மக்கள் /பாப்லோ நெருடா

மொழி பெயர்ப்பு : முஜிப் ரஹ்மான்

அந்த மனிதனை எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.
அவனைப் பார்த்துக் குறைந்தது
இரு நூற்றாண்டுகள் ஆகின்றன:
குதிரை மீதோ வண்டியிலோ அவன்
பயணம் செய்ததில்லை.
வாளையோ, போர்க் கருவிகளையோ சுமக்காமல்
கோடரியோ, சுத்தியலோ, மண்வெட்டியோ
அல்லது தோளின்மீது வலையோ
மட்டும் சுமந்துகொண்டு
தன் கால்களாலேயே தொலைவைக் கடந்தான்;
தன் இனத்தவருடன் என்றும்
அவன் போரிட்டதில்லை
ரொட்டியாக்கக் கோதுமையுடனும்
பலகை பெற உயர்மரங்களுடனும்
கதவுகள் திறக்கச் சுவர்களுடனும்
மதில்களை எழுப்ப மணலுடனும்
மீன்களைப் பெறக் கடலுடனுமாக
அவன் மண்ணுடனும் நீருடனும் போரிட்டான்.
நான் அவனை அறிவேன்
இப்போதும் அவன் என்னுள் இருக்கிறான்.
வண்டிகள் உடைந்து சிதறின,
வாயில்களும் மதில்களும் போரில் அழிந்தன,
கைப்பிடிச் சாம்பலாய் ஆனது நகரம்,
அத்தனை உடைகளும் புழுதியாய் உதிர்ந்தன.
அதற்கு முன்பு அவனைத் தவிரப்
பிற அனைத்தும் நீடித்து வாழும் என்றெண்ணிய மணலின் மீது அவன் இன்னும் வாழ்கிறான் என் பொருட்டுத் தொழிற்படுகிறான். வருவதும் போவதுமான குடும்ப உறவுகளில், சில சமயங்களில் எனது தந்தையாகவோ
எனது உறவினனாகவோ
என் இல்லத்திற்கு வராதவனாகவோ
அவன் இருந்தான்.
ஏனெனில்,
கடலோ, புவியோ அவனை விழுங்கியது,
அல்லது இயந்திரமோ, மரமோ அவனைக் கொன்றது, அல்லது
விழியில் நீரில்லாமல், பிண ஊர்வலத்தில் நடக்கும் சவப்பெட்டி செய்பவனாகவோ அவன் இருந்தான். மரத்திற்கும் உலோகத்திற்கும் உள்ளது போலன்றி அவனுக்கென்று தனியாகப் பெயரேதும் இல்லை. புற்றிலிருந்து எறும்பைப் பிரித்தறியவியலாத பிறர், அவனைக் கீழாக நோக்கினர்;
ஆகவே
வறுமையாலும் களைப்பாலும்
கால்கள் அசையாது வீழ்ந்து இறந்தபோது,
முன்னர் பார்த்துப் பழக்கப்பட்ட பாதங்களை
அவர்கள் பார்க்காதபோதும் கவனிக்கத் தவறினர் –
மேலும், பிறர் கால்கள் அவற்றுக்குப் பதிலாக நடந்தன.
பிறர் கால்கள் அவனுடையனவே,
பிறர் கைகளும் அவனுடையனவே.
அவன் தொடர்ந்து தொழிற்படுகிறான் –
ஒழிந்தான் என்று நினைத்தபோது
மீண்டும் அவன் எழுந்தான்.
மீண்டும் அங்கே உழுகிறான்,
தனக்குச் சட்டையில்லாதபோதும்
துணியைக் கத்தரித்தான்.
அவன் சென்றான்.
மீண்டும் வந்துவிட்டான்.
அவனுக்கெனத் தனியே
கல்லறையோ புதைகுழியோ இல்லாததாலும்
வியர்வை சிந்தித் தான் வெட்டிய கல்லிலே
தன் பெயரைப் பொறிக்காததாலும் அவன் வரவை எவரும் அறியவில்லை. அவன் இறந்ததையும் எவரும் அறியவில்லை. இவ்வாறாக, கவனிப்பாரற்று, அந்த அப்பாவி வலிமை பெற்றதும் உயிர்த்தெழுந்தான்.
அவன் அந்த மனிதனேதான்.
அவனுக்கென மூதாதையர் சொத்தோ
ஆநிரையோ குடும்ப இலச்சினையோ இல்லை.
தன்னைப் போன்ற மற்றவரிடமிருந்து
அவன் தனித்து நிற்கவில்லை. மற்றவர்களும் அவன்தானே.
விண்ணிலிருந்து பார்க்கையில்
அவன் களிமண்போல் கறுத்திருந்தான், பதனிட்ட தோலைப் போல் மந்தமாயிருந்தான், கோதுமை அறுக்கையில் மஞ்சளாயிருந்தான், சுரங்கத்தின் ஆழத்தில் கறுப்பாய் இருந்தான், கோட்டையிலே பாறையின் நிறத்தில் இருந்தான், படகிலே சூரைமீனின் வண்ணத்தில் இருந்தான், புல்வெளியில் குதிரை வண்ணத்திலிருந்தான் மனித உருவில் வந்த
கடலாகவும் பவளமாகவும் மண்ணாகவும்,
தனிமமாகவும் முழுமையாகவும்
அவன் இருக்கையில்
எப்படி அடையாளம் காண முடியும்?
அவன் வாழும் இடத்தில்
மனிதன் தொட்டதெல்லாம் விளையும்;
அவன் கைகள் வெட்டியபோது
கடும் பாறைகள்
உருவமும் வடிவும் பெற்றுக்
கட்டடங்களாக எழுந்தன.
தன் கைகளால் அவன் ரொட்டி செய்தான்,
ரயில் வண்டிகளை ஓட்டினான்,
தொலைவிலே நகரங்கள் அமைந்தன,
பிற மனிதரும் வளர்ந்தனர்,
தேனீக்களும் வந்தன,
மனிதனின் படைப்பாலும் பெருக்கத்தாலும்
புறாக்களுக்கும் அடுமனைகளுக்கும் இடையே
கடைத்தெருவில் வசந்தம் உலவியது.
ரொட்டியின் தந்தை மறக்கப்பட்டான்.
அனைத்தும் இருந்தபோது,
வெட்டியும் வீழ்த்தியும் நடந்தும்
புதிய பாதைகளை உண்டாக்கியவன்
இல்லாமல் போனான்.
அவன் தன் இருப்பைக் கொடுத்துவிட்டான்.
வேலைக்காக வேறெங்கோ சென்றான்.
கூழாங்கல்லைப் போல் உருண்டு
இறுதியில் மடிந்தான் –
மரணம் அவனை அடித்துப்போயிற்று.
அவனே அறியாத தெருக்கள்,
அவன் என்றும் குடிபுகாத வீடுகள்
அவன் விட்டுச்சென்ற இவற்றில்தாம்
அவனை அறிந்த நான்
அவன் இருப்பை அறிகிறேன்.
அவனைப் பார்க்க நான் திரும்பி வருகிறேன்.
ஒவ்வொரு நாளும் காத்திருக்கிறேன்.
அவன் சவப்பெட்டியில் உயிர்த்தெழுவதைக்
காண்கிறேன்.
அவனுக்கு ஒப்பானவர்களிடமிருந்து
அவனைப் பிரித்தறிகிறேன்.
இப்படியே போய்க்கொண்டிருப்பதில் பயனில்லை,
இப்படி வாழ்வதில் பெருமையில்லை
என்று நான் எண்ணுகிறேன்.
சொர்க்கம் அவனுக்கு முடிசூட்டி,
நல்ல காலணி அணிவித்து
அழைத்துக்கொள்ள வேண்டும் என்றெண்ணுகிறேன். இத்தனைப் பொருள்களையும் செய்தோரே
அனைத்துக்கும் எஜமானராக இருக்க வேண்டும். ரொட்டி செய்தோர் உண்ண வேண்டும்! சுரங்கத்திலிருப்போர் ஒளிபெற வேண்டும்! போதும், விலங்கிடப்பட்ட நரைத்த மனிதர்கள்! போதும், வெளிர்ந்து தொலைந்துபோனவர்கள்! மன்னனாகவன்றி இனி எவனும் மறைந்து போகான். மகுடம் இன்றி எந்த மங்கையும் இனி இறந்துபோகாள். ஒவ்வொரு கரத்திற்கும் தங்கக் கையுறை. அறியப்படாதவர்க்குக் கதிரவனின் கனிகள்.
அவன் தலையில் கண்கள் இருந்தபோதும் அவன் தொண்டையில் குரல் இருந்தபோதும் அவனை நான் அறிவேன்.
கல்லறைகளிடையே அவனைத் தேடி,
அவன் கைகளைப் பற்றியவாறே,
‘எல்லாம் இறந்துபோகும். நீ மட்டும் இருப்பாய்.
வாழ்க்கைக்கு நீ தீ மூட்டினாய்.
உனக்குரியதை நீ உண்டாக்கினாய்’
என்று நான் சொன்னேன்.
நான் தனியாக இருப்பதுபோல் தோன்றும்போது
ஆனால் உண்மையில் தனியாக இல்லாதபோது,
நான் யாருடனும் இல்லாமலில்லை.
நான் அனைவருக்காகவும் பேசுகிறேன்
எவரும் கவலைப்பட வேண்டாம்.
அவர்களே அறியாதபோதும்
யாரோ நான் பேசுவதைக் கேட்டுக்கொண்டுதான்
இருக்கின்றனர்.
நான் யாரைப் பற்றிப் பாடுகிறேனோ
அவர்கள் பிறந்துகொண்டும்
உலகை நிறைத்துக்கொண்டும்
எப்போதும் இருப்பார்கள்.