விக்ரம் படம் பார்த்துவிட்டு/ரமேஷ் கல்யாண்

விக்ரம் படம் பார்த்துவிட்டு பதிவு எழுத தோன்றவில்லை. ஆனால் பிரும்மாண்ட வெற்றி என்று அறியும்போது கமல் எனும் கலைஞன் படத்தின் வெற்றி என்று மகிழ்வு. ஏதோ சில சறுக்கல்கள் இருப்பினும் நல்ல கலைஞன் ஒருபோதும் கைவிடப் படக்கூடாது. இன்றுவரை சினிமாவை சினிமாவுக்காக மட்டுமே தொடர்ந்து நேசிக்கும் ஒரு கலைஞன். பார்வையாளனுக்கு தட்டுப்படாத பல்வேறு சினிமா தொழில் நுட்ப விஷயங்களில் முன்னோடிக் கலைஞன். ஆனால் .. .. .. வணிகரீதியான வெற்றியை படத்தின் வெற்றியாக கொண்டுவிட வேண்டிய அவசியம் இல்லை.

முன்பைப் போல படம் எத்தனை நாட்கள் ஓடியது என்பதை பொறுத்து பட வசூல் என்பது லெமூரியா கண்டத்தோட வழக்கொழிஞ்சி போயாச்சு. இன்று அதன் சூத்திரங்கள் வேறு. அமெரிக்காவிலேயே 2000 பிரிண்ட்கள் – அதில் கெட்டவார்த்தைகள் மௌனப் படுத்தப்படாமல் அப்படியே வெளியாயின போன்ற குதூகலங்கள் உட்பட – போன்றவை கலெக்ஷனுக்கு முக்கியமானவை.

இது விக்ரம்2 என்று சொல்லப்படவில்லை. ஆனாலும் அந்த எதிர்பார்ப்பு, விக்ரம் விக்ரம் என்ற 1986 பாடல் குரல், பழைய விக்ரம் பட கமலின் புகைப்படம் – போன்றவை இந்த நைலான் கயிறு முடிச்சை போல வழுக்கிப் போகிறது. இது அந்த விக்ரமின் தொடர்ச்சி என்று சொல்லக்கூடாது. ஏனென்றால் சத்யாராஜை கொன்றபின், கமலை டிம்பிள் கபாடியாவும் இன்னொரு அசட்டு பெண்ணும் தமக்காக ஓடித் துரத்தும்போது freez ஆகும் காட்சியில்தான் அந்த படம் முடிவடைந்திருக்கும்.

இன்று சினிமா என்பது கதை மட்டும் அல்ல. காட்சி மொழி, சொல்லப்படும் முறை, காட்டப்படும் வகை என்று வேறு வடிவம் கொண்டுவிட்டன. காக்கா முட்டை, பீட்சா, சூப்பர் டீலக்ஸ் சமீபமாக மாநாடு என பலவற்றை சொல்லலாம். ஆனால் இந்த படத்தில் அப்படியான எந்த புதுமையையும் நான் காணவில்லை.

சண்டைப்படம் என்பதெல்லாம் பழைய வார்த்தை. தற்போது வன்முறைகளின் அழகியல் என்று ஒரு விஷயம் கிளம்பி இருக்கிறது. அப்படி பார்த்தாலும் சாணி காகிதம், ராக்கி, அசுரன் போன்று ரத்த சிதறலின் அழுத்தமும் இந்த சண்டைகளில் இல்லை.

கமல் ஒரு ரகசிய இன்டெலிஜென்ட் போலீஸ் எஜன்ட். கோஸ்ட் என்று ரகசிய பெயர். போதைப் பொருள் கடத்தல் வில்லன் விஜய் சேதுபதியைப் பிடிக்க, வெடிவிபத்தில் கால் மட்டும் கிடைப்பதாக காட்டி, வேறொரு ஆளை இறக்கவைத்து,(தெறி விஜய் ஞாபகம் வரக்கூடாது ) தான் இறந்து போய் காணாமல் போனதாக அறிவித்து, பிறகு மறைந்திருந்து, பல எஜன்ட்களை நியமித்து, தனி ராஜ்ஜியம் அமைத்து, மகனின் உயிரை விலையாக கொடுத்து, வில்லனை கண்டுபிடித்து பழிவாங்கிவிட்டு, (இது பழிவாங்குதல் இல்லை என்றும் அறிவிக்கிறார் ) வெடி அதிர்வில் தற்காலிகமாக இறந்துபோன கைக்குழந்தைப் பேரனை பத்து நிமிடத்துக்குள் வந்து சேர்ந்துவிடுவோம் என்று வேனில் வரும் பகத் பாசிலிடம் தந்து CPR செய்ய வைத்து (சிவாஜி the boss படம் ஞாபகம் வரக்கூடாது) பத்திரமாக உயிர்மீட்டி மருமகளுடன் ஏர்போர்ட்டில் இணைத்துவிடுகிறார்.

கப்பலில் போதை பொருளை கடத்தும் விஜய் சேதுபதிக்கு யார் உடந்தையாக செயல்பட்டு போலீசால் பிடிக்க முடியாமல் போகிறது என்பதை கண்டு பிடிப்பவருக்கு சுஜாதாவின் இரண்டாவது மக’ளை’ கல்யாணம் செய்து வைத்து விடலாம்.

இடைவேளை வரை வில்லனை பிடிக்க போலீஸ் கேட்டுக்கொள்வதன் பேரில் பகத் பாசில் முனைகிறார். போலீசின் வரையறைகள் தன்னைக் கட்டுப்படுத்தாது என்று சொல்லியே துப்பறிவதில் இறங்குகிறார். பலரை கண்டு பேசி விசாரித்து நெருங்குகிறார். பாசிலும் சரி அவர் கண்டு பேசுபவர்களும் சரி மறைந்து வாழும் போலீஸ் எஜெண்டுகள்தான். இடைவேளையில் ஆரம்பிக்கலாங்களா? என்று விக்ரம் விக்ரம் என்று பின்னணி குரல் ஒலிக்க கமல் முகம் காட்டும்போது இடைவேளை. பிறகு கமல் ராஜ்ஜியம்.

விஜய் தங்கப்பல் கட்டிக்கொண்டு வில்லனாக வருகிறார் (உலகம் சுற்றும் எம்ஜியார் நம்பியார் சார்.. நலமா? ). சண்டையில் ஓய்ந்து விழும்போது பையிலிருந்து ஏதோ ஒரு டிஜிட்டல் கடலை மிட்டாயை போட்டு கடிக்கிறார். படுபயங்கர சக்தி வந்து விடுகிறது. இறுதி சண்டையில் கமல் அடியில் தெறித்து விழுகிறது. மேலும் ஒரு ஆளை அடிக்கும்போது கையில் ஒரு சிறிய கருவியில் எண்ணிக்கை பார்த்து அளந்து அடிக்கிறார்கள். இதெல்லாம் என்ன என்று விக்ரம்-3ல் சொல்வார்களோ என்னமோ. சேதுபதி இரண்டாம் நிலை வில்லன்தான் முக்கிய வில்லன் ரோலக்ஸ் எனும் பெருபயங்கரவாதி.

விஜய் சேதுபதிக்கு பார்ட்னர் ஒரு உயர் போலீஸ் ஆபீசர். அவர்தான் பகத் பாசிலை நியமித்து விஜய் சேதுபதியை தேட சொல்கிறார். இந்த தேடலில் தன் காதலி கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்ததால் அந்த போலீசை பாசில் போட்டு தள்ளிவிடுகிறார் விஜய் சேதுபதி முக்கிய வில்லன் என்பதால் கமலுக்கு விட்டு வைக்கிறார். கமல் ஒட்டு மொத்த போதை கண்டீனர்களை குண்டு வைத்து தகர்க்கும்போடு சேதுபதியை நடுவில் வைத்து வெடிக்கிறார்.

பல்வகை துப்பாக்கிகள், குண்டுகள், பெரிய இரும்பு பீரங்கி போன்றவற்றை எல்லாம் சேகரம் செய்து சண்டைக்கு ரெடியாகவே கமல் இருக்கிறார். வில்லனை வெளியே வரவைக்க கப்பல் கண்டெய்னர் இரண்டை தள்ளிக்கொண்டு வந்து, பதுக்கி வைத்து, அதற்கு அருகே தனது கூடாரத்தை அமைத்து, வில்லனையும் கோஷ்டிகளையும் வரவைத்து போட்டு தள்ளுகிறார். படத்தில் இதுவே முக்கிய இழை அல்லது ஒரே இழை என்று தோன்றுகிறது.

கமலுக்கு உதவும் போலீஸ் ஏஜன்டுகளாக பகத் பாசில், குமாரவேல், ஒரு பெண் (நல்ல பாத்திரம்), உட்பட சிலர். சந்தான பாரதியை போலீஸ் ஏஜென்டாக பார்க்க கமலுக்கு அபார தைரியம் இருந்திருக்க வேண்டும்.

இயந்தி துப்பாக்கி ரவைகளை இரண்டு இரும்பு கதவுகளை வைத்து தடுக்கிறார். (பீஸ்டில் விஜய் இதை கதற கதற செய்தது ஞாபகம் வரக்கூடாது)

உள்ளூர் வெண்ணைக்கு ஊத்துக்குளி கவர் போட்டது போல கமலை பயன்படுத்தி இருக்கிறார்களோ என்று தோன்றுகிறது. படத்திலேயே அவருக்கு அறுபது வயதுதான். கமலின் வெற்றி அம்சங்கள் காதல் மற்றும் நெகிழ்ச்சி. அவர் முதலாவதை எப்போதோ துறந்து விட்டார் (அந்த இடம் இன்னும் காலியாகவே உள்ளது) இரண்டாவதற்கு இடமில்லை இந்த படத்தில். உணர்ச்சியை உறையவைத்து இறுக்கமாக இருக்கும் போலீஸ் அவர். அனாயசமாக செய்துவிட்டு போகிறார். இந்த வயதிலும் உடம்பை கட்டுமஸ்தாக வைத்திருப்பது, கண்டெய்னரை கயிறு கட்டி இழுப்பது போன்ற அதீதங்களுக்கு அவர் உடற்கட்டு பொருந்தி வருகிறது. இதை கமலை விட்ட செய்ய ஆளில்லை என்று சொல்வது வழக்கம். அப்படி ஒரு காட்சி கூட இந்த படத்தில் இல்லை.
கமல் எனும் யானைக்கு இந்த சோளப்பொறி பத்தல பத்தல.

தற்போதிருக்கும் சினிமா சூழலில் இளைஞர்களுக்கு இடம் அதிகம். அதனால் சேதுபதி பகத் பாசில் போன்றவர்களை இணைத்துக்கொண்டு இந்த கப்பல் கண்டெய்னரை கமலை இழுக்க வைத்திருக்கிறார் லோகு. கைதி பட வில்லன் அர்ஜுன்தாஸ் இதில் இருக்கிறாராம்.

இன்டெலிஜென்ட் அமைப்புக்கும் வெளியே ஒரு தனி அமைப்பாக கமல் டீம் வேலை செய்து வில்லனை காலி செய்கிறது. ராஜீவ் குண்டுவெடிப்பில் இறந்தவர்கள் பட்டியல் தெரிந்தது. சமீப ஊட்டி ஹெலிகாப்டர் விபத்தில் கருகிய உடல்கள் அடையாளம் தெரிந்துவிட்டன. ஆனால் இந்த படத்தில் குண்டு வெடிப்பில் இறந்தது கமல் என்று எப்படி நம்பப்பட்டது. அந்த துண்டான காலும் கமல் கால்தான் என்ற நிரூபணமும் இல்லை. கடைசி காட்சியில் கமலின் கால் நரம்பை வெட்ட வரும் குள்ளனிடம் அது அடிபட்டு Rod வச்சிருக்கு என்று அவனை மிதிப்பார். ஆகவே குண்டுவெடிப்பில் எஞ்சிய அது கமல் கால் இல்லை. அப்படி என்றால் போலீசுக்கே இது தெரியாமல் வைக்கப் பட்டதா? இதற்கான ,சங்கேத குறிப்புகள் கூட படத்தில் இல்லை. அனேகமாக லோகேஷுக்கு மட்டும் தெரிந்த ரகசியமாக இருக்கும்.

ஒரு வேளை நான் சரியாக படத்தை கவனிக்கவில்லையோ என்னவோ.
எனக்கு ஏன் இந்த படம் இப்படியான அபிப்ராயத்தை தருகிறது. ஆனால் இது வெற்றிப்படமாக இருக்கிறதே ! ஒருவேளை எனக்கு படம் பார்க்க தெரியவில்லை.

விஜய் சேதுபதி சாப்டர் ஓவர். படம் சுபம் என்று பார்த்தால் பெரிய வில்லங்கமே வருகிறது. ரோலக்ஸ் யார் என்று காட்டுகிறார்கள். சூர்யா ஒரு குட்டி மாநாடு போல அடியாட்களை நிறுத்தி வைத்து பேசியபடி ஒருவனை பிறந்தநாள் கேக் போல வெட்டிவிட்டு கொக்கரிக்கிறார். (சம்பளமின்றி நடித்து கொடுத்தாராமே) கூட்டம் அமைதியாக திரும்பி போகிறது. அப்போது கூட்டத்தில் இருந்து ஒரு உருவம் திரும்பி பார்க்கிறது. அது கமல்.
ஐயையோ அப்போ விக்ரம் அடுத்த பகுதி உண்டு போலிருக்கிறது!
கமல் தங்க ஊசிதான். அதுக்காக!

One Comment on “விக்ரம் படம் பார்த்துவிட்டு/ரமேஷ் கல்யாண்”

Comments are closed.