
பத்தினியைக் கைவிட்டு
பாதி இரவில் வெளியேறிய
சித்தார்த்தன் எதற்காக
சிரித்திருப்பான்? தெரியவில்லை!
புத்தி ஞானம் வந்து
போதி மரத்தடி அமர்ந்து
போதனைகள் செய்தவனும்
புன்னகைக்க வழியுமில்லை!
சீனத்து கலைஞன் மட்டும்
செய்துவைத்த சிற்பத்தில்
புன்சிரிப்பு முகம்காட்டும்
புத்தனை வடித்தது ஏன்?
அழுதபடி பிறப்போர் முன்
ஆனந்தக் கை உயர்த்தி
சிரித்தபடி பித்தன் அவன்
சேதி சொல்ல எழுந்தானோ?
