
அந்தக் கவிஞன் கிராமத்தில்
பிறந்து வளர்ந்தவன்
காந்தியடிகளின் வார்த்தையில்
நம்பிக்கை வைத்திருந்தான்.
ஆனால் இப்போது கிராமங்களில்
காலையில் பால் கிடைப்பதில்லை.
நகரத் தெருக்களில்தான் ஆறாக ஓடுகிறது.
கீரைகளும் காய்கறிகளும்
வாகனங்களில் ஏறிப் போய்
வசதியாக நகரத்தில்
உலா வருகின்றன.
எப்போதாவது வரும்
கோடைமழை போல
மின்சாரம் வருகிறது.
வீதியெங்கும் நல்லதாய்
இரண்டு பள்ளி நகரத்தில்தான்.
கிராமத்துப் பிள்ளைகள்
வாகனங்களைக் கொண்டு
அங்குதான் படையெடுக்கிறார்கள்.
ஆறு ஏரி மணல்களெல்லாம்
மாட மாளிகைகளாய் ஓங்கி உயர்ந்து
அங்கே கர்வத்துடன் நின்று சிரிக்கின்றன.
தடுப்பார் இல்லாததால் நாள்தோறும் இங்குதான்
பாசக்கயிறு தாராளமாய் வீசப்படுகிறது.
இயந்திரங்களின் அரக்கத்தனத்தால்
கையும் காலும் உள்ளவர்கள்
மழைக்கு ஒதுங்கும் ஆடுகளாய் நகரத்தில்.
மரங்கொத்தியும் மீன்கொத்தியும்
கழுதைகளும் பூனைகளும்
பெயரளவில் வாழ்கின்றன படங்களில்
மக்களே இல்லாத கிராமங்களும்
கிராமங்களே இல்லாத மக்களும்
இந்தியா கிராமங்களில் வாழ்கிறதாம்.
எங்கே வாழ்கிறது?
