தமிழ்க் கவிதை உலகில் தனித்தடம் அமைத்தவர், தனித்த இடம் பெற்றவர் கவிஞர் ஈரோடு தமிழன்பன். வானம்பாடிகளில் ஒருவராயிருந்து இலக்கியப் பயணம் தொடர்ந்தவர். தனக்கென ஓர் இலக்கிய வானத்தை உருவாக்கி இயங்கி வருபவர். உலக இலக்கியங்களை உள்வாங்கி தமிழ்க் கூறு நல்லுலகிற்கு அறிமுகம் செய்தவர். பாப்லோ நெருதா என்னும் ஆங்கிலக் கவிஞரும் பாரதிதாசன் என்னும் தமிழ்க் கவிஞரும் கவிஞர் ஈரோடு தமிழன்பனின் இரண்டு இலக்கிய கண்கள். மரபு, புதிது, ஹைக்கூ என கவிதைகளின் அனைத்துத் தளங்களிலும் ஆழமாய்க் கால் பதித்தவர். கவிஞர் ஈரோடு தமிழன்பனின் முதல் கவிதைத் தொகுப்பு ‘ தமிழன்பன் கவிதைகள்’. முதல் ஹைக்கூ தொகுப்பு ‘ சூர்யப் பிறைகள்’.
பதினான்காம் நூற்றாண்டு ஜப்பானில் தோன்றிய ஹைக்கூ மகாகவி பாரதியார் அவர்களால் மொழி பெயர்த்து 1916ஆம் ஆண்டு தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு நீண்ட இடை வெளிக்குப் பின் சுஜாதா, சி. மணி, தமிழ்நாடன், அமுதபாரதி, அறிவுமதி என பலர் ஹைக்கூ வளர்ச்சியில் பங்காற்றி இருந்தாலும் கவிஞர் ஈரோடு தமிழன்பனின் பங்களிப்பு பிரமிப்பிற்குரியது. கவனிப்பிற்குரியது. குறிப்பிடலுக்குரியது.
தமிழின் முதல் ஹைக்கூ தொகுப்பு அமுதபாரதியின் புள்ளிப் பூக்கள் என்பது பதிவு. இரண்டாம் தொகுதி அறிவு மதியின் புல்லின் நுனியில் பனித்துளி. மூன்றாம் தொகுப்பு கழனியூரனின் நிரந்தர மின்னல்கள். நான்காவதாக இடம் பெற்றதே தமிழன்பனின் சூர்யப் பிறைகள். இவை நான்கும் ஆறு மாதத்திற்குள்ளேயே ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்தன. வரிசையில் மாறுபட்டாலும் சமகாலத்தியது என்றே குறிப்பிடலாம். முதல் மூவரும் ஹைக்கூ என்றளவிலேயே இயங்குகின்றனர் எனில் தமிழன்பன் ஹைக்கூவை புது புது வடிவங்களில் உருவாக்கி தன் ஹைக்கூ ஆர்வத்தைக் காட்டியுள்ளார். ஆர்வத்தைத் தூண்டியுள்ளார்.
” ‘ நடை’ முதல் இதழில் ( அக்68) ஜப்பானியக் கவிதைகள் என்று தலைப்பிட்டுச் சிறிய அறிமுக உரையோடு ஹெய்கு சிலவற்றை சி. மணி செல்வம் என்ற புனை பெயரில் தந்திருந்தார். சி. மணி, செல்வம் இரண்டுமே திரு. பழனிச்சாமியின் புனைப்பெயர்கள்தாம்.
சிறைக்குத் திரும்பும்
சருகா?
பட்டுப்பூச்சி.
திருடன் விட்டுச்
சென்றது இதுவே
பலகணி நிலவு.
புதர்வெளிக்கதவு
அதற்குப் பூட்டாய்
இந்த நத்தை.
மூங்கில் நிழல் இரவெல்லாம்
மாடிப்படி பெருக்கிற்று
தூசுகள் அகலவில்லை.
கோதை ஒருத்தி நிலவினில்
பேரி மரத்தின் மலர்களில்
கடிதம் படிக்கிறாள்.
இவை, அவர் மிகச் செறிவாக மொழிபெயர்த்துத் தந்திருந்த பத்து ஹெய்குகளில் இடம் பெற்றிருந்தன. மாதிரிக்காக இந்த ஐந்து கவிதைகளைத் தந்திருக்கிறேனேயல்லாமல் அவற்றுள் இவையே சிறப்பானவை என்பதால் அல்ல. இவற்றில் எனக்கு அப்போது பளிச்சிட்ட, விந்தைமிகு கற்பனை- வியப்புறு நயம்- நறுக்குத் தரித்தது போன்ற கச்சிதமான வடிவம், மேலும் ஹெய்குவைத் தேடிப்படிக்க வேண்டும் என்ற ஆசையை வளர்த்தன ” என ஹைக்கூ மீது தனக்கு ஏற்பட்ட ஆசையை ‘ சூர்யப்பிறைகள்’ முன்னுரையில் விவரித்துள்ளார். இக்கால கட்டத்திலேயே ஹைக்கூவும் பரவத் தொடங்கி யிருந்தது. வாசிப்பவரிடத்தில் ஒரு தாக்கத்தையும் உண்டாக்கியது. இதுவே கவிஞர் ஈரோடு தமிழன்பனிடம் ஒரு தேடலை ஏற்படுத்தியது. அதன் விளைவே தமிழுக்கு அற்புதமான, அழுத்தமான, அழகான, அர்த்தமான ஹைக்கூக்கள் கிடைத்தன. ஆனால் ஹைக்கூவை படைத்தலுக்கு முன் ஹைக்கூக் குறித்த வரலாற்றை ஆழ்ந்து வாசித்து ஒரு தெளிவு பெற்ற பின்னே செறிவாய், சுருக்கமாய், சிறப்பாய் ஹைக்கூக்களை படைத்தளித்துள்ளார்.
வெளிச்ச நதியில்
வெள்ளம் – எனக்கோ
வெற்றுக் குடமே கனக்கிறது
என்பது ‘ சூர்யப்பிறைகள்’ தொகுப்பின் முதல் ஹைக்கூ. கவிஞரின் பயணத்தின் தொடக்கமாக உள்ளது.
மன்மதச் சாம்பலில்
மறைந்து கிடந்தது ஒரு கங்கு
சிவன் எரிந்தான்.
பிணத்தை
மொய்த்து வந்த ஈக்கள்
உனது ரொட்டியின் மேல்.
விரலுக்கும் நெற்றிக்கும்
வெகு தூரமா
கலங்கும் தீபங்கள்.
பத்தாவது தடவையாக விழுந்தவனுக்கு
முத்தமிட்டுச் சொன்னது
ஒன்பது முறை விழுந்து எழுந்தவனல்லவா நீ.
என் தலைமுடியெல்லாம்
கதிர் மணிகள் – யாரங்கே
வயலில் நாற்று நடுவது?.
மாயன்
மந்திரியானால் என்ன
மாடுகளுக்குப் புல்லே போதும்.
பயம்
ஊர்ந்து கொண்டிருக்கும்-இது
பாம்பு சென்ற தடம்.
நாணலை
நிமிர்த்த முடியவில்லை
முறித்துப் போட்டது காற்று.
போகிற வண்டிகளை
பொழுது போக்காய் எண்ணி
போய்விட்டது எனது வண்டியும்.
சிலம்பை
உடைத்து என்ன பயன்?
அரியணையிலும் அந்தக் கொல்லன்.
என்னும் ஹைக்கூக்கள் கவிஞரின் குறிப்பிடத்தக்க ஹைக்கூக்களாய் உள்ளன. ஹைக்கூவில் ஒரு புதிய பாணியைத் தொடங்கி பிறரையும் தொடங்கச் செய்து பெருமைக்குரியவராக கவிஞர் திகழ்கிறார். ஜப்பானிய இலக்கணமான முதலடி ஐந்தசை, இரண்டாமடி ஏழசை, மூன்றாமடி ஐந்தசை என்பதைத் தாண்டி தமிழுக்கு ஏற்ப தமிழ் சூழலுக்கு ஏற்ப தமிழ் மக்களை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஹைக்கூ வையும் படைத்துள்ளார்.
” ஹெய்குவின் இலக்கணத்தைப் பிகசில்லாமல் பின் பற்றி 5, 7, 5 என்ற அசைக்கணக்கில் தமிழில் இதுவரை எவரும் எழுதவில்லை. அடிக்கணக்கில் மட்டுமே ஹெய்கு பின்பற்றப்பட்டு, மூன்று அடிகளில் முடியுமாறு எழுதப்படுகிற ஹெய்கு பாணிக் கவிதை களையே தமிழில் காண முடிகிறது” ‘என’ சூர்யப் பிறைகள் ‘ முன்னுரையில் எழுதி இருப்பது கவனிப்பிற்குரியது
” எழுதும் விரலுக்கு விலங்கு மாட்டுகிற எந்த கட்டுப்பாட்டையும் சுதந்திரச் சிந்தனையாளன் ஏற்றுக் கொள்ள மாட்டான் ” எனக்கூறி மரபு மீறலுக்கு தயாராகிறார்” என தமிழன்பன் குறித்து ஹைக்கூக் கவிதைகள் நூலில் கவிஞர் நிர்மலா சுரேஷ் கூறியிருப்பது நினைவுக்கூரத்தக்கது.
பழங்கால இலக்கியங்களை நன்கு அறிந்திருந்ததால் கவிஞருக்கு ஹைக்கூ எழுதும் போது சொற்கள் அருமையாக கை கூடி வருகின்றன.
” சூர்யப்பிறைகள் ( தமிழன்பன்) வீசிய கதிர்கள் எத்தனை கவிஞர்களுக்கு ஒளி தந்திருக்கிறது பாருங்கள். ‘ சூரியச் செதில்கள்’ (அவை நாயகர்), ‘ சூரியனைக்கிள்ளி’ ( ஜனநேசன்), ‘ சூரியனுக்கு வெட்கமில்லை’ ( சோலை இசைக்குயில்), ‘ பனிபடர்ந்த சூரியன்’ ( தொகுப்பு இரா. அ. தென்றல் நிலவன், நா. கவிக்குமார்) என்று ‘ விடியல்’ ( தொகுப்பு – ஜெ. ராதாகிருஷ்ணன்) ‘ பரிதிப்புன்னகை’ ( செந்தமிழினியன்) வீச்சில் ‘ தூரத்து வெளிச்ச’மாய் ( எஸ். குமார்) கிரகணம் பரப்பிற்று ” என்று நெல்லை சு. முத்து ” ‘புத்தாயிரம் தமிழ் ஹைக்கூ” வில் கவிஞர் ஈரோடு தமிழன்பனின் தொகுப்பு ஏற்படுத்திய தாக்கத்தினால் விளைந்த தொகுப்புகளை பட்டியலிட்டுக் காட்டியிருப்பது சுட்டத் தக்கது. தமிழ் ஹைக்கூ இயக்கத்தில் இளைஞர்கள் சிலர் கவிஞரை முன்னோடியாகக் கொண்டு இயங்கி வருகின்றனர். கவிஞரும் இளம் ஹைக்கூ படைப்பாளிகளை உளக்குவித்தும் வருகிறார்.
ஹைக்கூவை வளர்த்தலே குறிக்கோளாய்க் கொண்டு கவிஞர் ஈரோடு தமிழன்பன் உள்பட பலரும் விளைந்தனர். விளைவு ஹைக்கூவை விட சென்ரியுவே அதிகம் இளைஞர்களால் படைக்கப்பட்டன. ஹைக்கூ என்பது சிந்திக்கச் செய்வது. சென்ரியு என்பது சிரிக்கச் செய்வது. இரண்டும் இரட்டைப் பிறவிகள். தோற்றத்தில் ஒன்றாக இருக்கும். ஆனால் உள்ளடக்கத்தில் வேறாய் இருக்கும். கவிதையில் அங்கதம் எனில் ஹைக்கூவில் சென்ரியு. இன்றைய ஹைக்கூ புனையும் இளைஞர்களுக்கு ஹைக்கூவிற்கும் சென்ரியுவிற்கும் வித்தியாசம் தெரியாத நிலை. இதனால் ஹைக்கூ மீது குற்றச் சாட்டு எழுந்தது. ஹைக்கூ வெற்று நகைச்சுவையாகிவிட்டது என்றனர். ஹைக்கூவை காப்பாற்றும் முயற்சியில் ஹைக்கூவின் சிறப்புத் தன்மையை அரிய வைக்கும் நோக்கத்தோடு ஹைக்கூவிற்கும் சென்ரியுவிற்கும் வேறுபாடு உள்ளது என்பதைக் காட்ட கவிஞர் ஈரோடு தமிழன்பன் ஏப்ரல் 2001இல் ‘ ஒரு வண்டி சென்ரியு’ என்னும் தொகுப்பைத் தந்துள்ளார். இது தமிழின் முதல் சென்ரியு தொகுப்பாகும்.
தொகுதிதான்
முடிவாகவில்லை
தோல்வி முடிவாகிவிட்டது.
ஒரு நடிகன்
சாகும் தருணம்
பிழைத்தது பாத்திரம்.
கையில் அரிவாளோடு
உறுப்பினர் சபையில்
வெட்டுப்பிரச்சனை.
காவல் நிலையத்தில்
காவல் அதிகரிப்பு
துப்பாக்கிகள் திருடு போயின.
ஆயிரம் பேரோடு
வேட்புமனு தாக்கல்
ஐம்பது வாக்குகள்.
அதிகாரி வீட்டுப்பாத்திரங்கள்
அழுத்தித் தேய்த்தும் போகவில்லை
அழுக்கு
என்பன எடுத்துக்காட்டுக்குரியவை. சென்ரியு எனினும் ஹைக்கூத்தன்மையுடனுமுள்ளது.
“‘ஹைக்கூ என்ற பெயரில் புனையப்படுவனவெல்லாம் வடிவப்படுத்துதலில் வெவ்வேறு நிலைகளுக்கு உட்படுத்துவது போலவே பொருண்மைப்படுத்துதலிலும் வெவ்வேறு நிலைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. மூன்று வரிகளில் எழுதப்படுவன எல்லாமே இன்று தமிழில்’ ஹைகூ ‘ எனப் பெயர் பெற்று விடுகின்றன. ஹைக்கூவை உலகிற்கு தந்த ஜப்பானிய மொழியில் கூட இது ஹைகூவா? இல்லை சென்ரியுவா? என்ற குழப்பம் இல்லாமல் இல்லை.” என தொகுப்பின் முன்னுரையில் எழுதியிருப்பது சுட்டுதலுக்குரியது. இதன் மூலம் ஜப்பான் ஹைக்கூ மீதான கவிஞனின் அக்கறை வெளிப்பட்டுள்ளது. இளம்படைப்பாளிகளுக்கு ஹைக்கூ எது சென்ரியு எது என அடையாளம் காட்டி ஹைக்கூவை ஹைக்கூவாக எழுதத்தூண்டியுள்ளார். ‘ ஒரு வண்டி சென்ரியு’ ஒரு திருப்புமுனை. ஒரு கி. மீ. கல்.
1990களை ஹைக்கூக்களின் காலம் எனலாம். 2003 களின் தொடக்கத்தில
இதன் பாதிப்பு இருந்தது. 2001இன் இறுதியில் ஹைக்கூவில் ஒரு தேக்க நிலை ஏற்பட்டது. புதிய குரல்கள் ஒலித்தாலும் பழைய வாடையே வீசியது. ஹைக்கூ மீது கடுமையான விமர்சனங்களும் எழுந்தது. இக்கால கட்டத்தில் கவிஞர் ஈரோடு தமிழன்பன் உருவாக்கி தந்த ‘ லிமரைக்கூ’ என்னும் வடிவம் ஒரு புத்துணர்ச்சியை ஊட்டியது. ஒரு புது இரத்தம் பாய்ச்சியது. ஹைக்கூவை புதிய பாதைக்கு அழைத்துச் சென்றது. ‘ ஹைக்கூ’ என்பது ஜப்பானிய வடிவம்’ லிமரிக்’ என்பது ஆங்கில வடிவம். ஹைக்கூ மூன்றடி. லிமரிக் ஐந்தடி. இரண்டையும் இணைத்து ‘லிமரைக்கூ ‘ ( லிமரிக் + ஹைக்கூ) என்னும் ஒரு புதிய வடிவத்தை உருவாக்கினார் டெட் பாக்கர் என்னும் கவிஞர். அதை தமிழ் ஹைக்கூ உலகிற்கு அறிமுகப்படுத்திய பெருமை கவிஞரையே சாரும்.
” ஜப்பானிய ஹைக்கூவின் 5, 7, 5 என்னும் அசையமைப்புடைய மூவடி எல்லையும் லிமரிக் ஓசை அமைப்பும் கொண்ட அதற்கு லிமரைக்கூ ( Limeraiku) என்று பெயர் என்கிறார் கவிஞர். கிழக்கையும் மேற்கையும் இணைக்கும் முயற்சி இது. இவ்வகைத் தன்மையுடைய லிமரைக்கூக்களை படைத்தளித்த தொகுப்பு ‘ சென்னிமலை கிளயோபாத்ராக்கள்’
தாமரை பூவில் நின்று
வண்டை விரட்டிய தவளைச் சொன்னது
இசைமிக நல்லதென்று.
பழுத்த இலைகள் உதிரும்
பச்சைத் தளிரின் முகத்தைப் பார்த்து
இதயம் அதிகம் அதிரும்.
முடிந்து போன கதைகள்
ஒவ்வொன்று ள்ளும் முளைக்கத் துடிக்கும்
முந்நூறு புதிய விதைகள்.
மழலைக்கோ இறுதி யாத்திரை
பழகிய பொம்மைக்கும் தூக்க மில்லை
கேட்கிறது தூக்க மாத்திரை.
இலை உதிர்த்த காற்று
இனியதைச் செய்யாமல் இருப்ப தற்காய்ச்
செய்தது தவங்கள் நேற்று.
செடியில் இருந்த ரோஜா
குழந்தை முகத்தில் இடம் பிடிக்கச்
செய்தது சிரித்து தாஜா.
கவிஞரின் இத்தொகுப்பிற்கு பின் ஹைக்கூவின் தளத்தில் ஒரு புதிய அலையும் சிந்தனையும் ஹைக்கூவாளர்களிடையே ஏற்பட்டது. ஹைக்கூவின் பரிணாம வளர்ச்சியாக சென்ரியு வையும் லிமரைக்கூவையும் கவிஞர் உருவாக்கித் தந்துள்ளார்.
ஹைக்கூவை முன்னெடுத்துச் சென்ற மூத்த படைப்பாளிகளில் கவிஞர் ஈரோடு தமிழன்பன் ஒருவரே ஹைக்கூவை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றவர். மற்றவர்கள் படைப்பாக்கத்துடனே நின்று விட்டனர். கவிஞர் ஈரோடு தமிழன்பன் மட்டுமே ஹைக்கூ மீது அன்பு கொண்டு இளம் படைப்பாளர்களையும் புதிய படைப்பாளர்களையும் ஊக்குவித்து வருபவர். ஒரு முறை தொலைக்காட்சி நேர்காணலில் “ஹைக்கூவின் இலக்கணங்களை படியுங்கள். மறந்து விட்டு புதியதாக ஹைக்கூ படையுங்கள்” என ஹைக்கூவிற்கான வாசலை திறந்து வைத்தார்.
ஹைக்கூ ஜப்பானிய அளவு கோலோடு இல்லை என்னும் குற்றச் சாட்டுக்கு ‘ ஜப்பானிலேயே பண்டைய அளவுகோல் பின்பற்றப்படுவதில்லை ” என பதிலுரைத்து விமர்சகர்களின் கணையை தடுத்து எழுதுபவர்களுக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளார். ஹைக்கூவின் தொடக்க கால வரலாற்றுடன் சமகாலத்தில் உலக அளவில் உள்ள ஹைக்கூ குறித்த செய்திகளையும் தகவல்களையும் அறிந்து தமிழ் ஹைக்கூவாளர்களையும் அறியச் செய்பவர். கவிஞர் ஈரோடு தமிழன்பன் பன்முக ஆற்றல் பெற்றவர். கவிதை, கட்டுரை என பல தளத்தில் இயங்கி வந்தாலும் ஹைக்கூவையும் ஹைக்கூ குறித்தான வற்றையும் தொடர்ந்து படைத்து ஹைக்கூவின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்த பெருமைக்கும் புகழுக்கும் உரியவர் கவிஞர் ஈரோடு தமிழன்பன். ஹைக்கூவில் அவர் ஆற்றிய பணி, செய்துள்ள சாதனை . ஹைக்கூவை உலக தரத்திற்கு உயர்த்தியதுடன் உலக ஹைக்கூவையும் தமிழுக்கு அறிமுகம் செய்தவர். தமிழக ஹைக்கூ வரலாற்றை பதிவு செய்யும் போது தமிழன்பனின் இடம் தனித்து நிற்கும். பிறரின் பங்களிப்பை விட கூடுதலாகவே இருக்கும். கவிஞரின் ஆளுமையும் எடுத்துக்காட்டத்தக்கதாகவே இருக்கும்.
தன்னிகரற்றது
தமிழக ஹைக்கூ வளர்ச்சியில்
தமிழன்பனின் பங்கு.
