆருடன் நெருக்கமாகப் பழகவும், அவரோடு மனம் விட்டுப் பேசவும் வாய்ப்பு கிடைக்கப் பெற்ற அவர் ஒரு நாள் எம்.ஜி.ஆரிடம், “நீங்கள் ஏன் ராஜா ராணி கதையிலேயே நடித்துக் கொண்டிருக்கிறீர்கள். நல்ல சமூகக் கதையில் நடித்தால் என்ன?” என்று கேட்டார்.
அப்போது சமூகப் படங்களில் நடிப்பதில் எம்.ஜி.ஆருக்கு ஒரு தயக்கம் இருந்தது. அது மட்டுமின்றி அவர் நடித்த சில சமூகப் படங்கள் மிகப் பெரிய தோல்விப் படங்களாக அமைந்தன. ஆகவே, சமூகப் படங்களில் நடிப்பது பற்றி சின்ன அண்ணாமலை கேட்டபோது “சந்தர்ப்பம் வந்தால், பார்க்கலாம்” என்று சொல்லி பேச்சை வேறு திசைக்கு மாற்றினார் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர். சொல்லவில்லை என்றாலும் எதனால் அவர் சமூகப் படங்களைத தவிர்க்கிறார் என்பது சின்ன அண்ணாமலைக்குத் தெளிவாக தெரிந்து இருந்தது.
சமூகக் கதைக்கு ஏற்ற முகம் தனக்கு இல்லை என்றும் அதனால் கிராப் வைத்தால் பார்க்க நன்றாக இருக்காது என்றும் எண்ணிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர். கத்திச் சண்டை இல்லை என்றால் தனது படம் ஓடாது என்று நினைத்துக் கொண்டிருப்பதால்தான் சமூகக் கதையில் நடிக்க பயப்படுகிறார் என்பது சின்ன அண்ணாமலைக்கு தெளிவாகப் புரிந்தது.
இதெல்லாம் தெளிவாக தெரிந்திருந்தும் “நான் ஒரு சமூகக் கதை எடுக்கலாம் என்றிருக்கிறேன். நீங்கள்தான் அதில் நடிக்க வேண்டும்” என்று ஒரு நாள் எம்.ஜி.ஆரிடம் என்று கேட்டார் சின்ன அண்ணாமலை.
சிறிது நேரம் யோசித்த எம்.ஜி.ஆர். “உங்களுக்கு தைரியமிருந்தால் எனக்கொன்றும் ஆட்சேபணை இல்லை. நல்ல கதையாகப் பாருங்கள்” என்று அவரிடம் சொன்னார்.
அப்போது தேவ் ஆனந்த் நடித்த ‘பாக்கெட் மார்’ என்ற இந்திப் படத்தின் தமிழ் உரிமையை வாங்கி வைத்திருந்த சின்ன அண்ணாமலை, அந்த படத்தை எம்.ஜி.ஆருக்கு திரையிட்டுக் காட்டினார். அந்தப் படத்தின் கதை எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்திருந்ததால் அதன் தமிழ்ப் பதிப்பில் நடிக்க தனது ஒப்புதலை அவர் தெரிவித்தார்.
மறுநாள் தனது பங்குதாரரான வி.அருணாசலம் செட்டியாருடன் சியாமளா ஸ்டூடியோவிற்கு சென்ற சின்ன அண்ணாமலை, மேக்கப் அறையில் இருந்த எம்.ஜி.ஆரை சந்தித்து தனது பங்குதாரரை அறிமுகம் செய்துவிட்டு தானும் அவரும் ‘சாவித்திரி பிக்சர்ஸ்’ என்ற பெயரில் ஒரு கம்பெனி துவங்கி இருப்பதாகவும் அதில்தான் எம்.ஜி.ஆர். நடிக்க இருக்கும் படத்தைத் தயாரிக்க இருப்பதாகவும் சொன்னார்.
அவர்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்ட எம்.ஜி.ஆர்., சின்ன அண்ணாமலையோடு அவருக்கு இருந்த நட்பு காரணமாக மிகக் குறைந்த சம்பளத்தில் அப்படத்தில் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டார்.
அதே நேரத்தில் அடுத்த ஆறு மாதத்திற்கு தனது கால்ஷீட்டுகளை எல்லாம் தான் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களுக்கு பிரித்துக் கொடுத்துவிட்டதாகச் சொன்ன அவர் சின்ன அண்ணாமலையின் படத்தை முடிக்க ஒரு குறுக்கு வழியையும் சொன்னார்.
“எல்லா தயாரிப்பளர்களுக்கும் காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணிவரைதான் கால்ஷீட் கொடுத்திருக்கிறேன். அதனால், தினமும் மாலை 6 மணியிலிருந்து இரவு 10 மணிவரை நமது படத்தின் சூட்டிங்கை நடத்திக் கொள்ளலாம்” என்று சொன்ன அவர் தன்னுடைய கால்ஷீட்டுக்கு ஒத்து வருகிற மாதிரி ஒரு நடிகையை கதாநாயகியாகப் போடும்படி அவர்களுக்கு ஆலோசனை கூறினார்.
“கதாநாயகி புதுமுகமாக இருந்தால் இன்னும் நல்லது. நம் வசதி போல் சூட்டிங்கை திட்டமிட்டுக் கொள்ளலாம்” என்றும் ஆலோசனை கூறினார் எம்.ஜி.ஆர்.
அந்தக் காலகட்டத்தில் பி.ஆர்.பந்துலுவின் ‘பத்மினி பிக்சர்ஸ்’ தயாரித்த ‘தங்கமலை ரகசியம்’ படத்தின் கதையை வித்வான் மா.லட்சுமணனுடன் இணைந்து எழுதியிருந்த சின்ன அண்ணாமலை அந்தப் படத்தின் திரைப்பட தயாரிப்புப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்.
ஒரு நாள் சென்னை கடற்கரையில் சின்ன அண்ணாமலை தனிமையாக உட்கார்ந்து கொண்டிருந்தபோது அங்கு இயக்குநர் கே.சுப்ரமணியத்தின் புதல்வி பத்மா சுப்ரமணியம் வந்தார். அவர் கூடவே ஒரு பெண்ணும் வந்திருந்தார். சின்ன அண்ணாமலையை பத்மா சுப்ரமணியம் நன்கு அறிவார் என்பதால் அவர் அருகிலே அமர்ந்து பேசத் தொடங்கினார் அவர்.
பேச்சின் இடையே தான் சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடிக்கும் `தங்கமலை ரகசியம்’ என்ற திரைப்படத்துக்கு கதை எழுதியிருப்பதையும், அதில் வேலை செய்து வருவதையும் சின்ன அண்ணாமலை சொன்னவுடன் தன்னுடன் வந்திருந்த பெண்ணை சின்ன அண்ணாமலைக்கு அறிமுகம் செய்து வைத்தார் பத்மா சுப்ரமணியம். அவர்தான் சரோஜாதேவி.
‘திருடாதே’ படம் ஏ.எல்.எஸ். வெளியீடாக மூன்று ஆண்டு கழித்து வெளிவந்து மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அந்தப் படத்துக்கு வித்திட்டவரும் ‘சரோஜா தேவி’ என்ற தேவதையை தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகம் செய்தவரும் சின்ன அண்ணாமலைதான் என்ற உண்மை பலருக்கு தெரியாமல் போனாலும் சரோஜா தேவிக்கு அவைகள் எல்லாம் தெரியும் என்பதால் `திருடாதே’ படத்தின் நூறாவது நாள் அன்று நூறு தேங்காய், நூறு மாம்பழம், நூறு வாழைப் பழங்களுடன் சின்ன அண்ணாமலையைப் பார்க்க வந்த அவர் அவர் காலில் விழுந்து வணங்கி அவரது ஆசியைப் பெற்றுச் சென்றார்.
நன்றி: டூரிங் டாக்கீஸ்
