அம்மானைப் பாடல்கள்

எழிலன்


இணையம் தனிலமர்ந்தால்
இவ்வுலகச் செய்தி
அனைத்தும் எளிதாய்
அறிந்திடலாம் அம்மானை;
அனைத்தும் எளிதாய்
அறிந்திடலாம் ஆமாகில்
மனத்தில்நம் பெற்றோர்
மருளுவதேன் அம்மானை?
இணையத்தில் எல்லாம்

இருப்பதனால் அம்மானை.

முடிமீதில் மாதை
முடிந்தவரைக் கல்லதனால்
அடித்தாரச் சாக்கியனார்
அன்றொருநாள் அம்மானை
அடித்தாரச் சாக்கியனார்
அன்றொருநாள் அப்போதில்
தடுக்காமல் தானேற்ற
தத்துவமென் அம்மானை
அடித்தாரை அடியாராய்

ஆக்கிடவே அம்மானை

மாடதன்மேல் எறும்
மதுராபுரிச் சொக்கர்
ஆடுகின்றார் நாள்தோறும்
அம்பலத்தே அம்மானை
ஆடுகின்றார் நாள்தோறும்
அம்பலத்தே ஆமாகில்
வீடேதும் இல்லையோ
வித்தகர்க்கே அம்மானை
வீடில்லை என்றாலும்

வீடளிப்பார் அம்மானை

தாயவள் சொல்கேட்டுத்
தன்சங்கு சக்கரத்தை
மாயமாய்ச் செய்தானம்
மாதவன்தான் அம்மானை
மாயமாய்ச் செய்து
மறைத்திட்டான் ஆமாகில்
சேயவன்தான் மந்திரங்கள்
செய்பவனோ அம்மானை
தூயவன்தான் மந்திரங்கள்

தோன்றுமிடம் அம்மானை

ஈரடியால் மண்டலங்கள்
ஈரேழைத் தானளக்க
பேருருவைக் கொண்டான்
பரந்தாமன் அம்மானை
பேருருவைக் கொண்ட
பரம்பொருளை எவ்வாறு
பாரதுதான் தாங்கும்
பகன்றிடுவாய் அம்மானை
பாரிதையே தாங்குவதப்

பரம்பொருளே அம்மானை

செல்வனாம் கோபாலன்
சீடையவல் தன்னையெல்லாம்
மெல்லும் திருவாயால்
மண்ணுண்டான் அம்மானை
மெல்லும் திருவாயால்
மண்ணுண்ட மாமாயன்
கல்லைத்தன் வாயால்
கடிப்பானோ அம்மானை
கல்லைக் குடையாக்கிக்

கார்தடுப்பான் அம்மானை

மாயனை மன்னு
வடமதுரை மைந்தனை
ஆயர் குலப்பெண்
அடித்தாளே அம்மானை
ஆயர் குலப்பெண்
அடித்தாளே அப்போதில்
காயம் அதிகமோ
கண்ணனுக்காங்(கு) அம்மானை
காயம் பலகொண்டான்
கண்ணனங்கு அம்மானை

One Comment on “அம்மானைப் பாடல்கள்”

  1. எழிலனை வளவ
    துரையன் மைந்தனை
    ஜெயஸ்ரீ நானே
    வாழ்த்துகிறேன் அம்மானை
    ஜெயஸ்ரீ நானே
    வாழ்த்துகின்ற போதிலே
    தந்தையை விஞ்சினாரே
    தனயன் இன்று அம்மானை
    தமிழ்ப் புலமை காட்டி
    தான் நின்றார் அம்மானை

Comments are closed.