நேர் காணல்/எஸ் வி வேணுகோபாலன்


முன் பின் அறிந்திராத மனிதர்களோடும் இலகுவாக அறிமுகம் செய்துகொண்டு பேசும் பழக்கம் இளமையில் இருந்தே ஏற்பட்டு விட்டது என்று தோன்றுகிறது. பள்ளிக்கூடத்தில், கல்லூரியில், வங்கிப்பணியில் அருகருகே இருப்போரிடம் மட்டுமல்ல, வெவ்வேறு இடங்களில் இருப்போரோடும் நட்பு உருவானதுண்டு. சுவாரசியமான செய்திகள், எங்கெங்கோ பார்த்தும் கேட்டும் கேள்விப்பட்டும் வாசித்துமாக வாழ்க்கை அனுபவப் பெரும்பானையில் நிரம்பிக் கொண்டே இருப்பதன் ரகசியம் இதுவாகத் தான் இருக்கும்.

இதழாளர் என்கிற பொறுப்பு பிறகு ஒரு காலத்தில் வந்தமைந்தாலும், அப்படியான ஒரு பண்பு எப்படியோ இளவயதிலேயே குடியேறிவிட்டிருக்கிறது. அதற்கு முன்பே நிறைய பேரை நேர் காணல் செய்ததன் பட்டியல் இப்போது இல்லை, ஆனால், அவர்கள் மூலமறிந்த செய்திகள் மறவாமல் தேவைப்படும் போதெல்லாம் நினைவில் வந்து நிற்கும்.

தீக்கதிர் சிறப்பு மலருக்காக, ஸ்பாஸ்டிக் சென்டர் பூனம் நடராஜன் அவர்களை நேர் காணல் செய்தது ஒரு வித்தியாசமான அனுபவம். பேங்க் ஒர்க்கர்ஸ் யூனிடி இதழ் பொறுப்பாசிரியராக 2005 ஜூன் மாதத்தில் பொறுப்பேற்றுக் கொண்டதும், ஆசிரியர் குழுவின் மாதாந்திர கூட்டங்களில் ஒரு சிறப்பு விருந்தினரை அழைப்பது, அவரது உரையை அடுத்த இதழில் வெளியிடுவது என வெளியிட்டு வந்ததில், ராஜன் பாபு அவர்கள் பங்களிப்பு முக்கியமானது, ஒரு கட்டத்தில் அந்தப் பொறுப்பை நானும் நிறைவேற்றியதுண்டு. நானும் அவருமாக எழுதியவற்றில் விடுதலைப் போராட்ட வீரர் என் சங்கரய்யா, சுதந்திரப் போராட்ட வீராங்கனை மீனா கிருஷ்ணசாமி, கல்வியாளர்கள் ச மாடசாமி, அருணா ரத்னம், பேரா சந்திரா, எழுத்தாளர் ச தமிழ்ச்செல்வன், ஆயிஷா இரா நடராசன், திரைத்துறை எம் சிவகுமார், திருநங்கை பிரியா பாபு, மரண கானா விஜி என முப்பதுக்கு மேற்பட்டவர்களது சிறப்பான பதிவுகள்.

புத்தகம் பேசுது இதழுக்காக, எழுத்தாளர் – கிராம வங்கி ஊழியர் இயக்கத் தலைவர் தோழர் ஜா மாதவராஜ் அவர்களை நேர் காணல் செய்ய நேரே சாத்தூர் சென்றது மறக்கவே முடியாத அனுபவம். எழுத்தாளர் ஜாகீர் ராஜா மிகவும் வாழ்த்திக் கொண்டாடிய பதிவு அது. கடந்த ஆண்டு மதுரை பல்கலை ஆசிரியர் இயக்க முன்னோடி பேராசிரியர் கே ராஜூ அவர்களை நேர் காணல் செய்தது, கொரோனா காலம் – என் மைத்துனி மகன் திருமண வரவேற்பு தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பு மண்டபத்தில் சில வேலைகள் செய்தபடியும், அதற்கு முன்பே வீட்டில் இருந்தபடியும், மறுநாள் திருமணம் முடிந்து மண்டபத்தில் இருந்து எல்லாம் எடுத்துக் கொண்டு திரும்பும் குறுகிய நேர வாகனப் பயணத்தினூடும் அலைபேசியில் பேசியதை அப்படியே நினைவில் நிறுத்திப் பின்னர் எழுதியனுப்பிய நேர் (பாராத) காணல் ஆகச் சிறப்பாக அமைந்தது. ஆசிரியர் இயக்க அனுபவங்களின் முக்கிய ஆவணம் அது.

நேருக்கு நேர் அமர்ந்து உரையாடல் நடத்தி, அதை மற்றவர்களும் நேருக்கு நேர் பார்த்தறியவும், அதன் காணொளிப்பதிவு பின்னர் எண்ணற்றோர் பார்க்கவுமான வாய்ப்பு ஏற்படுத்தி வரும் குவிகம் அன்பர்களுக்கு உளமார்ந்த நன்றி. சங்கிலித் தொடர் நேர் காணல் எனும் சுவாரசியமான உத்தியில் கவிஞர் நாகேந்திர பாரதி இந்த மாதம் ஐந்தாம் தேதி நடத்திய உரையாடல், செறிவான பல அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வைத்தது. அவரது அணுகுமுறை, பார்வையாளர்களது ஒன்றுபட்ட பாராட்டைப் பெற்றது இங்கே குறிப்பிட வேண்டியது.

நேர் காணலுக்குப் பிறகு அலைபேசி உரையாடலில் கவிஞர் ராகவன் மதுவந்தி, ‘உங்கள் குழந்தைகளைப் பற்றி கேட்க விரும்பினேன்’ என்றார். உண்மைதான். நான் சொல்லியிருக்க வேண்டிய அம்சங்களில் ஒன்று.

மகள் இந்து, அருமையான ஓவியர், ஆர்க்கிடெக்ட், தற்சமயம் தனியார் நிறுவனம் ஒன்றிற்கு, குறிப்பாகக் குழந்தைகளுக்கான விளக்கப்படங்கள் வரைந்து கொடுத்துக் கொண்டிருக்கிறாள். எனது புத்தகங்களுக்கு மிகவும் வனப்பான அட்டைப்படங்கள் அவள் வரைந்தது தான். தர்ப்பண சுந்தரி அட்டைப்படம் பார்த்த மாத்திரத்தில் அசந்துபோய், அவள் திருமணத்திற்கு கேட்டரிங் செய்து உதவிய (மறைந்த) செல்லப்பா சார், சட்டென்று பாக்கெட்டில் இருந்து ஐந்தாயிரம் ரூபாய் எடுத்துக் கொடுத்து, ‘இப்படியான கலையைக் கொண்டாடணும், குழந்தை அமோகமாக வரணும்’ என்றார். மருமகன் அஷ்வின், பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணிபுரிபவர், எனது பணி நிறைவு நேரத்தில் வங்கிக்கு வந்த சமயம், அவரையும் பேச அழைத்தபோது, நெகிழ்ந்து உடைந்து கண்ணீர் சிந்திப் பேச இயலாது திணறும் அளவு அன்பை வெளிப்படுத்தியவர்.

மகன் நந்தா, நாளை (ஜூன் 7) அவனது பிறந்த நாள், பி காம் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் நாளை தொடங்குகின்றன. கதைகளை, திரைப்படங்களை, பாடல்களை – ஏன், மனிதர்களையும் நுட்ப நோக்கர் என்று சொல்ல வேண்டும். இளவயதில் வீட்டைச் சுற்றி இருக்கும் வீதிகளில் அன்றாட நடை அத்தனை நடந்திருக்கிறோம், கதைகள் சொல்லாமல், பாடல்கள் பாடாமல் உறங்கப் போகாதவன், கல்லூரிக்கு வந்தபின்னும் கதைகள் சொல்லி இருக்கிறேன். நேரத்திற்குப் பொருத்தமான திரைக்காட்சியை, வசனத்தை, பாடல் வரியைச் சட்டென்று நினைவு கூரும் அபார ரசனை மிக்கவன். மிகப்பெரிய நட்பு வட்டம் அவனது.

எனக்கு பணி நிறைவு நேரத்தில் லேப் டாப் பரிசளித்து, இனிமேல் நிறைய எழுதணும் என்று வாழ்த்தியவர் என் மாமியார் கோமதி அம்மாள், என் தாய்தான் அவரும்.

தன்னம்பிக்கை, துணிச்சல், போராட்ட குணம் இவற்றை என் தந்தையிடமிருந்தும் தாய் வழி பாட்டியிடமிருந்தும் அதிகம் பெற்றிருக்கிறேன். டெபுடி கலெக்டராக நிமிர்ந்து நின்று பணிமுடித்தவர் என் தந்தை. ஒரு தலைமை ஆசிரியரின் இல்லத்தரசி தான் கே சி ராஜலட்சுமி என்னும் என் பத்தாணிப் பாட்டி. ஆனால், கிராமத்து நிலபுலன்கள், விதைப்பாடு, அறுவடை சகலமும் ஒற்றை ஆளாக மேற்பார்வை பார்த்து, ஆட்காரர்கள் மதிப்பும், அன்பும் வென்றெடுத்த அசாத்திய உழைப்பாளி, அதிர வைக்கும் ஆளுமை படைத்த குள்ள மனுஷி. தனது கணவர் கண்ணில் பார்க்காமல் பரிதவித்துப் போன பென்ஷனுக்கு அவர் மறைந்த அடுத்த சில நாட்களில் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வேகாத வெயிலில் செருப்பணியாத காலோடு மைல் கணக்கில் அலையாய் அலைந்து போராடிப் பெற்றுக் கடைசி வரை குடும்ப பென்ஷன் எனும் கம்பீரத்தோடு வாழ்ந்து மறைந்தவர்.

இரண்டரை வயதில் நான் பறிகொடுத்த என் தாய் சுகந்தா, கோலங்கள், இருதய கமலம், பாட்டிலுக்குள் சங்கிலி கோத்துச் செய்யும் வெளிப்பாடுகள் என நுட்பமான கலைத்திறன் மிக்கவராக இருந்தவர். சுகந்தா, என் தந்தையின் அக்கா மகள். அவள் மறைவில் நான் வாலாஜாபாத்தில் பாட்டனார் பாட்டி இல்லத்தில் வளர்ந்தேன், பின்னர் தந்தையோடு சென்னைக்கு இடம் பெயர்ந்தேன், பாட்டனார் ஆசைக்காக மீண்டும் காஞ்சிக்கு வந்து சேர்ந்த இரண்டே மாதங்களில் அவரையும் இழந்தேன்.

நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன், தாத்தா இறந்த வருடம்! என் கண்ணில் இன்னும் நிலைத்திருக்கும் காட்சி, கலெக்டர் அலுவலகத்தில் ஊழியர் ஒருவர் என் பாட்டியை மாடிப் படிக்கட்டு பக்கம் அழைத்துவந்து லஞ்சம் கொடுத்தால் தான் வேலை ஆகும் என்ற போது, ஆவேசம் பொங்க அவரை மிரட்டிவிட்டு, நேரே விடுவிடென்று என்னையும் அழைத்துக்கொண்டு சின்ன காஞ்சிபுரம் சன்னதி தெருவில் ஓய்வு பெற்ற கல்வித் துறை அதிகாரி ஒருவரிடம் புகார் செய்து, ‘ரசாயனம் தடவிப் பணத்தைக் கொடுத்து அவனைக் கையும் களவுமாகப் பிடித்துத் தருகிறேன், டிபார்ட்மெண்டில் சொல்லி உள்ளே தள்ளுங்கள், ஒரு விதவைப் பெண்மணியிடம் என்ன திமிர் இருந்தால் காசு கேட்பான்?’ என்று சத்தம் போட்டார், ஒற்றை நயா பைசா யாருக்கும் கொடுக்காமல் எல்லாம் பெற்றார்.

என்னைக் கண்ணாய்க் கண்ணின் கருமணியாய் வளர்த்தெடுத்தவர் அவர். எண்ணற்ற உறவினர் வந்து போகும் ரயில்வே சந்திப்பு தான் காஞ்சியில் அவர் வசித்த இல்லம். அவர் மடியில் உறங்கிய உறக்கம், அவர் கண்ணில் சேகரமான கண்ணீர்த் துளிகள் பட்டுப் பட்டுக் குழி விழுந்துபோன கன்னங்கள். தாத்தா இறந்தபின்னர், எப்போதாவது கண்ணாடியில் முகத்தைப் பார்க்கையில் கை மறதியாகத் தமக்குப் பிடித்தமான வாடா மல்லி குங்குமத்தை எடுத்து நெற்றியில் இடப்போய், தாமாகத் தலையாட்டி மறுத்துக்கொண்டு புடவை நுனியால் இடாத அந்தக் குங்குமத்தைத் துடைக்கிற சாக்கில் கண்களைத் துடைத்துக் கொண்டு நகர்வதைப் பார்த்து இரவுகளில் நினைத்து நினைத்து அழுதிருக்கிறேன் பள்ளிக்கூட நாட்களில். காஞ்சிபுரம் கருட சேவை எனில் பத்தாணி வீட்டில் ஐம்பது நூறு என்று குவிவார்கள் உறவினர்கள், எல்லோருக்கும் காலை நான்கரை மணிக்கு காஃபி பொங்கி இருக்கும் அவளது அன்பின் பெரும் பாத்திரங்களில்! சமரசமற்ற காட்டமான விமர்சனங்கள் வைத்துக் கொண்டே முரட்டுப் பாசத்தோடு உறவுகளைக் கொண்டாடிக் களித்த தாய் அவள்.

எண்பதுகளில், ‘சாமி இல்லை, பூதம் இல்லை’ என்று சொல்கிறானே என்று என் நெருங்கிய உறவு வட்டம் அதிர்ந்து போன நாட்கள் எனக்கு மிகுந்த சஞ்சலம் கொடுத்தவை தான். அறவுணர்வோடு கடந்து விட்டேன் அந்தக் காட்டாற்றை. ஆனால், இலட்சிய உணர்வுகளில் திடமாக நின்ற என்னைக் காட்டிலும், பாசத்திற்காகத் தனது சித்தாந்தத்தைத் தளர்த்திக் கொண்டு இறங்கி வந்து படிகளில் உயர்ந்து நின்றவராகிப் போனார் என் தந்தை.

1991 செப்டம்பர் 11 அன்று பம்மலில் ஓர் எளிய இல்லத்தில் ராஜேஸ்வரிக்கும் எனக்கும் திருமணம் செய்து வைத்தபோதும் சரி, 2019 ஏப்ரல் 7 அன்று காலை எங்கள் மகள் இந்து – அஷ்வின் திருமணத்தை நடத்தி வைத்த போதும் சரி, சடங்குகள் எதுவும் கிடையாது என்பதை உளப்பூர்வமாக ஏற்றுக் கொண்டவர் அவர். அது மட்டுமல்ல, தமது 92ம் வயதில் திருமண மேடையில் கணீர் என்ற குரலில், ‘மிகுந்த பெருமையோடு இந்தத் திருமணத்தை நடத்தி வைக்கிறேன், என் மகனும் மருமகளும் பொதுவாழ்க்கையில் உயர்த்திப் பிடிக்கும் இலட்சியங்களை மதிக்கிறேன்’ என்று சொன்னவர்.

வரும் 17ம் தேதி அவரது முதலாம் ஆண்டு நினைவு நாள். இந்த ஓராண்டில் எழுதிய இசை வாழ்க்கை, வாசிப்பு ரசனை வாழ்க்கை, உறவுகள் தொடர்கதை, திரை ரசனை வாழ்க்கை என்ற தொடர்கள் எல்லாவற்றிலும் பொருத்தமான இடத்தில் அவரைப் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுவிட்டன என்பது சிலிர்க்க வைக்கும் விஷயம். இந்தத் தொடர்கள் விரைவில் நூலாக்கம் பெற வேண்டியவை, ராய செல்லப்பா அவர்கள் கேட்டிருந்த விஷயம் இது.

கவிஞர் நாகேந்திர பாரதி நேர் காணலை அணுகிய விதம் பாராட்டுக்கு உரியது. கேள்விகள், கருத்துகள் பகிர்ந்து கொண்டோருக்கும், காணொளி பார்த்து மறுமொழி அனுப்பி வாழ்த்துவோருக்கும் எத்தனை நன்றி சொன்னாலும் தகும்.


4 Attachments
Preview YouTube video குவிகம் இணையவழி அளவளாவல் – -நேர்காணல் கேள்விகள் நாகேந்திர பாரதி – பதில்கள் S V வேணுகோபால்

8 Comments on “நேர் காணல்/எஸ் வி வேணுகோபாலன்”

  1. அபாரம். உங்கள் எழுத்து நடையும், வர்ணனையும், அற்புதமான நினைவா ற்றலும்….. என்ன சொல்வது… பிரமிக்க வைக்கிறரது. வாழ்த்துக்கள் தோழா

  2. நுட்ப நோக்கருக்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள். உங்கள் இருவரின் மக்கள் வாழ்வில் சிறந்து விளங்குவார்கள் என்பது திண்ணம். உங்களை வளர்த்தவர்கள் கண்டிப்பாக விண்ணுலகத்திலிருந்து உங்கள் எல்லோரையும் வாழ்த்துவார்கள். அவர்களோடு சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன் நண்பரே

  3. வேணுகோபாலன் என்னும் பன்முகத் தெய்வமணியின் கட்டமைப்பு எத்தகைய ஆற்றல்களால் செறிவூட்டப் பெற்றிருக்கிறது என்பதனை அறியுங்கால் அத்துணை பேரையும் வாழ்த்தி வணங்கத் தோன்றுகிறது. வீடும், நாடும் பயனுற உங்கள் பணி செவ்வனே தொடர வாழ்த்துதும்.

  4. நேர்காணல் அருமையாக இருந்தது. சிறு வயதிலேயே உங்கள் ரசிக்கும் தன்மையும் அதை நீங்கள் வெளிப்படுத்தும் நேர்த்தி யும் எப்படி வளர்க்கப்பட்டது என்று நீங்கள் விளக்கிய விதம் பிரமிக்க வைத்தது.
    உங்கள் சாதனைகள் மேலும் வளர என் வாழ்த்துகள்.

  5. அனைத்து பதிவுகளையும் உள்ளபடியே முன்பே அறிந்தவன் என்றாலும் ஒவ்வொரு முறையும் புதிய செய்தி ஒன்று அதில் இருக்கும். எப்படி வாழவேண்டும் என்று மனதில் தோன்றியதோ , அப்படியே நினைத்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். அனைவரின் பேரன்பும் ஆதரவும் இல்லாமல் இது சாத்தியப்படுவதில்லை. இதுவே மிகப் பெரிய மகிழ்ச்சி.
    வெகு சிலருக்கு தான் இந்த சூழ்நிலை அமையும்.
    அந்த நல்ல அனைத்து உள்ளங்களுக்கும் எனது பாராட்டுக்கள்.
    தங்களது இணையர், மகள் இந்து அவர்தம் குடும்பத்தினரும், மகன் நந்தா, மற்றும் தங்களது சகோதரர்கள் உள்ளிட்ட குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள். மேலும் பல சிறப்புகள் பெறவேண்டும்.
    நந்தாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  6. உங்களது குடும்பத்தினரை அறிமுகப் படுத்திய விதம் அருமை. ஆழம். பேட்டியில் பதில்கள் ரசனையோடு வெளிப்பட்டன. கடைசி கேள்வியின் பதிலில் மனிதம் கசிகிறது. ‘கங்கை இன்னும் வற்றிவிடவில்லை’ நிழலாடியது. சேவைகள் தொடர வாழ்த்துக்கள்.

Comments are closed.