ஒரு கதை ஒரு கருத்து /அழகியசிங்கர்

அந்தோன்சேகவ்வின்வான்கா

கருத்து

அந்தோன் சேகவ்வின் அருமையான சிறுகதையான வான்காவின் கதையைப் படித்தேன்.  ஒன்பது வயது சிறுவனைப் பற்றிய கதை இது.  வான்கா மூக்கவ் வேலை பயிலுவதற்காக 3 வாரங்களுக்கு முன்பு புதை மிதி தயாரிப்பாளர் அல்யாஹினிடம் விடப்பட்டவன்.
பரபரப்பாக இருக்கிறான் வான்கா.  கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முந்திய இரவு அவன் தூங்கவில்லை. எசமானனும் எசமானியும் முதுநிலை வேலை பயிற்சியாளர்களும் கோவிலுக்குப் புறப்பட்டுச் செல்லும் வரை காத்திருந்தான். 
பிறகு அலமாரியிலிருந்து மசிப்புட்டியையும் துருப்பிடித்த முனை கொண்ட பேனாக்கட்டையையும் எடுத்து வந்து, கசங்கிப் போன காகிதத்தைப் பிரித்து வைத்துக்கொண்டு எழுதத் தயாராகி விட்டான்.
யாருக்கு இந்தக் கடிதத்தை எழுதத் துடிக்கிறான்.  அவனுடைய தாத்தாவிற்குத்தான்.  அன்புக்குரிய தாத்தா கன்ஸ்தன்தீன் மக்காரிச் என்று எழுத ஆரம்பித்தான்.  அந்தக் கடிதத்தில் தாத்தாவிற்குக் கிறிஸ்மஸ் வாழ்த்தைத் தெரிவிக்கிறான்.  வான்காவிற்கு அம்மாவும் இல்லை அப்பாவும் இல்லை.  எல்லாம் தாத்தாதான். 
அவனுடைய தாத்தா கன்ஸ்தன்தீன் ழிவரியோவ் என்றொரு நிலப்பிரபுவின் பண்ணையில் இரவு நேரக் காவற்காரராய் வேலை பார்த்து வந்தார்  65 வயதானவர்.  பகல் பொழுதில் பின்கட்டு சமையலறையினுள் தூங்குவார். அல்லது சமையல் காரிகளோடு வேடிக்கையாகப் பேசிக்கொண்டு பொழுதைப் போக்குவார். 
இரவில் பெரிய ஆட்டுத்தோல் கோட்டு அணிந்து பண்ணையைச் சுற்றி நடப்பார்.  அவருடன் விலாங்கு என்ற நாய் தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டு உடன் வரும்.  இந்த விலாங்கு பணிவு மிக்கதாய் வாலைக் குழைத்துக் கொண்டு வரும்.  ஆனால் அதை யாராலும் நம்ப முடியாது.  திருட்டுத்தனமாய் வந்து காலைக் கடிப்பதிலும், யார் கண்ணிலும் படாமல் குளிர்க் கிடங்கினுள் நுழைவதிலும், விவசாயிகளுடைய கோழிக் குஞ்சுகளைக் கவர்ந்துகொண்டு ஓடுவதிலும் அது தேர்ந்த திறமைசாலி. அதன் பின்னங்காலில் எத்தனையோ தரம் வெட்டுக் காயம் பட்டிருக்கும் இருமுறை அதைக் கட்டி அந்தரத்தில் தொங்க விட்டார்கள்.உயிர் போகிற நிலைக்கு ஆளாக்கியிருக்கிறார்கள். 
தாத்தாவை நினைத்துக்கொண்டு பெருமூச்சு விட்டவாறு கடிதம் எழுதுகிறான்.  
நேற்று என்னை அடித்து நொறுக்கி விட்டார்கள்.  முடியைப் பிடித்து எசமான் என்னை வெளி முற்றத்துக்கு இழுத்துச் சென்று கடிவாள் வாரால் நையப் புடைத்தார்.  காரணம் என்னவென்றால் அவர்களுடைய குழந்தையை ஆட்டிக் கொண்டிருக்கையில் தவறிப் போய் நான் தூங்கி விட்டேன்.  
இப்படி அற்ப காரணத்திற்காக அடி வாங்குகிறான்.  ஒன்பது வயதான அவனால் இதையெல்லாம் தாங்கிக் கொள்ள முடியவில்லை.  மேலும் அவனுடைய எசமானி வேறு அவனைக் கொடுமைப் படுத்துகிறாள்.  மீனைச் சுத்தம் செய்யக் கொடுக்கிறாள். வான்கா வால் பக்கத்திலிருந்து ஆரம்பித்தான்.  உடனே எசமானி அந்த மீனைப் பிடுங்கி அதன் தலையை அவன் முகத்திலே வைத்துத் தேய்த்தாள்.  மற்ற வேலைக்காரர்களும் அவனைக் கேலி  செய்கிறார்கள்.  மது விடுதிக்குப் போய் வோத்கா வாங்கி வரச் சொல்கிறார்கள்.  எசமானுடைய தோட்டத்தில் போல் வெள்ளரிக் காய்களைத் திருடி வரும்படிக் கூறுகிறார்கள். 
பெரும்பாலும் அவமானத்துடனும் பட்டினியுடன்தான் அவன் இருக்கிறான். காலையில் ரொட்டி தருகிறார்கள். மத்தியானத்துக்குக் கஞ்சியும், இரவில் மீண்டும் ரொட்டியும் கொடுக்கிறார்கள்.  தேநீரோ, முட்டைக் கோஸ் சூப் எதுவும் கிடைப்பதில்லை. 
வான்கா இதையெல்லாம் எழுதிவிட்டு தாத்தாவிடம் கெஞ்சிக் கேட்கிறான்.  என்னை அழைத்துக் கொண்டு போய் விடு என்று.  
உன்னை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன், எந்நாளும் மறக்காமல் உனக்காகப் பிரார்த்தனை செய்வேன். என்னை இங்கிருந்து அழைத்துச் சென்று விடு, இல்லையேல் நான் செத்துத்தான் போவேன்

என்று அந்தோன் செகாவ் அவன் நிலைமையை விளக்குகிறார்.
கண்ணீர் மல்க வான்கா இன்னும் எழுதுகிறான். ‘எனது அன்புக்குரிய தாத்தாவே, என்னால் சகிக்க முடியவில்லை, எனக்கு உயிர் போகிறது இங்கிருந்து ஓடி விடலாம். நடந்தே கிராமத்துக்கு வந்து விடலாம். ஆனால் என்னிடம் புதை மிதியடிகள் இல்லை. கடுங்குளிர் தாங்க முடியாதே என்று பயந்துகொண்டு சுமமாயிருந்தேன். கருத்துடன் உன்னைக் கவனித்துக் கொள்கிறேன். யாரும் உன்னைத் துன்புறுத்த விட மாட்டேன். நீ இறந்தபின் உன்னுடைய ஆத்மாவுக்காகப் பிரார்த்தனை செய்வேன். என் அம்மாவுக்காகப் பிரார்த்தனை செய்கிறேனே அதே போலச் செய்வேன் என்கிறான் வான்கா.
வான்காவின் கடிதம் தொடருகிறது. ‘அருமைத் தாத்தா, பண்ணை வீட்டில் கிறிஸ்மஸ் மரம் வைக்கையில் எனக்கு ஒரு தங்கக் காய் எடுத்துப் பச்சைப்பெட்டியில் பத்திரமாய் வை. திருமதி ஒல்கா இக்னாத்யென்னாவிடம் கேட்டு வாங்கு..வான் காவுக்கு என்று சொல்லு.’
அன்புக்கு ஏங்கும் ஒன்பது வயது சிறுவனான பழைய கனவில் மூழ்கி விடுகிறான். அவனை அவன் தாத்தா பண்ணைவீட்டுக் கனவான்களுக்குக் கிறிஸ்மஸ் மரம் கொண்டு வருவதற்காக அழைத்துச் சென்றது நினைவுக்கு வந்தது. அப்போதெல்லாம் காலம் எவ்வளவு இப்பகரமாக இருந்தது என்று யோசனை செய்கிறான்.
திருமதி ஒல்கா இக்னாத்யெவ்னாதான் – வான்காவுக்கு மிக்கப் பிடித்தவர் – யாரையும் விட முன்னிலையில் நின்று வேலை செய்வார். வான் காவின் தாயாகிய பெலகேயா உயிரோடு இருந்த காலத்தில், பண்ணை வீட்டில் அவள் வேலை புரிந்து வந்தபோது ஒல்கா இக்னாத்யெவ்னா வான்காவுக்கு மிட்டாய்த் தருவது வழக்கம். அவனுக்கு அவர் எழுதவும், படிக்கவும் நூறு வரை எண்ணவும் சொல்லிக் கொடுத்து மகிழ்வார், நடனமாடுவதற்குக் கூடக் கற்றுத் தந்தார். ஆனால் அவன் தாயார் பெலகேயா இறந்தபிறகு, அனாதையாகிவிட்ட வான்கா பின்கட்டுச் சமையலறைக்கு, அவனுடைய தாத்தாவிடம் அனுப்பப்பட்டு விட்டான். அங்கிருந்து மாஸ்கோவுக்குப் புதைமிதி தயாரிப்பாளர் அல்யாஹினிடம் கொண்டு வந்து விடப்பட்டான்.
தன் துயரங்களை வான்கா கடிதம் மூலம் எழுதிக்கொண்டிருக்கும்போது பழைய நினைவுகளுக்குப் போய் விடுகிறான். கதையின் உத்தி சிறப்பாகவே பயன்பட்டிருக்கிறது. ஒவ்வொருவரும் வாசிக்கத் தூண்டும் விதமாக.
வான்கா தாத்தாவைக் கெஞ்சி எழுதுகிறான்.
தாத்தா, உடனே புறப்பட்டு வா, என்னை இங்கிருந்து அழைத்துச் சென்றுவிடு என்று மேலும் எழுதுகிறான்.
இப்படிக் கெஞ்சும்போது எதையெதையோ சொல்லி கெஞ்சுவார்கள். வான்கா அந்த நிலைக்குப் போய்விட்டான். அவன் கடிதம் உருக்கமாக இருக்கிறது.
ஏசுநாதர் அருள் புரிவார், என்னை அழைத்துச் சென்று விடு. உன்னை நான் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.. அனாதைச் சிறுவனான நான் துன்புறுகிறேன். எனக்கு நீ கருணை காட்ட வேண்டும். எந்நேரமும் என்னை அடிக்கிறார்கள். எந்நேரமும் நான் பசியாய் இருக்கிறேன். துன்பம் தாங்கமாட்டாமல் எப்போதும் அழுது கொண்டிருக்கிறேன் என்றெல்லாம் மிக வருத்தத்துடன் கண்கலங்கியபடி கடிதம் எழுதுகிறான்.
இப்படி எழுதிக்கொண்டிருக்கும்போது அல்யோனாவுக்கும், ஒற்றைக் கண் எகோருக்கும், கோச் வண்டிக்காரருக்கும் அன்பைத் தெரிவிக்கிறான். கன்சர்ட்டினா இசைத் துருத்தியை யாரிடமும் கொடுத்து விடாதே என்கிறான்.
பின் காகிதத்தை நான்காய் மடித்தான். ஒரு கப்பேக் கொடுத்து இதற்கு முந்திய தினம் அவன் வாங்கி வைத்திருந்த உறையினுள் அதைப் போட்டு மூடினான். பிறகுச் சற்று சிந்தனை செய்துவிட்டு, பேனாவால் மசியைத் தொட்டு எழுதினான் :
தாத்தா கன்ஸ்தன்தீன் மக்காரிச், கிராமம் என்று முடிக்கிறான். யாரும் தலையிட்டு தான் எழுதுவதைத் தடுக்கவில்லை என்று மகிழ்ச்சி அடைகிறான். கடிதத்தை தபாலில் சேர்க்க கோட்டு எதுவும் போட்டுக்கொள்ளாமல் வெறுஞ்சட்டையோடு தெருவுக்கு ஓடினான்.
அருகாமையிலிருந்த தபாற்பெட்டியிடம் ஓடி மதிப்பிற்குரிய தனது கடிதத்தை அதன் இடுக்கினுள் போட்டான்.
ஒன்பது வயது சிறுவன் தன் தாத்தாவை அழைக்க உருக்கத்துடன் கடிதம் எழுதி அனுப்புகிறான்.
இந்தக் கடிதத்தை தபாலில் சேர்த்த பிறகு ஒரு மணி நேரத்தில் அவனுக்குத் தூக்கம் வந்து விடுகிறது. அவனுக்கு ஒரு கனவு வருகிறது. ஒரு கணப்படுப்பு தோன்றியது. கணப்படுப்புப் பரணில் காலைத் தொங்கப் போட்டுக்கொண்டு உட்கார்ந்த அவனுடைய தாத்தா அந்தக் கடிதத்தைச் சமையல்காரிகளுக்குப் படித்துக் காட்டினார் என்று முடிகிறது கதை. இந்தக் கதையை ரா கிருஷ்ணையா மொழி பெயர்த்துள்ளார்.
ஒன்பது வயது சிறுவனுடைய பார்வையில் கதையை அந்தோன் சேகவ் அற்புதமாக எடுத்துக்கொண்டு போகிறார். இக் கதையை எத்தனை முறை படித்தாலும் அலுக்காது. ஒவ்வொருவரும் எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளக் கூடிய கதை.