
பெண்கள் மொட்டையடித்தாலோ முடியை ஒட்ட வெட்டிக்கிட்டாலோ ஆண்களுக்கு ஒரு சின்ன அதிர்ச்சி, அருவருப்பு வரும்..யோசித்தால் அற்பமா இருக்கும், ஆனால் அது அப்படித்தான். எனில் பெண்கள் வெறும் செக்ஸுவல் ஆப்ஜெக்ட் மட்டும் தானான்னா ஆமா என்பேன். பெஸ்டிகள், நண்பர்களைத் தவிர பெரும்பாலான ஆண்கள் அப்படித்தான் பெண்களைப் பார்க்க முடியும்.
கூந்தல் தான் பெண்ணழகா என்றால் பெண்ணழகு ஒரு கற்பிதம் என்பேன். அழகு மீள மீள நிகழ்த்தப்பட வேண்டும். நிறுத்தினால் அது அழகல்லாமல் சாதாரண உடலாகி விடும். இது ஒரு பண்பாட்டு தொல்படிமம். நீள் கூந்தல், அடர் கூந்தல், கறுப்பான கூந்தல், பெரிய கண்கள், கூர்மையான மூக்கு, வடிவான முகம், மரபார்ந்த ஆடைகள், நடை, இடையசையும் விதம் என ஒவ்வொன்றுமே இந்த நாடகத்தின் அங்கம். சிறுவயது முதலே பெண்கள் தம் அழகை நிகழ்த்துவதற்கு பயிற்றுவிக்கப்படுகிறார்கள். மேற்தட்டினரிடையே சில பெண்கள் முதுமையின் இறுதி கட்டம் வரை தம் தோற்றத்தை சீராக, நளினமாக தக்க வைக்க முயல்கிறார்கள். அப்படி செய்யாத போதும் தன்னிச்சையாக பெண்கள் தம்மை வசீகரமானவர்களாக தமது சின்னச்சின்ன அசைவுகள் வழி, பேச்சு, நடத்தை, கண்கள் வழி காட்டிக் கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களுடைய நோக்கம் உளவியலும் உயிரியல், பரிணாமவியல் நம்புவதைப் போல பாலியல் ஈர்ப்பை உருவாக்குவது அல்ல என எனக்குத் தோன்றுகிறது. ஏனென்றால் பாலுறவை மனித உடல் அல்ல, சமூகக் கட்டமைப்புகளே தீர்மானிக்கின்றன. மாறாக பெண்கள் தம் உடலை அழகுடலாக தொடர்ந்து நிகழ்த்துவது பண்பாட்டு எதிர்பார்ப்புக்குள் தம்மைப் பொருத்திக் கொள்ளவும், தமது சமூகத் தன்னிலையை உறுதி செய்யவுமே. அதனாலே பெண்ணுடல் எப்போதும் சமூகத்தின் மையத்தில் இருக்கிறது. தனிமனித தன்னிலையை விட சமூகத் தன்னிலையை வடிவமைப்பதும், முன்வைப்பதுமே அவர்களுக்கு பிரதான அக்கறைகளாக உள்ளன.
அதே நேரம் தொடர்ந்து நிகழ்த்தும் போது அழகு ஒரு பாரம் ஆகிறது. அதை இறக்கி வைக்க பெண்கள் உள்ளுக்குள் ஏங்குகிறார்கள். அதே நேரம் அது தமக்கு நிகழக்கூடாதே என்றும் பதறுகிறார்கள்.
சில சடங்குகளுக்காகவோ நெருக்கடியில் இருந்து விடுதலையை நாடியோ பெண்கள் தம் கூந்தலை வெட்டியோ முழுக்க தலையை மழித்தோ விட்டால் அது ஒரு பெரிய அதிர்ச்சியாகிறது. உங்கள் அம்மாவுக்கு ஒரே நாளில் முப்பது வயது குறைந்து போனால், உங்கள் ஒரு வயது குழந்தை ஒரே நாளில் பத்து வயது பெரியவனாக வளர்ந்து நின்றால் ஏற்படும் அதிர்ச்சி, ஒவ்வாமை, குழப்பம் தான் அப்போது ஆண்களுக்கும் வரும்.
ஆண்களின் தரப்பில் இருந்து யோசித்தால் அவர்களுக்கு வேறு வழியில்லை – இந்த பாலியல் ஒப்பனைகள், பூச்சுகளுக்கு அப்பால் ஒரு பெண்ணுருவை எதிர்கொள்ள இச்சமூகம் அவர்களை அனுமதிக்காது. யோசித்துப் பாருங்கள் – நமது பெண் தெய்வங்கள் தலை நிறைய கூந்தலும், கட்டான இடையும், வடிவான முலையுமாக அனைத்து அலங்காரங்களுமாகத் தானே தோற்றமளிக்கிறார்கள். ஏன் மொட்டையடித்து மூளியாக தோன்றவில்லை? ஏனெனில் அனேகமாக எல்லா பெண் தெய்வங்களும் fertility cultஇல் இருந்தே தோன்றியதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். நமது சக்தி வழிபாட்டு கல்ட்டில் இருந்து பௌத்த சிற்பவியல் வரை இப்படித்தான் பெண்கள் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆக நம் சமூகப் பண்பாட்டு உளவியலில் பாலியல் தகுதி நிறைந்த பெண்ணுடலானது செழுமை, வளர்ச்சி, மங்கலம், வளம் என முக்கியமான குறிப்பீடுகளைக் கொண்டிருக்கிறது. ஒரு மூளியான / மொட்டையான பெண் தரும் அதிர்ச்சியும் பயமும் வெறுமனே அவளுடைய பாலியல் தகுதியுணர்த்தல் சம்மந்தப்பட்டது மட்டுமல்ல. நமது ஆழ்மனது அதை வேறுவிதமாகவும் தான் உணர்கிறது.
இன்னொரு காரணமும் தோன்றுகிறது – மொட்டை துறவுடன் சம்மந்தம் உடையது. குறிப்பாக சமண, பௌத்த மரபுடன். கடந்த சில ஆயிரம் ஆண்டுகளாக இந்த அவைதீக மதங்கள் மீது மக்கள் மனதில் ஏற்றப்பட்டுள்ள கசப்பும் வெறுப்பும் தான் இச்சந்தர்பத்தில் வெளிப்படுகிறதா?
இன்னொரு சுவாரஸ்யமான விசயம் மலையேறுவது, விரதம் இருப்பது உள்ளிட்ட மதச்சடங்குகளின் பகுதியாக ஒரு பெண் முடியிறக்கும் போது அந்த நாட்டார் சூழலில் வைத்து அவளைப் பார்க்கும் ஆணுக்கு இந்த அதிர்ச்சியும் ஒவ்வாமையும் இராது; ஆனால் அதே பெண் மொட்டைத் தலையுடன் ஒரு நவீனச் சூழலுக்கு வரும் போது அவளை ஏற்றுக் கொள்ள ஆண் மனம் தயங்குகிறது. அவளைப் பார்க்க விரும்பாமல் முகம் திருப்பிக் கொள்கிறது.
பெண்மை ஒரு சூழலின் விளைவாக, அதன் நீட்சியாக மட்டுமே தோன்றத் தக்க சொரூபம். வேறு வழியில்லை.
(படம்: சில வருடங்களுக்கு முன் மனிதி அமைப்பின் போராட்டத்தின் பகுதியாக மொட்டை அடிக்கும் நிகழ்வு நிகழ்ந்தது. அதைப் பற்றி வந்த செய்திக் குறிப்பில் வெளியான படம்.)
