வாழ்வெனும் மெகா சீரியல்/ஜெய விசாலாட்சி

20 வயதில் பட்டப்படிப்பு  முடித்து உடனே அரசாங்க வேலை கிடைத்த பெண்களின் ஆரோக்கியம் எப்படி உள்ளது.இருபதுகளில் எந்த சுமையும் தெரியவில்லை. காலையில் எழுந்து தோழிகளுடன் இணைந்து சமைத்து, மதிய உணவை டப்பாவில் எடுத்துச் சென்று, மாலை வீடு திரும்பிய பின் அரட்டை அடித்து தூங்கிய காலம்.பின்னர் 25 வயதில் திருமணம். அந்த சிறு வயதில் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர்களின் குணாதிசயங்களை புரிந்துகொண்டு அனுசரித்து பொறுமையாகவும் அமைதியாகவும் அன்பாகவும் பொறுப்பாகவும் வாழ்க்கையை ஓட்ட கற்றுக் கொண்டோம். கணவரையும் புகுந்த வீட்டாரை யும் முழுமையாக புரிந்துகொள்ள குறைந்தபட்சம் 5 வருடம் ஆகிறது. அதற்குள் இரண்டு குழந்தைகள். அதில் ஒன்று கண்டிப்பாக கணவரின் குடும்பத்தின் குணாதிசயங்களை சார்ந்து இருக்கும். அப்படியே அப்பனை கொண்டு இருக்கு. இந்த வசனம் எல்லா குடும்பத்திலும் பரிச்சயமானது. அதிலும் இரண்டுமே ஆண் குழந்தைகளை பெற்ற தாயின் நிலை  அப்பப்பா. குழந்தைகளை வீட்டில் தேடிக்கொண்டிருந்தால் அவை இரண்டும் பரணில் அமர்ந்திருக்கும். ஆண் குழந்தைகள் வாசல் கதவை திறந்து அமைதியாகச் சென்றால் குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லை என்று அர்த்தம். ஆஞ்சநேயர் போல் தாவிக் கொண்டு ஓடினால் குழந்தைகள் நலமாக உள்ளது என்று அர்த்தம்.

அதேபோல் மாடிப் படிக்கட்டில் இறங்கி வந்தால் குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லை என்று அர்த்தம். மாடியிலிருந்து சறுக்கு மரம் போல் இறங்கி வந்தால் குழந்தை நலமாக உள்ளது என்று அர்த்தம். அடிக்கடி  விழுந்து குழந்தை மருத்துவரிடம் தூக்கிக் கொண்டு ஓடி தையல் போடும் படலம். அப்பொழுது தாய்க்கும் மகனுக்கும் இடையில் பயங்கரமான ஒரு பாசமழை கண்ணீர்.  இவற்றின்

 நடுவில் வேலைக்கும் சரியான நேரத்தில் சென்று அலுவலக வேலைகளை சரிவர கவனிப்போம்.

இப்படியாக சமையல், அலுவலக வேலை, குழந்தைகளின் படிப்பு இப்படியாக போய்க் கொண்டிருக்கும் பெண்களின் வாழ்க்கை. நடுநடுவே  பதட்டம் கொடுக்கும் சூழ்நிலைகள் ஒன்று பெற்றோர்கள் ஆசிரியர்கள் சந்திப்பு மற்றொன்று வேலைக்காரி விடுப்பு அடிக்கடி எடுப்பது.

பெற்றோர்கள் ஆசிரியர்கள் சந்திப்பில்  இப்படி ஒரு வால் பிள்ளையை என் அனுபவத்தில் பார்த்ததில்லை என்பார் ஆசிரியர். வீட்டுக்கு வந்தவுடன் நாலு சாத்து சாத்தினால் தேவலாம் என்று இருக்கும். வேண்டாம் என்று பொறுமையுடன் அறிவுரை கூற வேண்டும். வாழ்நாள் சாதனையாளர் விருது பெண்களுக்கு கொடுக்கலாம்.

அடுத்தது வேலைக்காரி விடுப்பு எடுத்தாலும் அவளிடம் அடுத்த நாள் அன்பும் மரியாதையும் கலந்து பேச வேண்டும். கோபமாகப் பேசினால் நின்று விடுவாள். பிறகு சிரமம் அதிகமாகிவிடும். அதனால் வேலைக்காரியை குல தெய்வமாக  நினைப்பார்கள் பெண்கள்.

பிறகு ஒரு மாதிரியாக வயது நாற்பது ஐம்பதை தொடும். இத்தனை நாள் ஓடிய ஓட்டத்தின் விளைவு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், தைராய்டு, கொழுப்பு, கழுத்து , முதுகு, இடுப்பு வலி.

அனைத்து ரிப்போர்ட் வந்த பிறகு டாக்டர் போல உனக்கு mouth colostrol வாய்க்கொழுப்பு  அதிகம் என்று காமெடி செய்து சிலாகிப்பார் கணவர்.

டாக்டரிடம் ரிப்போர்ட்டை காண்பித்த பிறகு

MRI XRay இவற்றையெல்லாம் சுவற்றில் பதித்து வைத்து வெளிச்சத்தில் டாக்டர் மூக்குக் கண்ணாடி போட்டு க் கொண்டு மேலும் கீழுமாகவும் இடது வலமாகவும் MRI பார்க்கும்போது நமக்கே பயமாக இருக்கும்.நீங்கள் இத்தனை காலம் உட்கார்ந்து வேலை பார்த்ததால் sedentary lifestyle உங்கள் தண்டுவடம் சென்னை பஸ் நம்பர் போல் c1 c2 L1L2 இங்கெல்லாம் தண்டுவடம் குத்திக் கொண்டு இருக்கிறது வளைந்து இருக்கிறது அழுத்திக் கொண்டிருக்கிறது என்றெல்லாம் கூறுவார். இதற்கு ஏதாவது தீர்வு உண்டா என்று கேட்டால் அதற்கு பதில் இதற்கு தீர்வே கிடையாது யாராவது முழுமையான தீர்வு உண்டு என்று கூறினால் நம்பவே நம்பாதீர்கள். உடற்பயிற்சி செய்தால் ஓரளவு சரி செய்யலாம் என்றார் டாக்டர்.

பழைய வளைந்த பாத்திரங்களை பாத்திரக்காரர் ஒடுக்கு எடுப்பார்கள் அதுபோல தண்டுவடத்தை சரி செய்ய முடியுமா என்று கேட்டதற்கு டாக்டர் விழுந்து விழுந்து சிரிக்கிறார்.

பிறகு தியானம் மற்றும் உடற்பயிற்சி செய்ய அறிவுரை கூறி அனுப்பினார்.மறுநாள் முதல் வீட்டில் தியானம் உடற்பயிற்சி ஆரம்பித்துவிடுவோம். குக்கர் மூன்று விசில் வந்தால் நிறுத்தவும் என்று கணவரிடம் கூறிவிட்டு தனி அறையில் தியானம் உடற்பயிற்சி செய்வதற்காக சென்று கதவை தாழிட்டுக் கொண்டால் சிறிது நேரத்தில் கதவைத் தட்டி மூன்று விசில் வந்துவிட்டது அடுப்பை அணைக்கவா என்று கேட்கும் குடும்பத்தினரை வைத்துக்கொண்டு நான் எங்கு தியானம் செய்வது.இத்தனை உடல் பிரச்சனைகளை வைத்துக்கொண்டும் தைரியத்துடனும் தன்னம்பிக்கையுடனும் அந்தக் குடும்பத்தையும் இழுத்துச் செல்வோம். அலுவலகத்தையும் கவனிப்போம். ஓட ஓட ஓட தூரம் குறையல

2 Comments on “வாழ்வெனும் மெகா சீரியல்/ஜெய விசாலாட்சி”

Comments are closed.