அதுதான் கவிஞர் சுகுமாரன்/கே.என்.சிவராமன்

இன்று (ஜூன் 11) அவருக்கு பிறந்தநாள் என்பதை அறியும்போது அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. வயது 64 ஆம். நம்ப முடியவில்லை. நம்புவதாகவும் இல்லை.

அன்புக்கு வயதாகுமா என்ன?

வாய்ப்பேயில்லை. அப்போது நான் வேலூர் வெங்கடேஸ்வரா உயர்நிலைப்பள்ளியில் ப்ளஸ் ஒன் படித்துக் கொண்டிருந்தேன். நண்பன் ராஜேஷ் வழியாக சிறுபத்திரிகை உலகம் அறிமுகமாகியிருந்த நேரம் அது. தி.ஜானகிராமனும், அசோகமித்திரனும் அலைகழித்துக் கொண்டிருந்தார்கள். வண்ணதாசன் தலையை வருடி முத்தமிட்டுக் கொண்டிருந்தார். வண்ணநிலவன் ஆறுதலாக கையைப் பிடித்திருந்தார். புளியமரத்தின் நிழலில் ஜே ஜே என பிரம்புடன் தன் தாடையை தடவியபடி நின்று கொண்டிருந்தார் சுந்தரராமசாமி. ‘கண்ணாடியுள்ளிருந்து…’ பார்த்துக் கொண்டிருந்தார் பிரமிள்.

எல்லாம் புரிந்தும், எதுவும் தெரியாத நிலை. கோபி கிருஷ்ணனின் கடிதங்கள் மட்டுமே ஆறுதலாக இருந்த தருணம். வேலூரில் சிறுபத்திரிகை சார்ந்த புத்தகங்கள் கிடைக்காது என்பதால், மாதம்தோறும் சென்னைக்கு வருவேன்.

எனக்காகவே சம்பளம் வாங்கியதும் என் கண்ணில் படுமாறு தன் சட்டை பாக்கெட்டில் இருநூறு ரூபாய்களை அப்பா வைப்பார். அதை ‘திருடி’ கொண்டு சென்னைக்கு வருவேன். புத்தகங்கள் வாங்குவது மட்டுமே நோக்கம். அந்த நாட்களில் ‘வயல்’ பதிப்பகமே எனக்கான வேடந்தாங்கலாக இருந்தது. மயிலாப்பூர் கச்சேரி ரோட்டில் இருக்கும் கச்சேரி சந்தில்தான் அந்தப் பதிப்பகம் இயங்கி வந்தது. சி.மோகன் Mohan Chellaswamy அதை நடத்தி வந்தார். கவிஞர் சுகுமாரனை முதன் முதலில் சந்தித்தது அங்குதான்.

மயிலாப்பூரிலேயே ‘சிண்ட்ரெல்லா’ என்னும் துணி ஏற்றுமதி நிறுவனத்தை அப்போது அவர் நடத்தி வந்தார். வண்ணதாசனின் ‘சின்னு முதல் சின்னு வரை’ குறுநாவலை, தனது பதிப்பகம் வழியாக அவர் வெளியிட்டிருந்த நேரம் அது. பார்த்ததும் ஒரு புன்னகை. ‘என்ன சிவராமன் எப்படி இருக்கீங்க..?’ என்ற கணீர் குரல். விரல்களில் வழியும் அன்புடன் தோளைச் சுற்றி அரவணைப்பு.

முதல் சந்திப்பிலேயே உடன் பிறந்த அண்ணனாகி விட்டார். அதன் பிறகு எப்போது சென்னை வந்தாலும் சுகுமாரனை சந்திக்கத் தவறுவதேயில்லை. மதிய உணவும், இரவு ஊர் திரும்ப பணமும் நிச்சயம் அவர் கொடுத்துவிடுவார் என்பதால், கையில் கொண்டு போன பணத்துக்கு புத்தகம் வாங்கி விடுவேன்.

அப்போது பைலட் தியேட்டரை ஒட்டியிருந்த மாடியில் ‘க்ரியா’ இயங்கி வந்தது. அங்கு கோபி கிருஷ்ணனையும், திலீப்குமாரையும் சந்தித்துவிட்டு அப்படியே பொடி நடையாக மயிலாப்பூர் வந்துவிடுவேன். அதன் பின்னர் என்னை பராமரிக்கும் பொறுப்பு சுகுமாரனுடையது.

ஒருமுறை மனதில் எழுந்த சந்தேகத்தை தீர்த்துக் கொள்வதற்காக ஞாயிறன்று வருவதாக 15 பைசா தபால் கார்டில் அவருக்கு கடிதம் எழுதியிருந்தேன். அன்று அவரது நிறுவனத்துக்கு விடுமுறை நாள். அவர் தங்கியிருக்கும் இடமும் எனக்குத் தெரியாது. ‘வயலும்’ அன்று மூடியிருக்கும்.

எனவே மயிலாப்பூர் குளத்தை ஒட்டிய ஓர் இடத்தில் எனக்காக காலை 9 மணிக்கு காத்திருப்பதாக பதில் அனுப்பினார். நேரத்தை கணக்குப் போட்டு அதிகாலை 5 மணிக்கே வேலூரில் இருந்து புறப்பட்டு விட்டேன்.

ஆனால், போதாத வேளை. வாலாஜாவை தாண்டியதும் பஸ் பன்சர். மீண்டும் பேருந்து கிளம்ப 45 நிமிடங்களானது. பரவாயில்லை கொஞ்சம் முன் பின் ஆனாலும் போய்விடலாம் என்று மனதை சமாதானப்படுத்தி முடிப்பதற்குள் சுங்குவார் சத்திரம் வந்து விட்டது. பஸ் பிரேக் டவுன்.

அனைத்துப் பயணிகளையும் பின்னால் வந்த பேருந்தில் நடத்துனர் ஏற்ற ஆரம்பித்தார். அன்று முகூர்த்த நாள் என்பதால் வந்த பேருந்து அனைத்தும் பிதுங்கி வழிந்தது. ஒரு வழியாக வேறொரு பஸ் பிடித்து பூந்தமல்லியை அடைந்தபோது மணி 10.

பகீரென்று இருந்தது. செல்ஃபோன் வராத காலம். அவரது அலுவலக தொலைபேசி எண்தான் தெரியும். அலுவலகமோ அன்று விடுமுறை. என்ன செய்வதென்றே தெரியவில்லை. பூந்தமல்லி, போரூர், கிண்டி, சைதாப்பேட்டை… என ஊர்ந்த பேருந்து தேனாம்பேட்டை சிக்னலை தொட்டபோது மணி 11.30.

வேலூரில் இருந்து 20 ரூபாயுடன் புறப்பட்டேன். பஸ் கட்டணம் 17 ரூபாய். மீதி 3 ரூபாய்க்கு டிபன் சாப்பிட்டு விட்டேன். கையில் நயா பைசா இல்லை.

எனவே தேனாம்பேட்டை சிக்னலில் இறங்கி எல்டாம்ஸ் ரோட்டில் ஓட ஆரம்பித்தேன். ஆழ்வார்பேட்டை சிக்னலைத் தொட்டு அப்படியே லஸ் கார்னரை அடைந்து, மயிலாப்பூர் குளத்தை ஒட்டி அவர் சொன்ன இடத்தை அடையும் வரை இருப்புக் கொள்ளவேயில்லை.

தாமதமாகிவிட்டதே… அவர் இருப்பாரா அல்லது சென்றிருப்பாரா… நம்பி வந்தவரை இப்படி காக்க வைப்பது தவறல்லவா… எப்படி அவருக்கு சமாதானம் சொல்வது… என அடுக்கடுக்கான கேள்விகள் கழுத்தை நெரிக்க ஆரம்பித்தன.

இது எல்லாவற்றையும் விட ஒருவேளை சுகுமாரன் அங்கு இல்லாவிட்டால் எப்படி ஊர் திரும்புவது… யார் பணம் கொடுப்பார்கள்… என்ற வினாவே விஸ்வரூபம் எடுத்து மென்னியைப் பிடித்தது.

ஆனால் –

சந்தன நிற பேண்டும், ரோஸ் கோடு போட்ட க்ரீம் கலர் சட்டையும் அணிந்தபடி குறிப்பிட்ட இடத்தில் ஆடாமல் அசையாமல் சுகுமாரன் நின்று கொண்டிருந்தார்.

அது கோடைக்காலம். அவர் நின்றிருந்த இடத்தில் நிழலும் கிடையாது. வெள்ளை நிற கைக்குட்டையால் தன் முகத்தில் வடிந்த வியர்வையை துடைத்தபடி தெரு முனையையே பார்த்துக் கொண்டிருந்தார்.

அந்த நிலையில் அவரைக் கண்டதும் கண்கள் கலங்கிவிட்டன. மூச்சு வாங்க அவர் அருகில் சென்றபோது அழுகை முட்டிக் கொண்டு வந்தது. ’சாரி சார்…’ என்று சொல்லக் கூட வார்த்தைகள் வரவில்லை.

இதோ இந்த நிமிடம் வரை அந்தச் சம்பவம் நம்ப முடியாததாகத்தான் இருக்கிறது.

‘ஒரு சின்னப் பையன்’ எழுதிய தபால் கார்டை நம்பி ஒருவர் மூன்று மணிநேரம் வேகாத வெயிலில் காத்திருப்பாரா?

காத்திருப்பார். அதுதான் கவிஞர் சுகுமாரன்.

வழக்கமான புன்னகையை சிந்தியவர், என்னை அழைத்துக் கொண்டு அருகிலிருந்த மெஸ்சுக்கு சென்றார். அன் லிமிடெட் உணவை வாங்கிக் கொடுத்தார். சாப்பிட்டு முடிக்கும் வரை, என்னை பேச விடவேயில்லை.

அதன் பிறகு சி.மோகனின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். என் மனதில் இருந்த சந்தேகத்தை தீர்த்து வைத்தார்.

அந்த சந்தேகம் என்னத் தெரியுமா? ‘மேஜிக்கல் ரியலிசம் என்றால் என்ன?’, ‘மார்க்யூஸின் ஒரு நூற்றாண்டுத் தனிமை நாவலை எப்படி புரிந்து கொள்வது?’

அதுதான் கவிஞர் சுகுமாரன்.

இதோ இந்த நிமிடம் கூட யாரேனும் ஓர் இளைஞனுக்கு இலக்கியம் தொடர்பான சந்தேகத்தை அவர் பொறுமையாக தீர்த்து வைத்தபடி இருப்பார் என்று உறுதியாக சொல்ல முடியும்.

சிநேகமான சிரிப்பும், விரல்களில் வழியும் அன்பும், எழுத்திலும் பேச்சிலும் தெறிக்காத ஆணவமும் அவரது அடையாளங்கள்.

ஆர்வக்கோளாறான சிறுவனின் சந்தேகத்தை தீர்த்து வைப்பதற்காக வேகாத வெயிலில் 3 மணிநேரங்கள் காத்திருக்கும் பொறுமையும் அவருக்கு உண்டு. ‘இந்த எழுத்தாளரை அவசியம் படிங்க’ என அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் குணமும் அவருக்கு உண்டு.

அதுதான் கவிஞர் சுகுமாரன்.

அவர் கோபப்பட்டு பார்த்ததில்லை. கடுமையாக சக கலைஞர்களை விமர்சித்து அவர் எழுதியதை படித்ததுமில்லை. எழுதியிருந்தால்தானே வாசிக்க?

எல்லா எழுத்தாளர்களிடமும் ஒரு நல்ல படைப்பு நிச்சயம் இருக்கும் என்பது அவர் நம்பிக்கை. அந்த விதைதான் இன்றளவும் என்னுள் விருட்சமாக வளர்ந்திருக்கிறது.

அதன் பிறகு வெவ்வேறு காலங்களில் அவரை வெவ்வேறு இடங்களில் சந்தித்திருக்கிறேன். ‘குங்குமம்’ வார இதழில் உதவி ஆசிரியராக, அதே இதழில் ஆசிரியராக, ‘சூர்யா’ தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியராக…

எல்லா இடங்களிலும் முதலில் பார்த்த சுகுமாரனாகவே இருந்தார், இருக்கிறார். அன்பும், பிரியமும், சிநேகமும் கூடியிருக்கிறதே தவிர குறையவேயில்லை.

ஒருவேளை நல்ல படைப்பாளியாக நான் வருவேன் என்று அவர் நம்பியிருக்கலாம். ஆனால், இன்று அது பொய்த்துவிட்டது. வணிகப் பத்திரிகைகளில் சிக்கி, வியாபார எழுத்தில் முத்து குளித்துக் கொண்டிருக்கிறேன்.

இந்த ஏமாற்றத்தை எப்போதும் அவர் வெளிப்படுத்தியதில்லை. அதே வாஞ்சையுடன் பார்க்கும்போதெல்லாம் ‘எப்படி இருக்கீங்க சிவராமன்?’ என்றுதான் கேட்கிறார்.

உள்ளூர அவருக்கு வருத்தம் இருக்குமோ?

இருக்காது என்றுதான் தோன்றுகிறது. ஏனெனில் அடிப்படையில் அவர் தோட்டக்காரர். விதைப்பதில் மட்டுமே கவனம் செலுத்துபவர். அனைத்து விதைகளுமே செடியாக, மரமாக வளர வேண்டும் என்பதுதான் அவரது கனவு, லட்சியம். அதற்காகத்தான் தன் நேரத்தை, உழைப்பை செலவிடுகிறார்.

ஆனால், எல்லா நேரங்களிலும் எல்லா விதைகளும் முளைப்பதில்லை. இந்த இயற்கையின் விதி அவருக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான் வளராத விதைகள் குறித்து அவர் வருத்தப்படுவதில்லை. பதிலாக அரும்பும் செடிகளை உரமிட்டு வளர்த்து மரமாக்குவதிலேயே தன் கவனத்தை செலுத்துகிறார்.

இதுதான் அவரது அகம். இதுவேதான் அவரது புறமும் கூட.

’மணிக்கொடி’யில் தொடங்கிய நவீன இலக்கியத்தின் விதை, இன்று தோப்பாக வளர்ந்திருக்கக் காரணம், வெறும் படைப்புகள் அல்ல.

அந்தப் படைப்புகளாகவே வாழும் மனிதர்களின் வாழ்க்கைதான் இந்த வளர்ச்சிக்கு காரணம்.

இதை தன் வாழும் முறையால் எனக்கு நிரூபித்த மகாகவி சுகுமாரனுக்கு Sukumaran Narayanan இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்.

<3 <3 <3

இப்பதிவு மீள்தான். ஆனால், கட்டை வேகும் வரை மீள விரும்பாத நினைவுப் பொக்கிஷம்…

புகைப்படம்: நன்றி செல்வம் ராமசாமி Selvam Ramaswamy

One Comment on “அதுதான் கவிஞர் சுகுமாரன்/கே.என்.சிவராமன்”

  1. கவிஞர் சுகுமாரன் சிறந்த மனிதாபிமானி. பண்பாளர். அவர் மீது எப்போதும் ஒரு இனம்புரியாத அன்பு எனக்கு உண்டு.

    உள்ளம் தொட்ட இந்தப் பதிவுக்கு நன்றி.
    அன்பர், கவிஞர் சுகுமாரனுக்கு நல்வாழ்த்துகள் .

Comments are closed.